திருக்குறள் - கற்றதனால் என்ன பயன்
திருக்குறளின் முதல் இயல் பாயிரவியல். அதாவது முன்னுரை. அதில் நான்கு அதிகாரங்களை வைக்கிறார் வள்ளுவர்.
கடவுள் வாழ்த்து
வான் சிறப்பு
நீத்தார் பெருமை
அறன் வலியுறுத்தல்
என்பன அந்த அதிகாரங்கள்.
அதில் கடவுள் வாழ்த்தில் இரண்டாவது குறள் கீழே உள்ள குறள்
பாடல்
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழா ரெனின்.
கொஞ்சம் சீர் பிரிப்போம்
கற்றதனால் ஆய பயன் என்கொல் வால் அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின்.
இதற்கு ஒவ்வொரு சீருக்கும் பொருள் கூறத் தொடங்கினால் பிழை வர வாய்ப்பு இருக்கிறது.
எனவே, விரிவாக நேரே பார்த்து விடுவோம்.
பொதுவான கருத்து "இறைவன் திருவடியை தொழா விட்டால், படித்ததனால் உண்டாகும் பயன் என்ன? "
என்று கேட்கிறார்.
உள்ளே நுழைவோம்.
https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post.html
(click the above link to continue reading)
கற்றதனால் = எதைக் கற்றதனால்? வேதம், தேவாரம், திருவாசகம், பைபிள், குரான் போன்ற சமயம் சார்ந்த நூல்களை கற்றதனாலா?
இல்லை என்கிறார்.
"எல்லா நூல்களையும் கற்றவர்க்கு"
எந்த நூலை கற்றாலும். நீங்கள் எதை வேண்டுமானாலும் படியுங்கள். கணிதம், மருத்துவம், வேதியியல், உயிரியல், தமிழ், கணணி, வரலாறு, சமையல் கலை, சிற்பம் என்று எதைக் கற்றாலும்.
அனைத்து அறிவின் முடிவிலும் அவன் தான் நிற்பான்.
"ஆய பயன்"
இதில் ஆய என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்.
ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும் என்று சொல்வார்கள். அழகிய கலைகள், நுணுக்கமான கலைகள் என்று பொருள் வரும்.
இதை ஆபயன் என்று கொண்டால் ஆகின்ற பயன் என்று பொருள் விரியும்.
அதாவது கற்றதனால் விளையும் பயன்
"என் கொல்" இதில் கொல் என்பது அசைச் சொல். அசைச் சொல் என்றால் அதற்கு ஒரு அர்த்தமும் கிடையாது என்று அர்த்தம். அதை விட்டு விட வேண்டும்.
"கற்றதனால் ஆய பயன் என்" = படித்ததால் வரும் பயன் என்ன ? என்ற கேள்வியை அவரே எழுப்பிக் கொண்டு பதிலும் தருகிறார்.
வாலறிவன் = இதற்கு பரிமேல் அழகர் எழதும் உரை "மெய்யுணர்வினை உடையானது". இறைவனின் அறிவு தான் மெய்யான அறிவு. நாம் பெற்றது எல்லாம் இரவல் அறிவு. யார் யாரோ சொல்லி நமக்கு வந்தது.
இறைவன் அறிவினை யாரிடம இருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை. அது அவனிடமே இருக்கிறது. எனவே "உடையானது" என்று கூறினார்.
"நல் தாள்" = நல்ல திருவடிகளை. தாள் என்பதற்கு பாதம் என்று ஒரு பொருள் இருக்கிறது. இலை என்று ஒரு பொருளும் இருக்கிறது. "பிறவிப்பிணிக்கு மருந்தாதலின் 'நற்றாள்' என்றார்." என்று உரை எழதுகிறார். எப்படி பச்சிலை நோயைப் போக்குமோ, அது போல, இறைவனின் தாள் பிறவிப் பிணி என்ற நோயைப் போக்கும்.
எல்லா அறிவு சார்ந்த துறைகளும் ஏதோ ஒரு உண்மையைத் தேடித்தான் செல்கின்றன. இயற்கையின் உள்ளே பொதிந்து கிடக்கும் இரகசியங்களை, பொருளை, உண்மையை ஒவ்வொரு அறிவும் ஒவ்வொரு விதமாகத் தேடுகின்றன. கடைசியில் அவை யாவும் தரிசிப்பது ஏதோ ஒரு உண்மையைத்தான். ஒவ்வொரு உண்மையும் இறைவனின் வெளிப்பாடே என்பதால், அறிவின் நோக்கம் இறுதியில் இறைவனை அடைவது தான்.
அருமை சார் .....
ReplyDeleteஎங்கே இரண்டு நாள் விடுமுறை வந்து விடுமோ என்ற பயம் நீக்கினீர்கள் ...
மகிழ்ச்சி ...வணக்கம் ...
இரண்டே அடிகளில் எவ்வளவு ஆழ்ந்த கருத்தை கூறுகிறார். சொல்லில் மகத்தான ஆளுமை. உங்கள் விளக்கம்
ReplyDeleteதெளிவாக உள்ளது.