Pages

Sunday, January 10, 2021

கம்ப இராமாயணம் - இந்திய கலாச்சாரம்

 கம்ப இராமாயணம் - இந்திய கலாச்சாரம் 


இந்திய கலாச்சாரம், இந்திய கலாச்சாரம் என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால் என்ன? என்னதான் உங்கள் கலாச்சாரம்? எதை வைத்துக் கொண்டு உங்கள் கலாச்சாரம் மற்றவற்றைவிட உயர்ந்தது என்று கூறுகிறீர்கள் என்று இளைய தலை முறையினர் கேட்கும் போது, பெரியவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பதை நான் பார்த்து இருக்கிறேன். 

நம் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களை, நாம் போற்றும் கதா நாயகர்கள் மற்றும் நாயகிகள் மேல் ஏற்றிக் கொண்டாடுகிறோம். 

தனித் தனியாக பட்டியல் போட முடியாது. நல்ல கலாச்சார, பண்பாடுகளை உயர்ந்த பாத்திரங்களின் மேல் ஏற்றிச் சொல்லி விடுகிறோம். 

ஒரு வேளை அந்தக் கலாச்சாரம் மாறி இருந்தால், அந்த கதைகள், அந்தக் கதா பாத்திரங்கள் இன்னேரம் செல்லரித்துப் போய் இருக்கும். 


இன்றும் காலம் கடந்து நாம் அவற்றை கொண்டாடுகிறோம் என்றால், அந்தக் கதா பாத்திரங்கள் செய்ததுதான் நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அடிப்படை. 


இன்று ஒரு பெரிய நாட்டில் தேர்தல் நடந்து, தோல்வி அடைந்த அதிபர் பதவியை விட மனம் இல்லாமல்  ஏதேதோ நடக்கிறது அந்த நாட்டில்.  பதவி என்பது பெரிய விடயம்தான். அதை விடுவது என்பது எளிய காரியம் இல்லை. 


எத்தனையோ கோடி மக்கள் எதிர்த்து ஒட்டுப் போட்டாலும்,  அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்  என்று அடம் பிடிப்பது ஒரு வகை கலாச்சாரம், பண்பாடு. 


அது சரி அல்ல, பதவி ஒன்றும் பெரிய விடயம் அல்ல. அதை விட பெரிய விடயங்கள் உலகில் இருக்கின்றன  என்று காட்டியது நம் கலாச்சாரம். 

ஏதோ அந்த நாட்டில் எல்லோரும் பதவி ஆசை பிடித்தவர்கள் என்று சொல்ல வரவில்லை. அதே போல் நம் நாட்டில் யாருக்குமே பதவி ஆசை இல்லை என்றும் சொல்ல வரவில்லை. 

நம் நாட்டின் உரை கல் எது என்று காண்பிப்பதுதான் என் வேலை. எதை நாம் பெரிதாக  கொண்டாடுகிறோம்? எது நமக்கு உயர்ந்தது ? எது நமது அளவு கோல் என்று காட்ட முயற்சி செய்கிறேன். 


இராமனுக்கு முடி சூட்டுவது என்று தசரத சக்கரவர்த்தி முடிவு செய்துவிட்டார். எல்லோருக்கும் அறிவித்தாகி விட்டது.  மனைவியிடம் அதைச் சொல்லப் போகிறார்.  போன இடத்தில், கைகேயி அந்த முடிவை மாற்றி, இராமனுக்கு செல்ல வேண்டிய  அரசை பரதனுக்கு என்று மாற்றுகிறாள். 


தெரிந்த கதை தான். 


வந்த அரசை விட மனம் வருமா? சின்ன பதவியா, விட்டு விட. ஆழி சூழ் உலகம்  அனைத்துக்கும் அதிபதி என்ற பட்டம். அதை விட மனம் வருமா?  வந்த பதவியை விடுங்கள். ஒரு பதவி உயர்வு வரவில்லை என்றால் எவ்வளவு கவலை வருகிறது. 

"உனக்கு அரசு கிடையாது. காட்டுக்குப் போ" என்று விரட்டி விடுகிறாள். 


இராமன் நினைத்து இருந்தால், கைகேயி தூக்கி சிறையில் போட்டு இருக்கலாம். யாரும் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார்கள். 

அல்லது 

"சரி என்ன செய்ய. நம் விதி" என்று வருத்தத்துடன் ஏற்றுக் கொண்டு இருக்கலாம்.  அதுவும் இல்லை. 


அப்போது பூத்த செந்தாமரை போல மலர்ச்சியாக இருந்ததாம் இராமனின் முகம். ஒரு வாட்டம் இல்லை. ஒரு கவலை இல்லை. 


அப்பா, அம்மா சொல்லுக்கு முன்னால், பதவி ஒரு தூசு என்று நினைப்பது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. 

