Pages

Monday, October 26, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - என் பிழை பொறுத்தருளுவாய்

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - என் பிழை பொறுத்தருளுவாய்


வீடணன் கூறிய அற உரைகளை ஏற்க மறுத்து அவனையும் விரட்டி விடுகிறான் இராவணனின். 

போவதற்கு முன், கடைசியாக வீடணன் கூறுகிறான் 


"என் தந்தை போன்றவனே. உனக்கு நன்மை தரக்கூடிய நல்லவை பலவும் சொன்னேன். நீ கேட்கவில்லை. என் மேல் ஏதாவது பிழை இருந்தால் பொறுத்து அருள்வாய்" 


என்று கூறி விட்டு, அந்த ஊரை விட்டு விலகினான். 


பாடல் 

'எத்துணை வகையினும் உறுதி எய்தின,

ஒத்தன, உணர்த்தினேன்; உணரகிற்றிலை;

அத்த ! என் பிழை பொறுத்தருளுவாய்' என,

உத்தமன் அந் நகர் ஒழியப் போயினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_26.html

Pl click the above link to continue reading

'எத்துணை வகையினும் = பல வகைகளில் 

உறுதி எய்தின, = உனக்கு நல்லது தருவனவற்றை 

ஒத்தன, = அறத்துக்கு ஒத்தவற்றை 

உணர்த்தினேன் = சொன்னேன் 

உணரகிற்றிலை; = நீ உணரவில்லை 

அத்த ! = என் தந்தை போன்றவனே 

என் பிழை பொறுத்தருளுவாய்' என, = என் பிழை எதுவும் இருந்தால் பொறுத்து அருள்வாய் என்று கூறி விட்டு 


உத்தமன்  = உத்தமனான வீடணன் 

அந் நகர் ஒழியப் போயினான். = அந்த ஊரை விட்டு விலகிப் போனான் 


இதில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது என்ன என்றால், 


வீடணன் திட்டமிட்டு இராவணனை விட்டு விலகினான். இராவணனுக்கு துரோகம்  செய்தான் என்று ஒரு குற்றச்சாட்டு வீடணன் மேல் உண்டு. 

காப்பியத்தை ஊன்றி படித்தால் தெரியும், அவன் இராவணனை விட்டு போக திட்டம் தீட்ட வில்லை. 


அவனை இராவணன் விரட்டி விட்டான் என்பதே உண்மை. 

இராமாயணம் போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது , நான் மீண்டும் மீண்டும் சொல்வது என்ன என்றால், நாம் நம் தகுதியை அந்த நூலின் உயரத்துக்கு  உயர்த்த முயற்சி செய்ய வேண்டுமே அல்லாமல், நம் நிலைக்கு நூலை கீழே கொண்டு வரக் கூடாது. 

அரை குறையாக படித்து விட்டு, வீடணன் திட்டம் போட்டே இராவணனை கவிழ்த்து விட்டான், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தான், செஞ்சோற்று கடனை மறந்தான்  என்றெல்லாம் வாய்க்கு வந்தமாதிரி  பேசிக் கொண்டு திரிகிறார்கள். 


வீடணனை தன்னை விட்டு  விலக்கியது இராவணனே.


வீடணன் செய்தது சரியா தவறா என்பதல்ல வாதம். வீடணன் திட்டமிட்டு இராவணனை வஞ்சனை செய்யவில்லை.  


"என் முன் நின்றால் கொன்று விடுவேன்..போய் விடு" என்று இராவணன் வீடணனை  விலக்கினான். 


அது தான் நடந்தது. 



1 comment:

  1. இதுவரை எழுதிய பல BLOG களின் மூலம், விபீடணன் எவ்வளவோ முயற்சி செய்த பின்பே, இராவணன் விரட்டிய பின்பே இராமனிடம் போனான் என்பது ஊன்றியாகிவிட்டது.

    இதைப் படிக்கும்போது, கர்ணனைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை. அவனும் துரியோதனனுக்கு அறிவுரை பல சொல்லி விட்டு, அதற்கப்புறம் பாண்டவர் பக்கம் போயிருக்கலாம். ஏன் அப்படிச் செய்யவில்லை?

    விபீடணன், கர்ணன் - இந்த இருவரில் உயர்ந்தவர் யார்?

    ReplyDelete