Pages

Saturday, May 8, 2021

திருக்குறள் - நீத்தார் பெருமை - இந்திரனே சாலும் கரி

 திருக்குறள் - நீத்தார் பெருமை - இந்திரனே சாலும் கரி 


ஐந்து பபுலன்களின் வழி செல்லும் ஆசைகளை நீத்தவனின் பெருமைக்கு இந்திரனே சாட்சி என்கிறார் வள்ளுவர். 


குறளுக்குள் போவதற்கு முன், ஒரு சில விடயங்களை புரிந்து கொள்வது நலம். 


இந்து சமயத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு கடவுள் உண்டு என்று வைத்து இருக்கிறோம்.  காற்று என்றால் அதற்கு ஒரு கடவுள் (வாயு பகவான்); தீ என்றால் அதற்கு ஒரு கடவுள் (அக்னி பகவான்) என்று எல்லாவற்றிற்கும் ஒரு கடவுள். அதே போல் சந்திரன் என்றால் ஒரு கடவுள், சூரியன் என்றால் ஒரு கடவுள். 



இது என்ன ஒரு அறிவு சார்ந்த விடயமாகத் தெரியவில்லையே. ஏதோ அறிவு குறைந்த அந்த நாட்களில் எழுதி இருப்பார்களோ? அதையே இன்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களோ? 



இன்று சந்திரனுக்கு ராக்கெட் எல்லாம் அனுப்பி, ஆட்கள் அங்கே இறங்கி விட்டார்கள். இன்னும், அதை ஒரு சந்திர பகவான் என்று சொல்லுவது சரியா?



நம்மவர்கள் எந்த ஒரு பொருளுக்கும் இரண்டு வடிவம் உண்டு என்று நம்பினார்கள். ஒன்று தூல வடிவம். இன்னொன்று சூக்கும வடிவம். வடிவம் என்றால் ஒரு குறியீடு. 



நான் ஐந்து வயதாக இருக்கும் போது ஒரு மாதிரி இருந்தேன். ஐம்பது வயதில் வேறு மாதிரி இருக்கிறேன். ஆனால் இரண்டும் நான் தான். எப்படி? என் புகைப் படத்தை பார்த்தால் எனக்கே சந்தேகம் வருகிறது அது நான் தானா என்று.  



தூல வடிவம் மாறிக் கொண்டே வருகிறது. உயரம் கூடும், முகம் மாறும், முடி நரைக்கும், பல் விழும், தோல் சுருங்கும், குரல் மாறும். ஆனாலும், இவற்றிற்கு எல்லாம் அடிப்படையில் மாறாத "நான்" என்று ஒன்று இருக்கிறது அல்லவா? அது சூக்கும வடிவம். அது கண்ணுக்குப் புலப்படாத வடிவம். 



அந்த சூக்கும வடிவத்தைத் தான் நம்மவர்கள் தேவர்கள்/கடவுள்கள் என்று வழிப்பட்டார்கள். 



இன்றும் கூட, கடவுள் கோட்பாட்டை நம்பாதவர்கள் கூட தங்கள் முன்னவர்களின் சமாதியில் சென்று வழி படுகிறார்கள், பூ தூவுகிறார்கள். காரணம் என்ன? அந்த சமாதியின் சிமெண்டும், கல்லும், ஜல்லியும், வணக்கத்துக்கு உரியன என்பதலா? இல்லை. சமாதி தூல வடிவம். உள்ளே இருப்பதாக நம்பும் முன்னோர் சூக்கும வடிவம்.  சமாதியை வழிபடுவது அல்ல.



போட்டோ தூல வடிவம். அதில் உள்ளவர் சூக்கும வடிவம். 


அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 


இப்படி பல தேவுக்கள் இருக்கிறார்கள். வருணன், அக்னி, வாயு என்று. இவர்களுக்கு எல்லாம் தலைவன் இந்திரன். 


சாதாரண மானிடர்கள் இந்த தேவுக்களை வழிபாடு செய்வார்கள். அக்னி வழிபாடு, சூரிய நமஸ்காரம் என்று. 


நாம் இவர்களை வழிபடுகிறோம். அவர்கள் இந்திரனை வழி படுகிறார்கள். அப்பேற்பட்ட இந்திரன் ஐந்து புலன்களையும் வென்ற ஒரு முனிவனிடம் சாபம் பெற்று நின்றான் என்றால் அந்த புலன்களை வென்ற முனிவர்களின் சக்திக்கு அவனே தான் சான்று?


அகலிகை என்ற முனி பத்தினியை இந்திரன் விரும்ப, அவளை தகாத முறையில் அடைய முயற்சி செய்கிறான். அவன் கபட நாடகத்தை அறிந்த கௌதமர், இந்திரனை சபித்து விடுகிறார். அது கதை. புராணம். 


புலனடக்கம் இல்லாததால் இந்திரன் சாபம் பெற்றான். 


புலனடக்கம் இருந்ததால் அந்த முனிவர் இந்திரனுக்கே சாபம் கொடுத்தார்.


எனவே, புலன் அடக்கத்தின் பெருமைக்கு இந்திரனே சாட்சி என்கிறார். 


இனி, குறளைப் பார்ப்போம். 


பாடல் 


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_8.html


(please click the above link to continue reading)


ஐந்தவித்தான் = ஐந்து புலன்கள் வழி செல்லும் ஆசைகளை அறுத்தவன் 


ஆற்றல் = அவனுடைய ஆற்றல் 


அகல்விசும்பு ளார் = பெரிய வானத்தில் இருக்கும் தேவர்களின் 


கோமான் = அரசன் 


இந்திரனே = இந்திரனே 


சாலுங் கரி = அமையும் சான்று. கரி என்றால் சான்று. நிரூபணம். 




3 comments:

  1. பரிமேலழகர் உரையும் இந்திரன் சாபம் பெற்ற கதையை சுட்டி இருக்கிறதா, ஐயா? தங்கள் விளக்கத்திற்கு மிக்க ந‌ன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆம். பரிமேலழகர் உரையில் இந்திரன் சாபம் பெற்றது பற்றி இருக்கிறது.

      "தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்."

      என்பது பரிமேலழகர் உரைக் குறிப்பு.

      Delete
    2. பதில் அளித்து தெளிவு படுத்தியமைக்கு மிக்க ந‌ன்றி!

      Delete