நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்று கொலோ களிக்கும் நாளே
திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளே, உன்னை நான் கண்டு களிக்கும் நாள் எந்த நாளோ என்று ஏங்குகிறார் குலசேகர ஆழ்வார்.
என்ன பிரச்சனை? போய் பார்த்துவிட்டு வர வேண்டியதுதானே? அவரை யார் தடுத்தார்கள்.
நாம் சில சமயம் கண் விழித்து அமர்ந்து இருப்போம். எதிரில் ஒரு நண்பர் கடந்து போய் இருப்பார். நாம் கவனித்து இருக்க மாட்டோம். பின் ஒரு நாள், நண்பர் கூறுவார் "நான் அன்னிக்கு உன்னைப் பார்த்து கை ஆட்டினேன்..நீ கண்டு கொள்ளவே இல்லை" என்று. நம் கவனம் எல்லாம் எங்கோ இருந்திருக்கும். எதிரில் உள்ள ஆள் தெரிந்து இருக்காது.
அவ்வளவு ஏன்,
வீட்டில் மனைவி கணவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பாள்...அவரும் உம் உம் என்று கேட்டுக் கொண்டிருப்பார். அம்மையார் நேரில் வந்து "என்ன நான் சொல்றது உங்க காதுல விழுதா இல்லையா...இப்ப நான் என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன் சொல்லுங்க பாப்போம்" என்று மடக்கினால், திரு திரு என்று முழிப்பார்.
காரணம், காது இங்கே தான் இருக்கிறது, ஆனால் மனம் வேறு எங்கோ இருக்கிறது.
கோவிலுக்குப் போகலாம், சுவாமியை தரிசனம் பண்ணலாம், மனம் அங்கு இருந்தால் தானே....கண்ணை மூடினால் வீட்டுப் பிரச்சனை, அலுவலகப் பிரச்சனை, மாமியார் பிரச்சனை என்று ஏதேதோ மனதுக்குள் ஓடுகிறது.
அதை எல்லாம் விட்டு விட்டு, பெருமாளே உன்னை மட்டும் கண்டு களிக்கும் நாள் எந்நாளோ என்று ஏங்குகிறார்.
அற்புதமான பாசுரம்.
பாடல்
*
இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே
*
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_72.html
(click the above link to continue reading)
இருளிரியச் = இருளை அரிய, இருளை கிழித்துக் கொண்டு
சுடர் = சுடர் விடும்
மணி களிமைக்கும் = மணிகள விட்டு விட்டு பிரகாசிக்கும்
நெற்றி = நெற்றி
இனத்துத்தி = புள்ளிகளை உடைய
யணி = அழகாக
பணமா யிரங்க ளார்ந்த = ஆயிரம் படங்கள் படம் எடுத்து ஆட (ஆர்த்த = எழுந்து நிற்க)
அரவரசப் = அரவுகளுக்கு (பாம்புகளுக்கு) அரசனான
பெருஞ்சோதி = பெரிய ஜோதி வடிவான
யனந்த னென்னும் = அனந்த ஆழ்வார் என்று அழைக்கப்படும்
அணிவிளங்கு = அழகு மிகுந்த
முயர் = உயர்ந்த
வெள்ளை யணையை = வெண்மையான தலையணையில்
மேவி = துயின்று
திருவரங்கப் பெருநகருள் = திருவரங்கம் என்ற பெரிய நகரில்
தெண்ணீர்ப் = தெளிந்த நீர்
பொன்னி = பொன்னி நதி
திரைக் = அலை என்ற
கையால் = கையால்
அடிவருடப் = திருவடிகளை வருட
பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும்
கருமணியைக் = கரிய மணியை
கோமளத்தைக் = கோமளத்தை
கண்டு கொண்டு = கண்டு கொண்டு
என் = என்னுடைய
கண்ணிணைகள் = கண் + இணைகள் = இரண்டு கண்களும்
ளென்றுகொலோ = எப்போது
களிக்கும் நாளே = இன்பமுறும் நாள் ?
பொன்னி நதியில் அலை அடிக்கிறது. அது பெருமாளின் பாதங்களை வருடி விடுவது போல் இருக்கிறதாம்.
குலசேகர ஆழ்வாரைப் போல அனுபவிக்க முடியுமா?
பெருமாள் முன் நிற்கிறார்....
பெருமாளின் வடிவம், பின்னால் உள்ள ஆதிசேஷன் உயிர் கொண்டு எழுந்து அந்த படங்களில் இருந்து கண்கள் ஒளி விடுவது போல இருக்கிறது. அவரின் பார்வை இன்னும் விரிகிறது. தலையில் இருந்து கால் நோக்கி வருகிறார். அங்கு பொன்னி நதி சல சலத்து ஓடிக் கொண்டிருக்கிறது. அது பெருமாளின் பாதங்களை வருடுவது போல் இருக்கிறது.
அதில் இலயித்து இருக்கும் போது மனம் எங்கோ ஓடுகிறது. அந்த அனுபவ இன்பத்தை முழுமையாக அடைய முடியவில்லை. வந்த காட்சி ஓடி விட்டது.
அதை எப்போது அடையப் போகிறேனோ என்று ஏங்குகிறார்.
குலசேகர ஆழ்வார் பாடு அப்படி.
நாம் எல்லாம் எந்த மூலை என்று நாமே அறிந்து கொள்ள வேண்டியதுதான்.
எந்த அனுபவமும் நமக்கு முழுமையாக கிடைப்பது இல்லை. ஒன்றைப் பற்றும் போதே மனம் அதை விட்டு விட்டு மற்றொன்றுக்குத் தாவுகிறது.
மனம் ஒன்றி அந்தக் காட்சியில் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.
பொருள் முழுவதுமாக தெரிந்த பின், பாசுரத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.
சீர் பிரித்த பின்
இருள் அரிய சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்த்த
அரவு அரசன் பெருஞ் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே
படித்தவுடன் பரவசமாகிறது.அதே சமயம் ஆழ்வாரைப் போல அனந்தனையும், அடி வருடும் பொன்னியையும் எண்ணிப் பார்க்ககூட முடியாத என் இயலாமை என் ஈன நிலையை காட்டுகிறது.
ReplyDeleteஅற்புதமான பாசுரம், அதை மிக அழகாக விளக்கினதற்கு என்நன்றி
படித்தவுடன் பரவசமாகிறது.அதே சமயம் ஆழ்வாரைப் போல அனந்தனையும், அடி வருடும் பொன்னியையும் எண்ணிப் பார்க்ககூட முடியாத என் இயலாமை என் ஈன நிலையை காட்டுகிறது.
ReplyDeleteஅற்புதமான பாசுரம், அதை மிக அழகாக விளக்கினதற்கு என்நன்றி
உமது பெருமாள் திருமொழி மிகவும் நன்றாக உள்ளது. அனைத்து பாசுரங்களும் வேண்டும். லிங்க் இருந்தால் அனுப்பவும். தங்களது தொடர்பு எண் தரவும். நன்றி.
ReplyDeletemy email id is rethin@hotmail.com
Delete