ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை
ஏன் ஆசாரம் வேண்டும் என்று முந்தைய பிளாகில் சிந்தித்தோம். இனி, என்னவெல்லாம் ஆசாரம் இருக்கிறது, அதை எப்படி கடை பிடிக்க வேண்டும் என்று சிந்திப்போம்.
பாடலை படிக்கும் முன், கொஞ்சம் இலக்கணம், கொஞ்சம் நம் கலாச்சாரம் இரண்டையும் தெரிந்து கொள்வோம்.
தமிழர்கள் காலத்தை இரண்டாகப் பிரித்தார்கள்.
சிறு பொழுது, பெரும் பொழுது.
ஒரு நாளின் வேறு வேறு பகுதிக்கு சிறு பொழுது என்று பெயர்.
ஒரு ஆண்டின் வேறு வேறு பகுதிக்கு பெரும் பொழுது என்று பெயர்.
6 - 10 - காலை
10 - 2 - நண்பகல்
2 - 6 - ஏற்பாடு
6 - 10 - மாலை
10 - 2 - யாமம்
2 - 6 - வைகறை
இந்த அதிகாலை 2 முதல் 6 மணிவரை உள்ள நேரம் இருக்கிறதே, இதை ப்ரம்ம முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்.
படிக்க, பாராயணம் செய்ய, நல்ல காரியங்கள் தொடங்க சிறந்த நேரம் என்று சொல்லுவார்கள்.
சாத்வீக குணம் உச்சம் பெற்று இருக்கும் நேரம்.
ஆசாரக் கோவை சொல்கிறது - வைகறையில் படுக்கையில் இருந்து எழுந்து விட வேண்டும்.
எழுந்த உடன், அன்று செய்ய வேண்டிய நல்ல வேலைகளை பட்டியல் போட்டுக் கொள்ள வேண்டும். மனதில் சிந்திக்க வேண்டும். அந்த ரிப்போர்ட் அனுப்பனும், இதில் முதலீடு செய்ய வேண்டும், இன்னாரை பார்க்க வேண்டும், அந்த பதிலை இன்று போட்டு விட வேண்டும், என்று என்னவெல்லாம் நல்ல காரியங்கள் செய்ய வேண்டி இருக்கிறதோ, அதை சிந்தித்து மனதில் குறித்துக் கொள்ள வேண்டும்.
பின் தந்தையையும், தாயையும் தொழ வேண்டும்.
பாடல்
வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!’ என்பதே-
முந்தையோர் கண்ட முறை.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_21.html
click the above link to continue reading
வைகறை யாமம் துயில் எழுந்து = யாமம் தாண்டி, வைகறையில் துயில் எழுந்து. வைகறை ஆறு மணி வரை இருக்கிறதே என்று அதுவரை தூங்கக் கூடாது. யாமம் தாண்டிய வைகறையில் எழ வேண்டும்.
தான் செய்யும் = நாம் செய்ய வேண்டிய
நல் அறமும் = நல்ல அறச் செயல்களையும்
ஒண் பொருளும் = சிறந்த பொருள்களையும்
சிந்தித்து = மனதில் சிந்தித்து
வாய்வதின் = வாய்த்த,
தந்தையும் = தந்தையையும்
தாயும் தொழுது எழுக!’ = தாயையையும் தொழுது எழுக
என்பதே- = எனபதே
முந்தையோர் கண்ட முறை. = முன்னோர் கண்டா நல்ல வழி
இது ஆசாரக் கோவை சொல்வது அல்ல. இப்படித்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று அது சொல்கிறது.
5 am club என்று ஒரு ஆங்கில நூல் எழுதினால், காசு போட்டு வாங்கி படித்து விட்டு, பிரமாதம் என்று சொல்கிறார்ககள்.
அதற்கு ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே இதையெல்லாம் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்கள்.
அதி காலை எழுந்து பாருங்கள். அதன் சுகம் தெரியும்.
நாள் முழுவதும் ஒரு புத்துணர்ச்சியோடு இருப்பதை உணர்வீர்கள்.
இப்படி, பல பாடல்கள் இருக்கின்றன.
மூல நூலை தேடிப் பிடித்து படித்து பயன் அடையுங்கள்.
No comments:
Post a Comment