Pages

Wednesday, March 17, 2021

கம்ப இராமாயணம் - விதியின் வண்ணமே

கம்ப இராமாயணம் - விதியின் வண்ணமே 


திரும்பிப் பார்க்கிறோம். நாம் சாதித்தது எத்தனை. எவ்வளவு செல்வம் சேர்த்து இருக்கிறோம். எவ்வளவு படித்து இருக்கிறோம். எத்தனை காரியங்களை சாதித்து இருக்கிறோம். நம் அறிவின் மேல், நம் முயற்சியின் மேல், நமக்கு ஒரு பெருமை உண்டாகிறது. நான் எவ்வளவு திறமைசாலி, அறிவுள்ளவன், ஆற்றல் உள்ளவன் என்று பெருமிதத்தில் நெஞ்சு நிறைகிறது.


அது சரிதானா?


எல்லாம் நம் திறமை தானா? நம் அறிவுதானா? இப்படியே இன்னும் மீதி நாட்களும் போகும் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியுமா? 


நம்மை விட பெரிய அறிவாளிகள், திறமை சாலிகள் எல்லாம் மண்ணைக் கவ்வி இருக்கிறார்கள். வாழ்க்கை எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களை எல்லாம் சும்மா சருகு போல் தூக்கி வீசி விட்டுப் போய் இருக்கிறது. 


இராவணன் எவ்வளவு பெரிய ஆள். அறிவு, வீரம், பக்தி, பராகிரமம், ஆளுமை, என்று அனைத்திலும் உயர்ந்து நின்றவன். நீண்ட நெடிய ஆயுள். முன்னே எதிர் நிற்க பகை இல்லை.  அளவற்ற செல்வம். 


என்ன ஆயிற்று?


எது அவனைப் புரட்டிப் போட்டது? 


அவனுக்குத் தெரியாத அறமா? மாற்றான் மனைவியை நினைப்பது குற்றம் என்று அவனுக்குத் தெரியாதா? அவனுக்கு எவ்வளவு பேர் அறிவுரை சொன்னார்கள். கேட்டானா? இல்லையே. ஏன்?


எது அவன் அறிவை மறைத்தது? 


விதி. 


நம் தமிழ் இலக்கியம் விதியை ஆழமாக நம்பியது. நம் மதங்களும் விதியை நம்பின. 


இராவணன் கும்ப கர்ணனை எழுப்பி போருக்குப் போகச் சொல்கிறான். கும்பகர்ணனுக்கு தூக்க கலக்கம். எதுக்கு போர்? யாருடன் போர் என்று கேட்கிறான். 


எல்லாம் சொன்னவுடன், கும்பகர்ணன் வருந்திச் சொல்கிறான். 


"இராவணா, போர் வந்து விட்டதா? அதுவும் பொன் போன்ற சீதையை முன்னிட்டா இந்தப் போர்? கண்ணில் விஷம் கொண்ட பாம்பை போன்ற சீதையை நீ இன்னும் விடவில்லையா ? இது விதியின் செயல் அன்றி வேறு என்ன " என்கிறான். 


பாடல் 



 ‘கிட்டியதோ செரு? கிளர் பொன் சீதையைச்

சுட்டியதோ? முனம் சொன்ன சொற்களால்

திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை

விட்டிலையோ? இது விதியின் வண்ணமே!



பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_17.html

(click the above link to continue reading)


 ‘கிட்டியதோ செரு? = போர் கிடைத்ததா 

கிளர் = சிறந்த 

பொன் = பொன் போன்ற 

 சீதையைச் = சீதையை 

சுட்டியதோ? =  முன்னிறுத்தியா. அவள் பொருட்டா ?

முனம் சொன்ன சொற்களால் = முன்பு நானும், வீடணனும், மற்றவர்களும் சொன்ன அறிவுரைகளால் 


திட்டியின் = திட்டி = திருஷ்டி = பார்வை 


விடம் அன்ன = விஷம் போன்ற 


கற்பின் செல்வியை = கற்பின் செல்வியை 


விட்டிலையோ? = நீ இன்னமும் விட வில்லையா ?


இது விதியின் வண்ணமே! = இது விதியின் விளையாட்டே 


பாம்பு கடித்தால் தான் விஷம் ஏறும். திட்டி விடம் என்று ஒரு பாம்பு இருக்கிறது.  அது கடிக்க வேண்டாம். கண்ணில் இருந்து விஷத்தைக் கக்கும். ஆள் காலியாகி விடுவான். அது போல, சீதை தொட வேண்டாம். அவள் பார்வை உன்னை தகித்து விடும். 


நம் அறிவு என்று பெரிதாக நினைக்கக் கூடாது. 


தேவர்களையும், முனிவர்களையும், ஒன்பது கோள்களையும் ஆட்டிப் படைத்த இராவணனை விதி தூக்கிப் போட்டது என்றால் நாம் எம்மாத்திரம்?


இலக்கியங்கள் நமக்கு நம் எல்லைகளை அறிந்து கொள்ள உதவும். உலகியல் நிகழ்வுகளால் நாம் ரொம்பவும் அலைகழிக்கப் படாமல் இருக்க அவை உதவும். 


உதவட்டும். 


2 comments:

  1. மிகவும் உண்மையான அறிவுரை.அதை கடைபிடிக்கவும் பிடிக்காமல் இருப்பதும் அவரவரின் தலை விதி.

    ReplyDelete
  2. தலைக்கனம் வேண்டாம் என்று பொருள் கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete