கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறப்பு மாறினை
பெரிய காவியங்களை படிக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒரு முக்கிய காரணம், அதில் உள்ள முக்கிய கதா பாத்திரங்கள் எப்படி மாறுகின்றன என்று அறிந்து கொள்வது. எது அந்த கதா பாத்திரங்களை நடத்துகிறது, எது அவர்களை மாற்றுகிறது, அவர்கள் எப்படி மாறுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.
சில கதா பாத்திரங்கள், மாறவே மாறாது. உதாரணமாக, இராவணன். யார் என்ன சொன்னாலும், நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று ஒரு பிடிவாதம்.
இராமனைப் பார்த்தால், வசிட்டர் சொன்னார் பெண்ணைக் கொல்லக் கூடாது என்று . விஸ்வாமித்ரர் கூறினார் தாடகை என்ற பெண்ணைக் கொல் என்று. இராமன் பிடிவாதம் பிடிக்கவில்லை. விச்வாமிதரன் கூறினால் அது சரியாக இருக்கும் என்று நினைத்து தான் கொண்ட கொள்கையை மாற்றுகிறான்.
வாலியை மறைந்து இருந்து கொன்றான். இராவணனிடம், இன்று போய் போருக்கு நாளை வா என்றான்.
ஆயிரம் படித்து இருந்தாலும், மனைவியை மகிழ்விக்க, பொய் என்று தெரிந்தும் பொன் மான் பின் போனான்.
அறம் பிறழ்வதை கண்ட வீடணன் மாறுகிறான். கும்ப கர்ணன் மாறவில்லை.
விதிக்கும் விதி காணும் என் விற் தொழில் காண்டி என்று புறப்பட்ட இலக்குவன், "யாரே விதியை வெல்ல வல்லார்" என்று மண்டியிடுகிறான்.
காலம், அதன் ஓட்டத்தில் எல்லோரையும் ஒரு புரட்டு புரட்டிவிட்டுப் போகிறது.
என்று சரி என்று தோன்றுவது நாளை தவறென்று தோன்றும். இன்று தவறு என்று தோன்றுவது நாளை சரி என்று தோன்றினாலும் தோன்றலாம்.
யார் அறிவார்?
இதுதான் சரி என்று அடம் பிடிப்பது எவ்வளவு சரி?
நான் எது சரி, எது தவறு என்று சொல்ல வரவில்லை. நாம் கவனிக்க வேண்டும். எது மக்களை மாற்றுகிறது என்று. எவ்வளவு தூரம் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்று.
சீதையை விட்டு விடு என்று கூறிய வீடணன் மேல் கோபம் கொண்டு இராவணன் வசை மாறி பொழிகிறான்.
"நீ ஒரு சரியான பயந்தாங்கொள்ளி . உன்னால் யுத்தம் செய்ய முடியாது. அதுக்கு நீ ஆள் இல்லை. மனிதர்களை தஞ்சம் அடைந்து விட்டாய். அவர்களை சார்ந்து வாழ நினைக்கிறாய். அரக்க குலத்தில் பிறந்த நீ குலம் மாறிவிட்டாய். உன்னுடன் வாழ்வது நஞ்சு நிறைந்த பாம்புடன் வாழ்வது போலாகும்" என்று கோபத்தில் குமுறுகிறான் இராவணன்.
பாடல்
https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_19.html
(please click the link above to continue reading)
அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை
தஞ்சு என மனிதர் பால் வைத்த சார்பினை;
வஞ்சனை மனத்தினை; பிறப்பு மாற்றினை
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ?
பொருள்
அஞ்சினை = அச்சம் கொண்டு இருக்கிறாய்
ஆதலின் = எனவே
அமர்க்கும் ஆள் அலை = போர்க்களத்தில் சென்று போரிடும் வீரம் உன்னிடம் இல்லை.
தஞ்சு என = தஞ்சம் என்று
மனிதர் பால் வைத்த சார்பினை; = மனிதர்களை சார்ந்து நிற்கிறாய்
வஞ்சனை மனத்தினை = வஞ்ச மனம் கொண்டவன் நீ
பிறப்பு மாற்றினை = உன் குலத்துக்கு ஏற்ற குணம் உன்னிடம் இல்லை
நஞ்சினை = நஞ்சு உள்ள பாம்பினை
உடன் கொடு வாழ்தல் நன்மையோ? = உடன் வைத்துக் கொண்டு வாழ்வது என்ன நன்மை தரும்? ஒரு நாள் அல்லது மற்றொரு நாள் அது கட்டாயம் விஷத்தை கக்கியே தீரும். அது போலத்தான் நீயும்
வீடணன் அனைத்தையம் கேட்டுக் கொண்டு இருக்கிறான்.
அவனுள் மாற்றம் நிகழ்ந்தது.
அறிவு வேலை செய்யும் போது மாற்றம் நிகழும். அறிவு உறங்கப் போய் விட்டால், ஒரு மாற்றமும் இல்லை.
சிலர் இருக்கிறார்கள். எவ்வளவு சொன்னாலும், எவ்வளவு படித்தாலும், அறிவில் ஒரு மாற்றமும் இருக்காது. பத்து வயதில் இருந்த அறிவு தான், ஐம்பது வயதிலும்.
No comments:
Post a Comment