Pages

Monday, April 5, 2021

திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார் - பாகம் 4

  

திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார்  - பாகம் 4


பாடல் 

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (03)


சீர் பிரித்த பின் 


மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நிலம் மிசை நீடு வாழ்வார்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/4.html

(click the above link to continue reading)


மலர் மிசை = மலரின் கண் 


ஏகினான் = சென்று அடைந்தவனது 


மாண் = மாட்சிமை பொருந்திய 


அடி சேர்ந்தார் = திருவடிகளை சேர்ந்தவனது 


நிலம் மிசை = நிலத்தின் கண் 


நீடு வாழ்வார்  = நீண்ட நாள் வாழ்வார் 


மலர், ஏகினான் என்ற சொற்களின் ஆழ்ந்த அர்த்தங்களை முந்தைய ப்ளாகுகளில் சிந்தித்தோம். 


"நிலமிசை நீடு வாழ்வார்"    


இதில், "மிசை" என்பது அசைச் சொல். அதை விட்டு விடலாம். 


"நிலத்தில் நீடு வாழ்வார்".


எந்த நிலத்தில்? எவ்வளவு நாள் ? நீடு என்றால் நீண்டு என்று பொருள். எவ்வளவு காலம்  அது?


பரிமேலழகர் இல்லை என்றால் இதற்கெல்லாம் நமக்கு பொருள் புரியவே புரியாது. 


"  (எல்லா உலகிற்கும்) மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்."


எல்லா உலகத்துக்கும் மேலான வீட்டு உலகின் கண் அழிவின்றி வாழ்வார் என்று பொருள் சொல்கிறார். 


குறளுக்கும், இவர் சொல்லும் உரைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அவர் பாட்டுக்கு ஏதோ சொல்லிக் கொண்டு போவது போலத் தெரியும். 


அப்படி அல்ல. 


மிக மிக ஆழ்ந்து சிந்தித்து, வள்ளுவரின் நிலைக்கு சென்று பொருள் சொல்கிறார். 


இந்த பூமி, சூரியன், சந்திரன் எல்லாம் என்றோ ஒரு நாள் தோன்றியது. பெரு வெடிப்பு அல்லது big bang என்று சொல்கிறார்கள். அதில் இருந்து தோன்றியதுதான் இந்த உலகம். சூரியன், பூமி, லட்சோப இலட்சம் நட்சத்திரங்கள், அண்ட வெளி, பால் வெளி எல்லாம் அதில் இருந்து தோன்றியது. 

தோன்றியது என்றால், இவை எல்லாம் இல்லாமல் இருந்த காலம் என்று ஒன்று உண்டு. தோன்றிய அனைத்தும் அழியும் என்பதில் சந்தேகமே இல்லை. 


இந்த உலகம் அழியும் சரி. 


நம் வாழ்வோ? மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு என்பது அல்லது நூறு வருடம் இருப்போம். 


நாம் வாழும் இந்த உலகமும் கொஞ்ச நாள் தான் இருக்கும். அதில் வாழும் நாமும் மிக மிக சொற்ப நாட்களே இருக்கப் போகிறோம். 

அப்படி என்றால் அழியாத நிலம் ஒன்று வேண்டும் அப்போது தான் நீடு வாழ முடியும். முதலில் இருக்கும் இடம் நிரந்தரமாக இருக்க வேண்டும் அல்லவா? 


சரி, இடம் நிரந்தரமாக இருக்கிறது.  நம் வாழ்வு? அதுவும் நீடித்து இருக்க வேண்டுமே?


அப்போதுதான் நீடு வாழ முடியும். 


எனவே, வள்ளுவர் "நிலமிசை நீடு வாழ்வார்" என்று சொல்லியதற்கு அர்த்தம்


"(எல்லா உலகிற்கும்) மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்." என்று பரிமேலழகர் குறிப்பிடுகிறார். 


வீடு பேறு அடைந்தால் அந்த இடமும் அழியாது, நாமும் அழியாத வாழ்வு பெறுவோம். 


வீடு பேறு என்பது எல்லா உலகத்தையும் விட உயர்வானது தானே ?


நிலம் நிரந்தரம் 

வாழ்வு நிரந்தரம்


எனவே "நிலமிசை நீடு வாழ்வார்"


எவ்வளவு தூரம் யோசித்து இருக்கிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. 


இப்படி ஆழ்ந்து சிந்தித்தவர்கள் சொல்வது தவறாக இருக்குமா? அவர்கள சொல்வதில் தவறு கண்டுபிடிக்க நமக்கு அறிவு போதுமா? 


அதையும் சிந்திப்போம். 


இனி அடுத்த குறளுக்குப் போவோம். 



2 comments:

  1. வள்ளுவரின் இந்த நீண்ட ஆழ்ந்த சிந்தனை
    பிரமிப்பூட்டுகிறது.

    ReplyDelete
  2. பரிமேலழகர் பெரிய ஆளுதான்!

    ReplyDelete