Pages

Friday, April 23, 2021

திருக்குறள் - வான் சிறப்பு - - எல்லாம் மழை - பாகம் 1

 திருக்குறள் - வான் சிறப்பு -  - எல்லாம் மழை - பாகம் 1 



மழை சில பெய்யாமல் கெடுக்கும். பின் அதுவே பெய்து கொடுக்கும். அப்படி கெடுப்பதும், கொடுப்பதும் எல்லாம் மழைதான் இந்த உலகில் என்கிறார். 


பாடல் 


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/1_23.html


(click the above link to continue reading)


கெடுப்பதூஉம் = கெடுபதுவும் 

கெட்டார்க்குச் = கெட்டவர்களுக்கு 

சார்வாய்மற்று = உதவியாக மேலும் 

 ஆங்கே = அங்கே 

எடுப்பதூஉம் = துணை செய்வதுவும் 

எல்லாம் மழை = எல்லாம் மழை 


இது என்ன குறள்? இதில் பெரிதாக என்ன இருக்கிறது? அடுத்த குறளுக்கு போவோமா என்று நினைப்பதன் முன்னம், பரிமேலழகர் உரையை படித்து விடுவோம். 


பரிமேலழகர் உரை படிப்பது என்றால் கொஞ்சம் இலக்கணமும் படிக்க வேண்டும். 


வேண்டாம் வேண்டாம் எங்களுக்கு இலக்கணமும் வேண்டாம்,  பரிமேலழகர் உரையும் வேண்டாம். இந்த சுருக்கமான உரையே போதும் என்பவர்கள் மேலே தொடர்வதை விட்டு விடலாம். 


அதில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தொடரலாம். 



பரிமேலழகர் உரை: 


கெடுப்பதூஉம் - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்;  கெட்டார்க்குச்சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை - இவை எல்லாம் வல்லது மழை.

('மற்று' வினை மாற்றின்கண் வந்தது, ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல்.  கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு என்றார்'. 'எல்லாம்' என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.)


ஒவ்வொன்றாக பிரித்துப் படிப்போம். 


"கெடுப்பதூஉம்" - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்;


குறளில் கெடுப்பதூஉம்  என்று மட்டும் தான் இருக்கிறது.  "பெய்யாது நின்று கெடுப்பதூஉம்"என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார். அப்படி என்றால் பெய்து கெடுக்காதா என்ற கேள்வி வரும். எவ்வளவு வெள்ளத்தால் வரும் நாசங்களை, அழிவுகளை பார்க்கிறோம். அது எல்லாம் கெடுதல் இல்லையா?  அது எப்படி பெய்யாமல் கெடுப்பதை மட்டும் சொல்லலாம் என்றால்,


மழை அதிக அளவு பெய்தால் அது சிலரைத் தான் பாதிக்கும். அந்த ஆற்றங்கரையில் உள்ளவர்களை, நீர் வரும் வழியில் வீடு கட்டிக் கொண்டவர்களை, தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை அது பாதிக்கும். ஆனால், அதிக மழை பொழிந்தால் நிலத்தடி நீர் மேலே வரும், ஏரி, குளம், கண்மாய், குட்டை எல்லாம் நிறையும். அணைக்கட்டுகள் நிறையும். அதனால் பல பேருக்கு பல ஆண்டுகள் பயன் உண்டு. 


மாறாக, மழை பெய்யவே இல்லை என்றால் அது எல்லோரையும் பாதிக்கும்.  எனவே தான், பெய்யாமல் கெடுப்பது என்றார். 


"'மற்று' வினை மாற்றின்கண் வந்தது,". அப்படி என்றால் என்ன? 


குறளில் 


"சார்வாய்மற்று ஆங்கே" என்று வருகிறது.  மற்று என்றால் என்ன? 


நாம் அன்றாடம் உபயோகப் படுத்தும் சொல்தான்.


உதாரணமாக, எழுத்தாளர் சுஜாதா அவர்கள் நிறைய அறிவியல் சார்ந்த கட்டுரைகள் எழுதி இருக்கிறார். அது மட்டும் அல்ல, அவர் சில நகைச்சுவை கதைகளும் எழுதி இருக்கிறார்" என்று சொல்கிறோம் அல்லவா? 


இதில் "மட்டும் அல்ல" என்ற வார்த்தை எதற்கு? ஒன்றில் இருந்து ஒன்றை வேறு படுத்த அதை நாம் பயன் படுத்துகிறோம். 


"தம்பி, கடைக்குப் போய் அரிசி, புளி, மிளாகாய் எல்லாம் வாங்கிகிட்டு மத்தது வர்ற வழியில பேங்க் ல மீதிப் பணத்தை போட்டுட்டு வந்துரு" 


இரண்டு ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவற்றை பற்றிச் சொல்லும் போது, நடுவில்  "மற்று" என்ற வார்த்தையை உபயோகப் படுத்த வேண்டும். 


மருத்துவரைப் பார்த்து கொஞ்சம் மாத்திரை, மருந்து , ஒரு கிலோ தக்காளி வாங்கிட்டு வா நு சொல்லக் கூடாது.  


மருத்துவரைப் பார்த்து மாத்திரை மருந்து வாங்கிட்டு மத்தது (வர்ற வழியில) ஒரு கிலோ தக்காளியும் வாங்கிட்டு வா" என்று சொல்ல வேண்டும். 


"மற்று" என்ற வார்த்தையை படித்தவுடன் நமக்கு மனதுக்குள் "இனி வேறு ஏதோ ஒன்று வரப் போகிறது " என்று தோன்றி விடும். 


இங்கே "மற்று வினை மாற்றின் கண் வந்தது" என்கிறார். 


மழை கெடுத்தல், கொடுத்தல் என்ற இரண்டு எதிரிடையான வேலைகளை செய்வதால் "மற்று" என்று ஒரு வார்த்தையை போடுகிறார். 


சரி, "ஆங்கு" என்றால் என்ன ?

1 comment: