Pages

Tuesday, May 11, 2021

திருமந்திரம் - இடிகரை நிற்குமோ

திருமந்திரம் - இடிகரை நிற்குமோ 


ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருக்கும் போது பார்க்க மிக அழகாக இருக்கும். சுளுத்திக் கொண்டு ஓடும் நீர், அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதக்கும் இலை தளைகள், கொஞ்சம் நுரை அங்கே, கொஞ்சம் சுழி இங்கே என்று ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருக்கும் ஆற்று நீரின் ஓட்டம். 


ஆறு அப்படி ஓடிக் கொண்டிருக்கும் போது, அதன் இரண்டு கரையிலும், ஆற்றின் நீர் அந்த கரையை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டே இருக்கும். 


சட்டென்று ஒரு கட்டி மண் விழும், ஒரு கல் மெல்ல புரண்டு ஆற்றோட்டத்தில் அடித்துக் கொண்டு போகும். 


ஆற்றின் கரைக்கு இடி கரை என்று பெயர். இடிந்து கொண்டே இருக்கும் கரை. வினையெச்சம். இடிந்த கரை, இடிந்து கொண்டே இருக்கும் கரை, இனியும் இடியும் கரை. 


அது போல, நம் வாழ்வும். 


ஒரு நாள் சந்தோஷம், ஒரு நாள் உற்றார் உறவினர் கூட கொண்டாட்டாம், ஒரு நாள் பிரிவு, புது உறவுகள் வரவு,  பழைய உறவுகள் விட்டுப் போதல், ஆரோக்கியம் பல நாள், அங்கொன்றும், இங்கொன்றுமாக நோய் சில நாள் என்று ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில், அதன் மொத்த நாளையும் இந்த கால வெள்ளம் அரித்துக் கொண்டே இருக்கும். 


ஒவ்வொரு நாளும் கொஞ்சம் அரித்து எடுக்கும். 


இளமை போகும். ஞாபகம் போகும்.  அழகு போகும். கொஞ்சம் கொஞ்சமாக. 


நமக்கு முன் வந்தவர்கள் எத்தனையோ பேர். எல்லோரும் முடிந்து போய் விட்டார்கள். இன்று இருப்பவர்களுக்கும், இனி வரப் போகிறவர்களும் நிரந்தரமாய் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒன்றும் இல்லை. எத்தனை மாத்திரை, மருந்து, சிகிச்சை, சோதனை செய்தாலும் என்ன? இடிகரை நிற்காதது போல, நம் வாழ்வும் நிலைக்காது என்கிறார் திருமூலர். 


பாடல் 

 

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர் 

பின்னை வந்தவர்கென்ன பிரமாணம் 

முந்நூறு கோடி உறுகதி பேசிடில் 

என்ன மாயம் இடிகரை நிற்குமோ 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_11.html


(please click the above link to continue reading)




முன்னம் வந்தனர் = நமக்கு முன்னால் வந்தவர்கள் 


எல்லாம் முடிந்தனர்  = எல்லோரும் இறந்து போய் விட்டார்கள் 


பின்னை வந்தவர்கென்ன பிரமாணம் = பின்னால் வரப் போகிறவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?


முந்நூறு கோடி  =  முந்நூறு கோடி


உறுகதி பேசிடில்  = பிழைக்கின்ற வழி பற்றி சிந்தித்தாலும் 


என்ன மாயம் = என்ன மாயம் 


இடிகரை நிற்குமோ  = இடி கரை நிற்குமோ? (நிற்காது என்பது பொருள்) 


அலோபதி, ஹோமியோபதி, அன்குபஞ்சர், ஆயுர்வேதம், கபசுர குடிநீர், நோய் தடுப்பு ஊசி என்று ஆயிரம் இருந்தாலும், இடிகரை இடிவதை தடுத்து நிறுத்த முடியாது. 


இருக்கின்ற வரை, அதை நல்ல வழியில் பயன் படுத்த வேண்டும். 






2 comments:

  1. வந்தவரெல்லாம் ஒருநாள் போகத்தானே வேண்டும்?

    ReplyDelete
  2. மூன்றாம் தந்திரம் - 7. தாரணை என்ற பகுதியின் 8 வது பாடலை அடுத்து இடைச்செருகலாக கீழேயுள்ள பாடலைக் குறிப்பிடப்படுகிறது.

    திருமந்திரத்தில் உள்ள பாடல்கள் அனைத்துமே ‘வெண்டளை பயிலும் கலிவிருத்தங்களாகும்.

    ஆனால், கீழேயுள்ள பாடலில் இலக்கணம் மாறுபடுகிறது.

    முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
    பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
    முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
    என்ன மாயம் இடிகரை நிற்குமே.

    ReplyDelete