திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார் - பாகம் 3
பாடல்
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (03)
சீர் பிரித்த பின்
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலம் மிசை நீடு வாழ்வார்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/04/3.html
(click the above link to continue reading)
மலர் மிசை = மலரின் கண்
ஏகினான் = சென்று அடைந்தவனது
மாண் = மாட்சிமை பொருந்திய
அடி சேர்ந்தார் = திருவடிகளை சேர்ந்தவனது
நிலம் மிசை = நிலத்தின் கண்
நீடு வாழ்வார் = நீண்ட நாள் வாழ்வார்
ஏகினான் என்ற சொல்லுக்கு பொருளை முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.
அடுத்தது,
"அடி சேர்ந்தார்" என்று கூறுகிறார்.
சேர்ந்தார், அல்லது சேர்தல் என்றால் என்ன பொருள்?
அதற்கு பின் வருவோம்
நாம் எந்த ஒரு செயலைச் செய்வதானாலும் அதை மூன்று வழிகளில் செய்யலாம்.
மனம் அல்லது மொழி அல்லது உடம்பால் செய்வது.
மனதில் நினைக்காத ஒன்றை மொழியோ அல்லது உடம்போ செய்யாது. முதலில் மனதில் ஒரு எண்ணம் எழ வேண்டும். அப்படி எழுந்த பின் அது சொல்லாகவோ அல்லது செயலாகவோ வெளிப்படும்.
அறம் செய்ய விரும்பு என்றால் ஔவை. அறம் செய் என்று சொல்லி இருக்கலாமே? விரும்புதல் மனதின் செயல். மனதில் ஒரு இரக்கம் எழ வேண்டும், உதவி செய்யும் அன்பு/கருணை பிறக்க வேண்டும். பின் அறம் தானாக நிகழும்.
நமது வழிபாடுகளில், பெரும்பாலானவை முடியும் போது சாந்தி, சாந்தி, சாந்தி என்று முடிப்பார்கள். ஏன் மூன்று முறை சொல்லவேண்டும்?
மனமும், மொழியும், உடலும் சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக மும்முறை சொல்கிறார்கள்.
அது போல, இறைவனையும் மன மொழி மெய்களால் வழி பட வேண்டும்.
இங்கே "சேர்ந்தார்"என்ற சொல்லுக்கு பரிமேலழகர் உரை செய்யும் போது எப்படி எழுதுகிறார் என்று கவனிப்போம்.
"அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண்"
சேர்தல்- இடைவிடாது நினைத்தல்.
சேர்தல் என்றால் இடை விடாது நினைத்தல் என்று பொருள் கொள்கிறார்.
அது எப்படி இடை விடாமல் நினைக்க முடியும். வேறு வேலை இல்லையா? இல்லறக் கடமைகள் இல்லையா?
மணிவாசகர் கூட "இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்பார். அது எப்படி சாத்தியம் ஆகும்?
நீங்கள் கார் அல்லது பைக் அல்லது சைக்கிள் ஓட்டி இருகிறீர்களா? இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, ஓட்டுபவர்கள் பக்கத்தில் அமர்ந்து இருப்பீர்கள்தானே.
முதன் முதலாக பயிற்சி செய்யும் போது ரொம்ப பதற்றமாக இருக்கும்.
Steerring, clutch, brake, accelerator, horn, indicator, revivew mirror mirror, side view mirror, gear shifting, traffic signal, traffic around you...
இப்படி பல விஷயங்களை ஒரே சமயத்தில் கண்காணித்து வண்டி ஓட்ட வேண்டும். தளர்ந்து போவோம்.
அதுவே கொஞ்ச நாள் பழகி விட்டால், வண்டி பாட்டுக்கு ஓடும், நீங்கள் கைபேசியில் பேசுவீர்கள், பாட்டை மாற்றுவீர்கள், அருகில் இருப்பவரிடம் பேசிக் கொண்டு இருப்பீர்கள்....இது ஒரு பக்கம் நடக்க, கால் accelerator ஐ அழுத்தும், கை கியரை மாற்றும், இன்னொரு கை horn அடிக்கும், கண் முன்னாலும் பின்னாலும் வரும் போக்குவரத்து நெரிசலை கவனிக்கும்.
எப்படி முடிகிறது ?
பழக்கம். பழகி விட்டால், "இடையாறது நினைக்க முடியும்". "இமைப் பொழுதும் மறக்காமல் நினைக்க முடியும்".
"தாவி விளையாடி இரு கை வீசி நடந்தாலும் தாதி மனம் நீர் குடத்தே தான்"
என்பார் பட்டினத்தார். பெண்கள் பானையில் நீர் எடுத்து தலையின் மேல் வைத்துக் கொண்டு நடந்து வருவார்கள். கால் நடக்கும், கை வீசி நடப்பார்கள், வாய் பேசிக் கொண்டிருக்கும் இருந்தாலும் மனம் தலையின் மேல் உள்ள பானையை மறக்காது.
பக்தி என்றால் காலையில் ஒரு பத்து நிமிடம், சாயங்காலம் ஒரு பத்து நிமிடம், நாள் கிழமை என்றால் இன்னும் கொஞ்ச நேரம், வருடத்துக்கு ஓரிரண்டு தடவைகள் பெரிய புண்ணிய தலங்களுக்குப் போய் வருவது என்பது அல்ல.
இடையறாது நினைத்தல் தான் பக்தி.
"சொல்லும் நா நமச்சிவாயவே" என்பார் சுந்தர மூர்த்தி நாயனார்.
பழக்கப் படுத்தி விட்டால், நாம் சொல்லாவிட்டாலும், நாக்கு பாட்டுக்கு சொல்லிக் கொண்டு இருக்கும்.
மன வழிபாடு பற்றி கூறுகிறார்.
இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. அதை நாளை பார்ப்போமா?
No comments:
Post a Comment