அம்மா சொன்னால், காட்டுக்குக் கூட சிரித்த முகத்தோடு போகலாம் என்று இராமன் காட்டினான். ஒரு வேளை இராமன், "நான் ஏன் போக வேண்டும். சரியான காரணம் சொல்லுங்கள். வேண்டுமானால், அரசை இரண்டாக பிரித்து நான் ஒரு பக்கம் ஆள்கிறேன், பரதன் ஒரு பக்கம் ஆளட்டும் " என்று வாதம் பண்ணி இருக்கலாம். பண்ணி இருந்தால் கூட குற்றம் சொல்ல முடியாது. 

இன்று, இளைய தலைமுறையினர், அவர்களின் பெற்றோர்களை பார்த்து  கேட்கிறார்கள் "உனக்கு என்ன தெரியும்?" என்று. 


இராமன் கேட்டு இருக்கலாம். "அம்மா, நீ சும்மா ஒரு. உனக்கு ஒண்ணும் தெரியாது. இந்த அரசியல் எல்லாம் உனக்கு ஒண்ணும் புரியாது. வாய மூடிக்கிட்டு பேசாம இரு" என்று சொல்லி இருக்கலாம். அது உண்மையும் கூட. கைகேயிக்கு   என்ன தெரியும்? பிள்ளை பெற்றாள் , வளர்த்தாள். அரசியல் அறிவு அவளுக்கு உண்டா?


இராமன் அதெல்லாம் பேசவே இல்லை.  அம்மா சொன்னா கேக்கணும். அவ்வளவுதான். அவள் எனக்கு கெடுதல் செய்ய மாட்டாள் என்று ஆழமாக நம்பினான்.  


பாடல் 


இப்பொழுது எம் அனோரால்

    இயம்புதற்கு எளிதே! யாரும்

செப்ப(அ)ரும் குணத்து இராமன்

    திருமுகச் செவ்வி நோக்கில்

ஒப்பதே முன்பு; பின்பு அவ்

    வாசகம் உணரக் கேட்ட

அப்பொழுது அலர்ந்த செந்தா

    மரையினை வென்றது அம்மா!


பொருள் 

click the link below to continue reading

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_10.html


இப்பொழுது = இப்போது 

எம் அனோரால் = எம் போன்ற கவிஞர்களுக்கு 

இயம்புதற்கு = சொல்வதற்கு 

எளிதே! = எளிதான காரியமா? இல்லை 

யாரும் = யாராலும் 

செப்ப = சொல்ல 

(அ)ரும் = முடியாத அருமையான 

குணத்து இராமன் = குணங்களை கொண்ட இராமன் 

திருமுகச் = திரு முகத்தின் 

செவ்வி  = அழகைப் 

நோக்கில் = பார்த்தால் 

ஒப்பதே = ஒரே மாதிரி இருந்தது 

முன்பு; பின்பு = முன்னும்,பின்னும் 

அவ் வாசகம் = கைகேயி சொன்ன வாசகம்  

உணரக் கேட்ட = உணர்ந்து, கேட்ட 

அப்பொழுது  = அந்தக் கணத்தில் 

அலர்ந்த = மலர்ந்த 

செந்தாமரையினை  = சிவந்த தாமரை மலரை 

வென்றது = விட அழகாக இருந்ததது 

அம்மா! = அம்மா என்பது வியப்புச் சொல் 


கைகேயி சொல்வதற்கு முன்னும், பின்னும் இராமனின் முகம் சிவந்த தாமரை மலர் அப்போதுதான் மலர்ந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்ததாம்.


இந்திய கலாச்சாரம் பெரிய கலாச்சாரமா என்று கேட்கும் குழந்தைகளுக்கு இராமாயணம்  சொல்லுங்கள். 


தாமரை போல் இருந்தது என்ற  உதாரணத்தின் பின்னால் போய் விடக் கூடாது. கருத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும். அதை எடுத்துச் சொல்ல வேண்டும். 


பதவி  போனால், வேலை போனால் நடுங்காமல் இருக்க முடியுமா? 

எப்படி வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் என்று. 



2 comments:

  1. இதுதான் இந்தியக் கலாச்சாரமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். இந்தயக் கலாச்சாரத்தில் எத்தனையோ அழுக்குகளும் இருக்கின்றனவே!

    பெரியவர்களைக் கேள்வி கேட்கக் கூடாது என்பது தவறு. ஒருவருக்கு வயதாகி விட்டதால் அவர் எண்ணங்களும் செயல்களும் சரியாகவே இருக்கும் என்ற குருட்டுப் பாடம் தவறு.

    "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்..." என்பதே சரி.

    ReplyDelete
  2. you are doing a good service by sharing lot of good things about tamil ilakkiyam and aanmeegam... but you don't need to put down other people/religion/country along with that.

    Please don't do what a typical politician would do.. say the good things about what you want to say by providing material just for that fact...

    ReplyDelete