Pages

Wednesday, April 28, 2021

திருக்குறள் - வான் சிறப்பு - தானம் தவம் இரண்டும் தங்கா

 திருக்குறள் - வான் சிறப்பு - தானம் தவம் இரண்டும் தங்கா 


மழை பெய்யாவிட்டால், தானமும் தவமும் இந்த உலகில் இருந்து மறைந்து விடும்.


பாடல் 

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_28.html


(please click the above link to continue reading)



தானம் = தானம் 

தவம் = தவம் 

இரண்டும் = என்ற இரண்டும் 

தங்கா = தங்காது, மறைந்து விடும் 

வியன் உலகம் = பெரிய உலகில் 

வானம் = வானம், மேகம் 

வழங்கா தெனின் = தராவிட்டால், மழை பெய்யாவிட்டால் 


இனி, பரிமேலழகரின் உரையை காண்போம். 


தானம் என்றால் என்ன என்பதை மிகத் தெளிவாக, இரத்தின சுருக்கமாக சொல்கிறார் பரிமேலழகர். நம்மைக் கேட்டால் என்ன சொல்லுவோம், தானம் என்றால் மற்றவர்களுக்குத் தருவது என்று சொல்லுவோம். அல்லது வறியவர்களுக்கு உதவுவது என்போம், அல்லது பயன் கருதாமல் உதவி செய்வது என்று சொல்வோம். 


பரிமேலழகர் சொல்கிறார் 


"தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்"


தானம் என்றால் அறநெறியால் சம்பாதித்த பொருளை தகுந்தவர்களுக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தல் என்கிறார். 


பல பேர் தவறான வழியில் பணம் சம்பாதித்து விட்டு, அதில் ஒரு சிறு பகுதியை கோவில் உண்டியலில் போடுவது, அறக் கட்டளைகளுக்கு தானம் தருவது, என்று செய்வதன் மூலம் தானத்தின் பலன் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. அற வழியில் சம்பாதித்த பொருளை தருவதுதான் தானம். 


அதுவும், தகுந்தவர்களுக்குத் தர வேண்டும். கண்டவனிடம் கொடுத்தால் அந்தப் பொருளை வைத்துக் கொண்டு அவன் மேலும் பல தீமைகளைச் செய்வான். பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டும். 


மூன்றாவது, மகிழ்ச்சியோடு கொடுத்தல்.  இருட்டுப் பாதை, ஒத்தையடிப் பாதை, அக்கம் பக்கம் யாரும் இல்லை. தனியாகப் போகிறோம். ஒரு கள்ளன் வழி மறித்து கையில் உள்ளதை எல்லாம் கொடு என்று கேட்கிறான். "இந்தா என்னுடைய மோதிரம், கைக் கடிகாரம், பையில் உள்ள பணத்தை எல்லாம் உனக்கு தானம் தருகிறேன்" என்று கொடுப்பது தானம் ஆகாது. வருத்தத்தோடு கொடுப்பது தானம் ஆகாது. "அறம் செய்ய விரும்பு" என்றாள் ஔவை. விருப்பத்தோடு கொடுக்க வேண்டும். 


தானமும் தவமும் என்பதில் தானம் என்பது பற்றி கூறி விட்டார். 


தவம் என்றால் என்ன என்று அடுத்து கூறுகிறார். 


"தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. "


தவம் என்றால் மனம் புலன்கள் வழி போகாமால் இருக்க உணவை குறைத்து உண்பது போன்ற விரதங்களை மேற்கொள்வது. 


இதில் பரிமேலழகர் செய்யும் நுட்பம் இன்னொன்றும் உண்டு. 


"பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன"


அதாவது தானம் என்பது இல்லறத்தின் கூறு. தவம் என்பது துறவறத்தின் கூறு. 


அதாவது, மழை இல்லாவிட்டால், இல்லறம், துறவறம் என்ற இரண்டு அறங்களும் இல்லாமல் போய்விடும். 


அறம் இல்லாவிட்டால் பொருள் இல்லை. அறமும் பொருளும் இல்லாவிட்டால் இன்பமும் வீடும் இல்லை. 


எனவே, வீடு பேறு வரை கொண்டு செல்ல மழை அவசியம் என்று முடிவில் உள்ள வீடு பேற்றையும், தொடக்கத்தில் உள்ள மழையையும் ஒன்று சேர்கிறார் பரிமேலழகர். 


அவர் உரை இல்லாவிட்டால் இதெல்லாம் நமக்குப் புரிவது கடினம். 


என்னடா இது அற நூல், வீடு பேற்றுக்கு வழி சொல்லும் நூல் என்று சொல்லி விட்டு இப்படி மழையை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறாரே என்று நினைப்பவர்களுக்கு, மழை இல்லாமல் வீடு பேறு இல்லை, அறங்களும் இல்லை என்று சுட்டுகிறார். 


எவ்வளவு ஆழமான குறள், எவ்வளவு ஆழமான உரை. 





4 comments:

  1. திருக்குறள் புரிய பரிமேல் அழகர் உரை வேண்டும். அது புரிவதற்கு இந்த blog வேனும்

    ReplyDelete
  2. அருமை ....
    சகோதரி புவனா சொன்னாற்போல , அழகரும்
    வேண்டும் , அண்ணாவும் வேண்டும் ...
    வணக்கம் .அண்ணா ......

    ReplyDelete
  3. புவனா சொன்னது சரிதான்!

    இந்தக் கட்டுரையைப் படித்ததும், அவ்வையார் பாடலில் "தானமும் தவமும்" என்று குறிப்பிடுவது நினைவுக்கு வந்தது. அத்தோடு இந்தப் பொருளை இணைத்துப் பார்த்தால், அந்தப் பாடலுக்கும் இனிமை கூடினாற்போல் இருக்கிறது.

    "அரியது கேட்கின் வடிவடிவேலோய்
    அரிது அரிது மானிடராதல் அரிது
    மானிடராயினும் கூன் குருடு
    செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
    கூன் குருடு செவிடு பேடு
    நீங்கிப் பிறந்தகாலையும்
    ஞானமும் கல்வியும் நயத்தலரிது
    ஞானமும் கல்வியும் நயந்தகாலையும்
    தானமும் தவமும் தான் செய்தல் அரிது
    தானமும் தவமும் தான் செய்வராயின்
    வானவர் நாடு வழி பிறந்திடுமே"

    ReplyDelete