வில்லி பாரதம் - கண்ணன் அழுத இடம்
உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு.
அது எந்த இடம் தெரியுமா?
கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனை காத்து நின்றது. அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான்.
கண்ணனுக்கே தாங்கவில்லை. "உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான்.
அப்போதும் கர்ணன் "மறு பிறவி என்று ஒன்று வேண்டாம். அப்படி ஒரு வேளை பிறக்க நேர்ந்தால், யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா" என்று வேண்டினான்.
கண்ணன் அழுதே விட்டான். இப்படி ஒரு நல்லவனா என்று அவனால் தாங்க முடியவில்லை.
கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான். கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.
கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான்.
கண்ணன் மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான்
"நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் அடைவாய் " என்று வரம் தந்தான்.
பாடல்
மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு, ஐயன், மன மலர் உகந்து உகந்து, அவனைக்
கைத்தல மலரால் மார்புறத் தழுவி, கண் மலர்க் கருணை நீர் ஆட்டி,
'எத்தனை பிறவி எடுக்கினும், அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி,
முத்தியும் பெறுதி முடிவில்' என்று உரைத்தான்-மூவரும் ஒருவனாம் மூர்த்தி.
பொருள்
(click the following link to continue reading)
https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_18.html
மைத்துனன் = தனது அத்தை மகனான கர்ணன்
உரைத்த = சொல்லிய
வாய்மை = உண்மையான வார்த்தைகளைக்
கேட்டு = கேட்டு
ஐயன் = கண்ணன்
மன மலர் உகந்து உகந்து = மலர் போன்ற மனம் மகிழ்ந்து
அவனைக் = கர்ணனனை
கைத்தல மலரால் = மலர் போன்ற தன் கைகளால்
மார்புறத் தழுவி = மார்போடு தழுவிக் கொண்டு
கண் மலர்க் = மலர் போன்ற கண்களில் இருந்து
கருணை நீர் ஆட்டி = வழிந்த கருணை என்ற கண்ணீரால் அவனை நனைத்து
'எத்தனை பிறவி எடுக்கினும் = எத்தனை பிறவி எடுத்தாலும்
அவற்றுள் = அந்தப் பிறவிகளில்
ஈகையும் = தானம் செய்து
செல்வமும் எய்தி, = செல்வம் பெற்று
முத்தியும் பெறுதி முடிவில்' = முடிவில் முக்தியும் பெறுவாய்
என்று உரைத்தான் = என்று கூறினான்
மூவரும் ஒருவனாம் மூர்த்தி. = மூன்று பேரும் ஒன்றாய் நின்ற மூர்த்தி.
இறைவனைக் காண வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். எவ்வளவோ படிப்பார்கள்.
கர்ணன் இறைவனை காண வேண்டும் என்று தவம் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று மெனக்கெட வில்லை.
இறைவன் அவனைத் தேடி வந்தான். கேட்காதபோதே விஸ்வ ரூப தரிசனம் தந்தான். அவனை கட்டி அணைத்துக் கொண்டான். கண்ணீர் விட்டான். செல்வம், ஈகை, முக்தி என்று எல்லாம் கொடுத்தான்.
இறைவனை தேட வேண்டாம். அவன் நாம் இருக்கும் இடம் தேடி வருவான். கேட்காதது எல்லாம் தருவான். நம்மை கட்டி அணைத்துக் கொள்வான்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
கர்ணன் தானம் செய்தான், செய் நன்றி மறவாமல் இருந்தான்.
எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவுதான்.
உலகளந்த பெருமாள், அவனிடம் கை நீட்டி நின்றார்.
ஈகை எவ்வளவு பெரிய விஷயம் !
No comments:
Post a Comment