பெரிய புராணம் - கேளாத ஒலி
தன்னை பார்க்க விரும்புபவர்கள், அரண்மனைக்கு வெளியே இருக்கும் ஆராய்ச்சி மணியை அடிக்கலாம் என்று மனு நீதி சோழன் அறிவித்து இருந்தான்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை அந்த மணி அடித்து இருக்கும்?
இப்ப நம்ம ஊர்ல அப்படி ஒரு மணி கட்டி இருந்தால், விடாமல் அடித்துக் கொண்டே இருக்கும் அல்லவா?
மனு நீதி சோழன் காலத்தில் , அந்த மணி அடிக்கப் படவே இல்லையாம். அந்த மணியின் சத்தம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அடித்தால் தானே?
யாருக்கும் எந்த குறையும் இல்லை. இதுவரை.
இன்று முதன் முதலாக அந்த மணி அடிக்கிறது.
எல்லோருக்கும் தூக்கி வாரிப் போடுகிறது.
"இது என்ன நம் மேல் பழி போடும் சத்தமா? நாம் செய்த பாவத்தின் எதிரொலியா? இளவரசனின் உயிரை எடுக்க வரும் எமனின் எருமையின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் ஒலியா? " என்று அனைவரும் திடுகிடு கிரார்கள்.
பாடல்
பழிப்பறை முழக்கோ? வார்க்கும் பாவத்தி னொலியோ? வேந்தன்
வழித்திரு மைந்த னாவி கொளவரு மறலி யூர்திக்
கழுத்தணி மணியி னார்ப்போ? வென்னத்தன் கடைமுன் கேளாத்
தெழித்தெழு மோசை மன்னன் செவிப்புலம் புக்க போது.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_8.html
click the above link to continue reading
பழிப்பறை முழக்கோ? = நாம் செய்த பழியினை அறிவிக்கும் முழக்கமோ?
வார்க்கும் பாவத்தி னொலியோ? = செய்த பாவத்தின் எதிரொலியோ?
வேந்தன் = அரசன்
வழித் = வழியில் வந்த
திரு மைந்த னாவி = திரு + மைந்தன் + ஆவி . இளவரசனின் ஆவியை
கொளவரு = கொண்டு செல்ல வாவரும்
மறலி = எமன்
யூர்திக் = ஊர்த்தி, வாகனம், எருமை
கழுத்தணி = கழுத்தில் அணிந்த
மணியி னார்ப்போ? = மணியின் ஆர்போ , மணியின் சத்தமோ
வென்னத் = என்று
தன் கடைமுன் கேளாத் = தன்னுடைய வாசலின் முன்பு எப்போதும் கேளாத
தெழித்தெழு மோசை = பெரிதாக எழுந்த ஓசையை
மன்னன் செவிப்புலம் புக்க போது. = மன்னனின் காதில் விழுந்த போது
எத்தனை மனு கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்தக் காலம் எங்கே, குறை சொல்ல ஒருவன் இருக்கிறான் என்று தெரிந்ததும் துடித்த அரசாங்கம் இருந்த காலம் எங்கே.
அப்படியும் அரசு நடத்த முடியும்.
அரசு மட்டும் அல்ல, எந்த நிறுவனத்தையும் அப்படி நடத்த வேண்டும்.
அருமையான பாடல். நாமும் அந்த ஆராய்ச்சி மணி அடிக்காத காலத்தில் பிறந்திருக்க கூடாதா என ஒரு ஆதங்கம் எழாமல் இல்லை.அடித்தாலும் உடனேயே கேட்க அரசனும் இருந்த காலம்
ReplyDeleteஅந்தக்காலம் அது வசந்தகாலம்
ReplyDelete