திருக்குறள் - அறத்தின் இயல்பு
நாம் அற வழியில் செல்கிறோமா அல்லது வேறு ஏதாவது தவறான பாதையில் செல்கிறோமா என்று எப்படித் தெரியும்?
எல்லோரும் செய்வதைப் போலத்தான் நாமும் செய்கிறோம். இருக்கிறோம். சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்வது இல்லை. இதெல்லாம் அறம் இல்லையா? வேறு என்ன செய்ய வேண்டும்?
எப்போது நாம் அறம் அற்ற பாதையில் செல்கிறோம் என்று தெரிந்து கொள்வது?
ஒவ்வொரு செயலுக்கு முன்னாலும் யாரிடமாவது போய் கேட்க முடியுமா - இது சரியா, இது அறமா என்று?
ஒண்ணே முக்கால் அடியில் இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்.
இன்னொரு நூறு பிறவி எடுத்தாலும் நமக்கு அது தோன்றாது.
பாடல்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_10.html
(please click the above link to continue reading)
அழுக்காறு = பொறாமை
அவா = ஆசை
வெகுளி = கோபம்
இன்னாச்சொல் = தீய சொற்கள்
நான்கும் = என்ற இந்த நான்கையும்
இழுக்கா = விலக்கி
இயன்றது = செய்வது
அறம் = அறம்
நினைத்துப் பார்க்க முடியமா நம்மால்?
அழுக்காறு - பொறாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமை.
அவா - புலன்கள் மேல் செல்கின்ற ஆசை என்கிறார் பரிமேலழகர்
கோபம் - பொறாமையாலும், புலன்கள் மேல் செல்லும் ஆசையாலும் கோபம் வரும். கோபம் எப்போது வரும், நமக்கு வேண்டியது கிடைக்காத போது கோபம் வரும். நாம் எதிர் பார்த்தது கிடைக்காத போது கோபம் வரும். வேண்டியது, எதிர் பார்த்தது எல்லாம் ஆசையால் விளைவது. அல்லது, மற்றவனுக்கு கிடைத்து விட்டதே, எனக்கு கிடைக்கவில்லையே என்று கோபம் வரும்.
இன்னா சொல் = இனிய சொல் என்பதன் எதிர்பதம். நீங்கள் மற்றவர்களிடம் இனிமையாக பேசவில்லையா, நீங்கள் அறம் தவறி நடக்கிறீர்கள் என்று அர்த்தம். துன்பம் தரும் சொல். பயனில்லாத சொல்.
இராமனை காட்டுக்குப் போ என்று தசரதன் சொன்னதாக கைகேயி சொல்லி விடுகிறாள். அதை அறிந்த இலக்குவன் கொந்தளிக்கிறான்.
அப்போது இராமன் சொல்கிறான்
"மறை தந்த நாவால் இப்படித் எல்லாம் கோபம் கொண்டு பேசலாமா" என்று
ஆய் தந்து, அவன், அவ் உரை கூறலும் ‘ஐயன், ‘நின் தன்
வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால்?
நீ தந்தது அன்றே நெறியோர் கண் இலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால் அவர்மேல் சலிக்கின்றது என்னோ? ‘
கோபமும் கூடாது. இன்னா சொல்லும் கூடாது என்பது விளங்கும்.
இந்த நான்கையும் விலக்கி, இடைவிடாமல் செய்வது அறம்.
மாதத்திற்கு ஒரு நாள் கோபப் படமாட்டேன் என்றால் அது அறம் அல்ல. எப்போதுமே கோபப் படக் கூடாது.
வெள்ளி செவ்வாய் தண்ணி அடிக்க மாட்டேன் என்பதெல்லாம் அறத்தில் சேர்த்தி இல்லை.
வியாழக் கிழமை மாமிசம் உண்பதில்லை. ஜீவ காருண்யம்.
இந்த நான்கில் ஒன்று மனதில் இருக்கும் போது எது செய்தாலும் அது அறம் இல்லை.
"இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க."
என்கிறார் பரிமேலழகர்.
இதை வைத்துக் கொண்டு செய்வது அறம் அல்ல.
பக்கத்து வீட்டுக் காரன் நாசாமாகப் போக வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே சாமி கும்பிட்டால் அது அறமாகாது.
எப்போது இந்த நான்கில் ஏதோ ஒன்று மனதில் இருக்கிறதோ, அப்போதே நாம் அறம் அற்ற வழியில் செல்லப் போகிறோம் என்று அறிந்து கொள்ளலாம்.
நமக்குத் தெரியாதா நம் மனம்.
பொறாமை படுவது சட்டப் படி குற்றம் அல்ல. ஆனால், அது அறம் அல்ல.
யாரையும் கேட்க வேண்டாம். நமக்கே தெரியும் நம் மன நிலை. அதை வைத்து நாம் அறத்தின் பாதையில் செல்கிறோமா இல்லையா என்று அறிந்து கொள்ளலாம்.
போன குறளில் "மனதுக்குள் மாசிலன் ஆதல்" என்று கூறி விட்டார். இந்தக் குறள் அதன் தொடர்ச்சியாக வருவது போல இருக்கிறது.
ReplyDelete