Pages

Saturday, September 5, 2020

நாலடியார் - குழவி யிடத்தே துறந்தார்

நாலடியார் - குழவி யிடத்தே துறந்தார்


நம்மிடம் பணம் இருந்தால் என்ன செய்யலாம்?

பணத்தை நாம் விரும்பிய விதத்தில் செலவழித்து இன்பம் அடையலாம். நல்ல உடை வாங்கலாம், சிறப்பான உணவை உண்டு மகிழலாம்,  சினிமா, ட்ராமா, உல்லாச பயணம் என்று செலவழிக்கலாம்.

அல்லது

அதை சேமித்து வைக்கலாம், கார், வீடு, நிலம், நகை என்று முதலீடு செய்யலாம்.

அவரவர் விருப்பம்.

பணம் மட்டும் அல்ல, நம் நேரமும் அப்படியே. நம்மிடம் இருக்கும் நேரத்தை எப்படி செலவழிக்கலாம் என்று நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

whatsapp , facebook , டிவி, அரட்டை என்று செலவழிக்கலாம்.

அல்லது,

அறிவை வளர்க்க, உடல் ஆரோக்கியத்தை வளர்க்க , நமக்கும் , பிறருக்கும் பயன்படும் வகையில் செலவழிக்கலாம்.

இது  நமக்குத் தெரியும். இருந்தும், நல்ல பெரிய விஷயங்களை செய்யாமல் சில்லறை  விஷயங்களில் நம் நேரத்தை செலவழிக்கிறோம்.

ஏன்?

அப்புறம் செய்து கொள்ளலாம். என்ன அவசரம். இப்ப தலைக்கு மேல வேற விஷயங்கள் இருக்கின்றன.  நல்லதை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் கொள்ளலாம்  என்று நினைக்கிறோம்.

அந்த "அப்புறம்" என்பது வருவதே இல்லை.

நேரம் ஓடி விடுகிறது.  ஐயோ, நேரத்தை வீணடித்து விட்டேனே என்று நாம் வருந்த நேரலாம்.

பாடல்


நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் ; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.


பொருள்

(click below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_5.html



நரைவரும் என்றெண்ணி  = நரை வரும் என்று எண்ணி. அதாவது முதுமை வரும் என்று நினைத்து

நல்லறி வாளர் = நல்ல அறிவு உள்ளவர்கள்

குழவி யிடத்தே = சிறு வயதிலேயே

துறந்தார் = பயன் தராதவற்றை துறந்தார்

புரைதீரா = குற்றம் அற்ற

மன்னா = மன்னவனே

இளமை மகிழ்ந்தாரே = இளமை காலத்தில், மகிழ்ந்து , காலத்தை வீணே போக்கியவர்கள்

கோல் ஊன்றி = கோல் ஊன்றி

இன்னாங் கெழுந்திருப் பார். = துன்பத்தில் இருந்து எழுந்திருப்பார்


இளமையும், ஆரோக்கியமும் எப்போதும் இருக்காது. இருக்கும் போதே அதை நல்ல வழியில் செலவழிக்க வேண்டும்.




1 comment:

  1. ஒப்புக்கொள்கிறேன்.ஏதோ லக்ஷத்தில் ஐம்பதோ அல்லது நூறு பேரை தவிர பெரும்பாலோர்க்கு சாதாரண விஷயங்களில்தான் ஈர்ப்பு உள்ளது.சிறு வயதில் மனைவி மக்களோடு உல்லாசமாக நேரம் சிலவழிப்பதையே மனம் நாடுகிறது.நல்ல எண்ணம் தோன்ற பூர்வ ஜென்ம புண்ணியம் தேவையோ என்னவோ?

    ReplyDelete