கம்ப இராமாயணம் - இல்லை ஆயினன் உன் மகன்
இந்திரஜித்து போர்க் களத்தில் இறந்து போகிறான். அதை இராவணனிடம் சொல்ல வேண்டும்.
உன் பிள்ளை இறந்து விட்டான் என்று தக்கபனிடம் எப்படிச் சொல்வது? அதுவம் இராவணன் போன்ற பேரரசனிடம்? சொன்னவன் தலையை சீவி விட மாட்டானா?
அது ஒரு புறம் இருக்கட்டும்.
சில நாள் நம் பிள்ளை வீடு வந்து சேர நேரம் ஆனால், நமக்கு ஒரு லேசான பதற்றம் வரும் தானே.
அவன் நண்பர்கள் வீட்டுக்கு எல்லாம் தொடர்பு கொண்டு அவன் அங்க இருக்கானா, அங்க வந்தானா என்று கேட்போம் அல்லவா?
அவன் அங்கு இல்லை என்றால், அவன் நண்பர்கள் என்ன சொல்லுவார்கள் ?
"அவன் இங்க இல்லையே" என்று சொல்லுவார்கள் அல்லவா?
ஒரு இடத்தில் இல்லாவிட்டால், இன்னொரு இடத்தில் இருக்கலாம்.
இந்திரஜித்து இறந்ததை கம்பன் சொல்லுவதைக் கேளுங்கள்.
"இன்று இல்லை"
என்று சொல்கிறான்.
நேற்று இருந்தான், இன்று இல்லை.
போர்க்களத்தில் இல்லை என்றால், அரண்மனையில் இருக்கலாம், அரண்மனையில் இல்லை என்றால் கோவிலில் இருக்கலாம்...எங்காவது இருக்கலாம், தேடுங்கள் என்று சொல்லலாம்.
"இன்று இல்லை" என்றால் என்ன செய்வது.
அவலத்தின் உச்சம்.
அதைச் சொல்ல, அந்த படை வீரர்கள் நடுநடுங்கி வருகிறார்கள். வந்து சொல்கிறார்கள்.
பாடல்
பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்
நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார்
‘இல்லை ஆயினன்; உன்மகன் இன்று ‘எனச்
சொல்லினார் பயம் சுற்றத் துளங்குவார்.
பல்லும் = பல்லு
வாயும் = வாய்
மனமும் = மனம்
தம் பாதமும் = அவர்கள் கால்கள்
நல் உயிர்ப் = அவர்களின் உயிர்
பொறையோடு = கனமாக உணர்ந்து
நடுங்குவார் = நடுங்கினார்கள்
‘இல்லை ஆயினன்; = இல்லை என்று ஆகி விட்டான்
உன்மகன் இன்று = உன் மகன் என்று
‘எனச் சொல்லினார் = என்று சொல்லினார்கள்
பயம் சுற்றத் = பயம் அவர்களை சூழ்ந்து கொள்ள
துளங்குவார். = நடுங்கினார்கள்
பல்லு, காலு, மனம், உயிர் எல்லாம் தந்தி அடிக்கிறது.
"இன்று உன் மகன் இல்லை" என்று சொனார்கள்.
இந்திரஜித்து இறந்த பின் மண்டோதரியும் இராவணனும் அழுத அழுகை இருக்கிறதே, கல் மனதையும் கரைக்கும்.
சீதை மேல் கொண்ட காமம் மகனின் மறைவோடு இராவணனுக்கு போய் விட்டது.
இவ்வளவு பெரிய வலி வேண்டி இருந்திருக்கிறது, அந்தக் காமம் போக. அப்படி என்றால் அது எவ்வளவு வலிமையாக இருந்திருக்கும் ?
"இன்று இல்லை" - எப்படிச் சொன்னார்கள் என்பதுவும், எப்படி நடுங்கினார்கள் என்பதுவும் மிக நன்றாக எழுதியிருக்கிறார்!
ReplyDelete