Pages

Thursday, March 18, 2021

தேவாரம் - அவ்வினைக்கு இவ்வினை

 தேவாரம் - அவ்வினைக்கு இவ்வினை 


எல்லாம் வினைப் பயன் என்று நாம் நினைக்கிறோம். நல்லதோ, கெட்டதோ எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். நல்லது செய்து இருந்தால் நல்லது வரும். அல்லது செய்து இருந்தால் துன்பம் வரும். இதில் நம் கையில் என்ன இருக்கிறது. விதியை நம்மால் மீற முடியுமா? 


ஊழிற் பெருந்தக்க யாவுள என்பார் வள்ளுவர்.


நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை, மைந்த விதியின் பிழை என்பார் கம்பர். 


அப்படி என்றால் நம் கையில் ஒன்றும் இல்லையா. நாம் சும்மா இருக்க வேண்டியது தானா. ஒரு முயற்சியும் செய்ய வேண்டாமா? 


திருஞான சம்பந்தர் சொல்கிறார். "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வினையை மாற்றலாம்" என்று கூறுவதோடு நில்லாமல், அதற்கு வழியும் காட்டுகிறார். 


"முன்பு செய்த வினைகளுக்கு ஏற்ப இப்போது நமக்கு இன்ப துன்பமாகிய வினைகள் வருகிறது என்று சொல்லிக் கொண்டு சும்மா இருக்கிறீர்களே. இது உங்களுக்கு ஒரு ஊனம் இல்லையா. இறைவனை வழிபடுங்கள். அப்படி செய்தால் நாம் முன் செய்த வினைகள் நம்மை தீண்டாது. இது திருநீலகண்டத்தின் மீது ஆணை" என்று சத்தியமிட்டு கூறுகிறார். 


பாடல் 


அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!

உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?

கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.!


பொருள் 



click the above link to continue reading

அவ்வினைக்கு = முன்பு செய்த வினைகளுக்கு 


இவ்வினை ஆம் = இப்போது நடக்கும் வினைகள் (இன்ப துன்பங்கள்) 


என்று சொல்லும் அஃது அறிவீர்! = என்று சொல்லக் கேட்டு இருகிறீர்கள் 


உய்வினை = இதில் இருந்து தப்பிக்கும் வழியினை 


நாடாது இருப்பதும் = கண்டு பிடிக்காமல் இருப்பதும் 


உம்தமக்கு = உங்களுக்கு 


 ஊனம் அன்றே? = ஒரு குறை இல்லையா ?


கைவினை செய்து = கைகளால் தொழுது 


எம்பிரான் = எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன் 


கழல் போற்றுதும் = திருவடிகளை போற்றுங்கள் 


நாம் அடியோம் = நாம் இறை அடியவர்கள் 


செய்வினை = செய்த வினை 


வந்து = நம்மிடம் வந்து 


எமைத் தீண்டப்பெறா = நம்மை தீண்டாது 


திருநீலகண்டம்.! = திருநீலகண்டத்தின் மேல் ஆணை 


திருஞான சம்பந்தர் ஞானப் பால் உண்டு ஞானம் பெற்றவர். இறைவன் மேல் ஆணையிட்டு சொல்கிறார். 


பழைய வினைகள் தீர வேண்டும் என்ன்றால் என்ன செய்ய வேண்டும் என்று. 


(இப்படி பத்துப் பாடல்கள் இருக்கின்றன. விரைந்து அவை அனைத்தையும் படித்து விடுங்கள்) 

இதையே மணிவாசகரும் "பழ வினைகள் பாறும் வண்ணம்" என்பார். பழைய வினைகள் அற்றுப் போகும் படி அவன் எனக்கு அருளினான் என்கிறார். 


முத்திநெறி அறியாத

    மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப்

    பழவினைகள் பாறும்வண்ணஞ்

சித்தமலம் அறுவித்துச்

    சிவமாக்கி எனை ஆண்ட

அத்தன்எனக் கருளியவா

    றார்பெறுவார் அச்சோவே


எனவே, விதி என்று சோர்ந்து இருந்து விடாதீர்கள். 


பழைய வினைகளை சுட்டெரிக்க ஞான சம்பந்தரும், மணி வாசகரும் வழி சொல்லித் தந்து இருக்கிறார்கள். 


2 comments:

  1. சம்பந்தரின்,மாணிக்க வாசகரின் கருத்துகள் ஊக்கம் அளிப்பவையாகவும் மனம் சோர்ந்துபோகாவண்ணம் இருப்பதற்கு எளியதாக உள்ளது

    ReplyDelete
  2. சாமியைக் கும்பிட்டு, பஜனை செய்தால் நம் பழைய வினைகள் தீரும் என்று பொருளா? மன்னிக்கவும், ஆனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

    ReplyDelete