திருக்குறள் - நீத்தார் பெருமை - பனுவல் துணிவு - பாகம் 1
ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பரிமேலழகர் ஒரு அதிகாரப் பாயிரம் சொல்லுவார். அதாவது, அந்த அதிகாரம் எதைப் பற்றியது, ஏன் அந்த அதிகாரம் அந்த இடத்தில் இருக்கிறது என்பதற்கான காரணம் சொல்லி, பின் உரை எழதப் புகுவார்.
யோசித்துப் பாருங்கள். மொத்தம் 133 அதிகாரங்கள் இருக்கின்றன. நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தை மூன்றாவதாக ஏன் வைக்க வேண்டும்? அதற்கு ஒரு காரணம் இருக்கிறதா என்று ஆராய்ந்து அதை கூறுவார்.
இங்கே,
"அஃதாவது ,முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல். அவ் அறமுதற்பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவார் அவர் ஆகலின், இது வான் சிறப்பின்பின் வைக்கப்பட்டது."
என்று கூறுகிறார்.
இந்த அதிகாரம் "முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல்" என்கிறார். எனவே, இந்த அதிகாரத்தில் என்ன படிக்கப் போகிறோம் என்பது தெளிவாகி விட்டது.
யார் அந்த முற்றத் துறந்த முனிவர் என்றால் "அறமுதற்பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவார் " என்று உரை எழுகிறார். உள்ளது உள்ளபடி கூற அவரால்தான் முடியும். காசுக்காகவோ, புகழுக்காகவோ சொல்ல மாட்டார். உள்ளவாறு உணர்த்துவார். தெய்வத்தின் பேரைச் சொல்லி பணம் சம்பாதிக்க நினைப்பவர் அல்லர். அவருக்கு பணம் வேண்டாம். அவர் தான் முற்றத் துறந்தவராச்சே. பணம், பொருள், புகழ், சுகம், பெருமை, அதிகாரம் என்று எதிலும் பற்று இல்லாதவர். அவர் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
சரி, இந்த அதிகாரத்தை ஏன் இங்கே கொண்டு வைத்து வைத்தார்?
அறம் என்பது இறைவன் வடிவம். எனவே முதலில் இறை வணக்கம். பின், அந்த அறம் நிலைக்க மழை வேண்டும். யார் என்ன சொன்னாலும், மழை இல்லாவிட்டால் அறம் நிற்காது என்பதால் வான் சிறப்பு என்ற அதிகாரம் இரண்டாவது.
எது அறம், எது அறம் அல்ல என்று சொல்ல ஒரு ஆள் வேண்டுமே? அந்த ஆள் தான் நீத்தார் என்பதால், "நீத்தார் பெருமை" மூன்றாவதாக வருகிறது.
இனி அதிகாரத்துக்குள் செல்வோம்.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1.html
(please click the above link to continue reading)
ஒழுக்கத்து நீத்தார் = ஒழுக்கத்தின் கண் நின்று நீத்தாரது
பெருமை = பெருமை
விழுப்பத்து வேண்டும் = பெருமையை விரும்பும், உயர்ந்தவற்றை விரும்பும்
பனுவல் = நூல்களின்
துணிவு. = முடிவு
ஒழுக்கத்தின் கண் நின்று நீத்தாரது பெருமையே எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று உயர்ந்தவற்றைப் பற்றி பேசும் அனைத்து நூல்களும் உறுதியாகச் சொல்கின்றன.
பார்க்க மிக சாதாரண குறள் போல் தெரியும்.
அதற்கு பரிமேல் அழகர் செய்யும் உரை, நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
அது மிக மிக விரிவான ஒன்று என்பதால் அதை தனியே ஒரு ப்ளாகாக நாளை எழுதுகிறேன். இல்லை என்றால் இந்த ப்ளாக் மிக நீண்டு விடும். படிக்க ஒரு சோர்வு வந்து விடும்.
நாளையும் சந்திப்போம்.
No comments:
Post a Comment