Pages

Tuesday, December 29, 2020

திருக்குறள் - நாள் என்ற வாள்

 திருக்குறள் - நாள் என்ற வாள் 


கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் எதுவும் நமக்கு அவை நடப்பதாகவே தெரிவதில்லை. திடீரென்று ஒரு நாள் எல்லாம் மாறிப் போய் இருக்கும்.


நாளும் எடை கூடிக் கொண்டே போகும். ஒரு நாள் 10 கிராம், 15 கிராம் என்று கூடும் போது தெரியாது. ஒரு மாதத்தில் 300 கிராம், மூன்று மாதத்தில் கிட்டத்த்தட்ட ஒரு கிலோ, ஒரு வருடத்தில் 4 கிலோ என்று கூடிய பின் தான் தெரியும், அடடா, உடல் எடை கூடி விட்டதே என்று. 


இனிப்பு, எண்ணெய் பலகாரம் எல்லாம் சாப்பிடும் போது தெரியாது. இன்னிக்கு ஒரு நாள் மட்டும், இந்த ஒரு ஐஸ் க்ரீம் மட்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போய் , பின் பெரிதாகி விடும். 


அது போல, 


இந்த காலம் ஒன்று இருக்கிறதே, அது கூறு படாதது. நாம், நம் வசதிக்காக  நாள், கிழமை, வாரம், மாதம், வருடம், மணி, நிமிடம், நொடி என்று பெயர் வைத்து  இருக்கிறோம். காலத்தில் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. இந்தப் பிரிவுகள் இல்லாத காலத்தை  நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். 


நீங்கள் பிறந்தது முதல் இறப்பது வரை உள்ள காலத்தை ஒரு அலகு (unit ) என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு பெயர் வைத்துக் கொள்ளலாம். 


இந்த பூமியில் ஒரு நாள் என்பதும், சனி கிரகத்தில் ஒரு நாள் என்பதும் ஒன்று அல்ல. 


இந்த காலம் என்பது ஒரு நீண்ட துணி போல இருக்கிறது. தொடக்கமும் முடிவும் இல்லை. 


நாம் பிரித்து வைத்துக் கொண்டு  பிறந்த நாள், திருமண நாள், இத்தனை நாள் வாழ்ந்தோம், இந்த உடம்பு வலி சரியாக இத்தனை நாள் ஆகும் என்றெல்லாம் கணக்குப் போடுகிறோம்.


போடலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. 


ஆனால், 


வள்ளுவர் சொல்கிறார்,


இந்த காலம் இருக்கிறதே அது ஒரு கூரிய கத்தி போன்றது. அந்த கத்தியின் கூரான பக்கத்தில்   நம் உயிர் இருக்கிறது. நமக்குத் தெரியாமலேயே அந்த காலம் என்ற  வாள் நம் உயிரை நாளும் வெட்டிக் கொண்டே இருக்கிறது. 


ஒவ்வொரு நாளும், அந்த வாள் கொஞ்சம் வெட்டுகிறது. மிக மிக சிறிய வெட்டு என்பதால்  நமக்குத் தெரிவதில்லை. 


கொஞ்சம் நரைக்கும்,  கண்ணாடி போட வேண்டி வரும்,  அங்கொன்றும், இங்கொன்றும்  பல் ஆடும், தோல் சற்றே சுருங்கும். சட்டென்று சிலவை ஞாபகம் வராது. 


நாம் கண்டு கொள்ளுவதில்லை. 


இந்த வாள் , உயிரை அரிந்து கொண்டே இருக்கிறது. 


ஒரு நாள் மொத்தமாக அரிந்து போட்டு விடும். 


ஒவ்வொரு நாளும் அது அரிவதை உணர்பவர்கள் வெகு சிலரே. மொத்தமாக அரிந்து விடுமே,  அதற்குள் ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைப்பவர்கள் , ஏதாவது செய்வார்கள். 


மற்றவர்கள்,  நாளைக்கு என்ன சமையல் செய்யலாம், என்ன சாப்பிடலாம், என்று  சிந்தித்துக் கொண்டு இருப்பார்களோ?


யாருக்குத் தெரியும்?


பாடல் 


நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_29.html

click the above link to continue reading




நாள்என  = நாள் என்று 

ஒன்றுபோல் காட்டி = ஒன்று உண்மையாக இருப்பது போல காட்டி 

உயிர்ஈரும் = உயிரை அறுக்கும் 

வாளது = வாள் அது 

உணர்வார்ப் பெறின் = உணர்வு உடையவர்கள் அதைப் பெற்றால் 


"காட்டி" என்பதால், அது உண்மையில் இல்லை என்பது புலனாகும். 


"பெறின்" என்பதால், பெற மாட்டார்கள் என்று அர்த்தம். அல்லது, பெறுவது கடினம் என்று அர்த்தம்.  படித்தால் தேர்ச்சி பெறலாம் என்றால், படிப்பது கடினம் என்று  அறிந்து கொள்ளலாம். 


"உணர்வார்" என்பதால், இது உணரப் பட வேண்டிய ஒன்று. படித்து "அறிய" பட வேண்டிய ஒன்று அல்ல.


காலம் உயிரை அறுப்பதை கற்பனை செய்து பாருங்கள். 


ஆழமான குறள் .




1 comment:

  1. This kural and its explanation both are superb. This is the explicit truth.

    ReplyDelete