திருக்குறள் - இன்சொல் - முகனமர்ந்து இன்சொல்
நம்மிடம் ஒரு உதவி வேண்டி ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு கொஞ்சம் பொருள் உதவி செய்வது பெரியதா அல்லது அவருடன் சிரித்த முகத்தோடு இனிமையாக பேசி அனுப்புவது பெரியதா?
பொருள் கொடுப்பதுதான் கடினம் என்று நாம் நினைப்போம். ஆனால், வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை. இன்முகத்தோடு இனிய சொல் பேசுவதுதான் பெரிய விஷயம் என்று கூறுகிறார்.
பாடல்
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனஅமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
பொருள்
(click the following link to continue reading)
https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post.html
அகன் = அகம், உள்ளம், மனம்
அமர்ந்து = விரும்பி
ஈதலின் = கொடுத்தலை விட
நன்றே = நல்லது
முகன = முகம்
அமர்ந்து = மலர்ந்து
இன்சொலன் = இனிய சொல்லை சொல்பவன்
ஆகப் = ஆகும்படி
பெறின் = இருக்கப் பெற்றால்
அது சரி, வள்ளுவர் சொல்லிவிட்டால் அது சரியாகி விடுமா? நாலு காசு கொடுக்குறது எப்படி, சும்மா சிரிச்சு பேசி அனுப்பி விடுவது எப்படி ? சும்மா, ஏதோ இன் சொல் அப்படினு ஒரு அதிகாரம் வைத்து விட்டார். எனவே, இன்சொல் சிறந்து என்று சொலிக்கிறார். இதை எல்லாம் எப்படி நம்புவது? நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா?
வள்ளுவர் அப்படியெல்லாம் சும்மா சொல்பவர் அல்ல.
சிந்திப்போம்.
முதலாவது, இன்சொல் என்றால் ஏதோ பல்கலைக் காட்டி சிரிக்க சிரிக்க பேசுவது அல்ல. இன்சொல் என்றால் என்ன என்று முந்தைய குறளில் பார்த்தோம். இன்சொல் என்றால் ஈரம் அளவி ( ,அன்புடன், கருணையுடன்), படிறு இன்றி (குற்றம் இல்லாமல்), செம்பொருள் (அறத்துடன் கூடிய உயர்ந்த சொற்கள்). இதைச் சொல்ல முடியுமா நம்மால்?
அறம் வேண்டாம், குற்றம் கூட இருந்து விட்டுப் போகட்டும். அன்போடு பேச முடியுமா?
நம்மிடம் உதவி என்று ஒருவன் வந்து நின்றால் மனதுக்குள் என்னவெல்லாம் ஓடுகிறது?
"எப்படி ஆடுனான் ...வேணும் நல்லா...இப்ப பாரு உதவின்னு வந்து நிக்கிறான்"
"சொன்னா கேட்டாத்தானே...எல்லாம் எனக்குத் தெரியும்னு அகம்பாவம் புடிச்சு அலையறது"
"எனக்கு அப்பவே தெரியும்...இது ஒரு நாள் என் வாசல்ல வந்து நிக்கும்னு"
"இவனுக்கெல்லாம் பட்டாத்தான் தெரியும் "
என்று மனதுக்குள் எவ்வளவோ ஓடும்.
இதில் அன்பு எங்கே இருக்கிறது.
முன்பு என்ன நடந்து இருந்தாலும், அவற்றை மறந்து அன்போடு பேச வேண்டும்.
இரண்டாவது, சிலர் நல்ல விஷயத்தைக் கூட கடுமையாகச் சொல்லுவார்கள்.
"நல்லா படிடா...படிச்சு பெரிய ஆளாகி, எல்லாருக்கும் நல்லா உதவி செய்..அது உன்னால முடியும் " என்று சொல்வதை விடுத்து
"படிக்கலேனா மாடு மேய்க்கத்தான் போற...நீ பிச்சை எடுக்கத்தான் போற...தெருத் தெருவா அலையப் போற" என்று சொல்லுவார்கள்.
அர்த்தம் ஒன்றுதான். இரண்டுக்குப் பின்னாலும் பிள்ளை மேல் உள்ள அன்பு இருக்கிறது. ஆனால், முகம் மலர்ந்து இனிமையாக சொல்லவில்லை. அன்பு இருந்தால் மட்டும் போதாது, அதை அழகாக வெளிப்படுத்தவும் தெரிய வேண்டும்.
மூன்றாவது, பல பேர் உதவி செய்யும் போது , உதவி பெறுபவனை ஏதோ ஒரு விதத்தில் அவமானப் படுத்திதான் உதவி செய்கிறார்கள். பெறுபவன் மனம் வருந்தும்படி செய்கிறார்கள். அதை விட, அன்போடு, இனிமையாக பேசி அனுப்புவது நல்லது.
நான்காவது, பொருள் பெறுபவன் அதை வைத்து என்ன செய்யப்போகிறான் என்பது முக்கியம். சீட்டு விளையாடனும், தண்ணி அடிக்கணும், ஒரு ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்றால், அன்போடு கொடுத்து உதவலாமா அல்லது அப்படி செய்வது தவறு என்று அன்போடு, இதமாக சொல்லி மறுத்து அனுப்புவது நல்லதா? இன்சொல்லில் அறம் இருக்கிறது. (அன்பு, குற்றம் அற்ற , அறச்சொல் தான் இன்சொல் எனப்படுவது).
ஐந்தாவது, இன்சொல் சொல்வது மிகக் கடினம். அதனால் தான் வள்ளுவர் சொல்கிறார் "பெறின்". செய்ய முடிஞ்சால் என்று அர்த்தம். ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் படித்தால் அந்த பரீட்சை பாஸ் பண்ணி விடலாம் என்றால், 10 மணி நேரம் படிப்பது என்பது முடியாது என்று அர்த்தம்.
நாம் வார்த்தைகளின் மதிப்பு தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால் தான் அதை விரயம் பண்ணிக் கொண்டு இருக்கிறோம். மதிப்பு தெரிந்தால் அதை அனாவசியமாக விரயம் பண்ணுவோமா?
குழந்தை கையில் உள்ள பொற் கிண்ணம் போல என்று மணிவாசகர் கூறியது போல, மதிப்பு தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இனிய சொல் , பொருளை விட உயர்ந்தது.
இன்சொல் பேசிப் பழகுவோம்.
Superb
ReplyDeleteமனசில் படியும் படியான அழகான விளக்கம்.
ReplyDeleteசூப்பர் அறுமை சார்
ReplyDelete