Pages

Tuesday, October 20, 2020

திருக்குறள் - எல்லாம் மழை

 திருக்குறள் - எல்லாம் மழை 

வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் முதல் குறளில் மழையை அமுதம் என்று கூறினார். 

அடுத்த குறள். 

சரியான tongue twister 


பாடல் 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

 பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_20.html

(please click the above link to continue reading)


துப்பார்க்கு = துய்ப்பவர்களுக்கு, அதாவது அனுபவிப்பவர்களுக்கு.

துப்பாய = வலிமை, சத்து ஆகி. 

துப்பாக்கி = துப்பாக்கி என்றால் ஏதோ சுடுவதற்கு பயன்படும் AK 47 போன்ற பொருள் அல்ல. துப்பு + ஆக்கி. துய்க்கக் கூடிய உணவாகி 

துப்பார்க்கு = மீண்டும் துப்பார்க்கு என்கிறார். அதாவது, துய்ப்பவர்களுக்கு 

துப்பாய தூஉம் = துய்க்கும் படியாக இருப்பதும் 

மழை = மழை 

ஒண்ணும் புரியலைல?

ரொம்ப எளிமையானது. 


அதாவது, மழை உணவை உண்டாக்கவும் பயன்படுகிறது, உணவாகவும் இருக்கிறது. 


எப்படி என்று பார்ப்போம். 

அரிசி, கோதுமை, காய் கறிகள், கனிகள் எல்லாம் வளர வேண்டும் என்றால், மழை வேண்டும். 

மழை இல்லாவிட்டால் என்ன, நாங்க நிலத்தடி நீரை பயன் படுத்தி விவசாயம் செய்வோமே  என்று நினைக்கலாம். 

செய்யலாம். ஆனால், ரொம்ப நாளைக்கு செய்ய முடியாது. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே போய் கொண்டே இருக்கும்.  நாளடைவில் தீர்ந்து போகும். 

பயிர் இல்லாவிட்டால் என்ன, நாங்கள் அசைவ உணவு சாப்பிட்டுக் கொள்வோம் என்று நினைக்கலாம்.  அசைவ உணவு வேண்டும் என்றால் அதற்கு வேண்டிய விலங்குகள் உயிர் வாழ வேண்டும். அவை உயிர் வாழ காய் கறிகள், நெல், புல் எல்லாம் வேண்டும். மழை இல்லாவிட்டால், அந்த விலங்குகளும்  இறந்து போகும். 


நமக்கு உணவு வேண்டும் என்றால், உணவை செய்ய வேண்டும் என்றால் மழை வேண்டும். 

ஒரு கவளம் உணவை கையில் எடுக்கும் போது, எங்கோ, எப்போதோ பெய்த மழை  நினைவு வர வேண்டும். 

உண்பவர்களுக்கு உணவை உண்டாக்க பயன் படுகிறது. 

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி.

உண்பவர்களுக்கு வலிமை தரும் உணவாக்கி. 


அடுத்தது, மழை உணவை உண்டாக்க மட்டும் அல்ல, தானே உணவாகவும் இருக்கிறது. 

அது எப்படி?

என்னதான் உயர்ந்த உணவாக இருந்தாலும், தண்ணி இல்லாமல் விருந்தை உண்ண முடியுமா?  

உடம்புக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அதே போல் நீரும் முக்கியம். ரொம்ப தாகம் எடுக்கும் போது, இரண்டு இட்லி கொஞ்சம் கட்டி சட்னி வைத்து சாப்பிட்டால்  தாகம் அடங்குமா?

என்ன உணவு உண்டாலும், எவ்வளவு சிறப்பான, வலிமை மிக்க உணவு உண்டாலும், நீரும் வேண்டும். 

நீரும் ஒரு உணவு போன்றது.

நமது நாக்கு எப்போதும் ஈரமாக இருக்கும். நாக்கில் நீர் இல்லை என்றால் உணவை உண்ண முடியாது. சுவை தெரியாது.உமிழ் நீர் சுரக்காது. உணவு தொண்டை வழியே   உள்ளே போகாது. 

உணவை உண்ண , உண்ட உணவை ஜீரணம் செய்ய நீர் வேண்டும். 


இவை அன்றி, நீர் உணவாகவும் இருக்கும். 

துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை

துய்ப்பவர்களுக்கு உணவு ஆவதும் மழை. 

துய்ப்பவர்களுக்கு உணவை உண்டாக்குவது, உணவாகவே இருப்பதும் , எல்லாம் மழை. 

உணவு இல்லாமல் ஒரு வாரம் கூட இருந்து விடலாம். நீர் இல்லாமல் இருக்க முடியுமா? 

துப்பார்க்கு, துப்பு ஆய துப்பு ஆக்கி 

துப்பார்க்கு, துப்பு ஆவதும் மழை. 

என்று வாசித்தால் எளிதாக புரியும். 

நல்லா இருக்குல ?






1 comment: