பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள்
நம் வீடாகவே இருந்தாலும், இருட்டில் மாட்டிக் கொண்டால் எது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் முட்டி மோதிக் கொள்வோம். கண் இருக்கிறது. பார்வை இருக்கிறது. அறிவு இருக்கிறது. தெரிந்த இடம்தான். இருந்தும், இருட்டில் ஒன்றும் தெரியாது அல்லவா.
அது போல, உலகம் இருக்கிறது. நமக்கு அறிவு இருக்கிறது. தெரிந்த இடம்தான். பழகிய இடம்தான். இருந்தும், அறியாமை என்ற இருள் இருந்தால் என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்று தெரியாமல் தப்புத் தவறாக செய்து காயப் பட்டுக் கொள்வோம்.
புற இருளை நீக்க சூரியன் இருக்கிறது. அக இருளை நீக்க ?
அறியாமையை நீக்க இந்த பெரிய புராணம் என்ற நூலை எழுதுகிறேன் என்று நூல் காரணம் சொல்கிறார்.
பாடல்
இங்கு இதன் நாமம் கூறின், இவ் உலகத்து முன்னாள்
தங்கு இருள் இரண்டில், மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை, ஏனைப் புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_18.html
(Please click the above link to continue reading)
இங்கு = இங்கு
இதன் = இதன்
நாமம் கூறின் = இந்த நூலின் பெயரை கூறினால்
இவ் உலகத்து = இந்த உலகில்
முன்னாள் = முன்பு
தங்கு இருள் = தங்கிய இருள்
இரண்டில் = இரண்டில்
மாக்கள் = சிந்திக்கும் திறம் அற்றவர்களின்
சிந்தையுள் சார்ந்து நின்ற = சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை = பொங்கிய இருளை
ஏனைப் = மற்ற
புற இருள் போக்கு கின்ற = புறத்தில், வெளியில் உள்ள இருளை போக்குகின்ற
செங் கதிரவன் போல் = சிவந்த சூரியனைப் போல
நீக்கும்= நீக்கும்
திருத் தொண்டர் புராணம் = திருத் தொண்டர் புராணம்
என்பாம் = என்று கூறுவோம்
புற இருளை நீக்குகின்ற சூரியனைப் போல அக இருளை நீக்குகின்ற நூல் இது. இதன் பெயர் திரு தொண்டர் புராணம்.
இது தொண்டர்களைப் பற்றியது. இறைவனைப் பற்றியது அல்ல.
"சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருள்" என்று நான்கு அடை மொழி போடுகிறார் சேக்கிழார்.
மனதில் உள்ள இருள்
மனதை சார்ந்து நிற்கும் இருள். பற்றிக் கொண்டு இருக்கும் இருள்.
நிற்கும் இருள். ஏதோ வந்தோம், போனோம் என்று இருக்காது. நிற்கும் இருள்.
பொங்கும் இருள். நின்றால் மட்டும் போதாது. பொங்கும் இருள். நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கும்.
யோசித்துப் பாருங்கள். ஒரு ஊருக்குப் போக வேண்டும். தவறான பாதையில் போகத் தொடங்கி விட்டீர்கள். எவ்வளவு வேகமாக போனாலும், போய்ச் சேர வேண்டிய இடம் வராது. என்னடா இது இன்னும் வரலியே என்று இன்னும் வேகமாக வண்டியை ஓட்டினால் என்ன ஆகும். சேர வேண்டிய இடத்தை விட்டு மேலும் விரைவாக விலகிச் செல்வோம் அல்லவா?
அது போல, தவறு செய்ய ஆரம்பித்து விட்டால், அது தவறு என்று தெரியாவிட்டால், தொடர்ந்து மேலும் மேலும் அதை செய்து கொண்டே இருப்போம். பழக பழக அது இலகுவாகி விடும். அதிகமகாச் செய்வோம்.
பொங்கிய இருள்.
அப்புறம், அங்கு ஒருவர் வந்து நாம் செல்ல வேண்டிய ஊருக்கு போகும் வழி உள்ள map ஐ நம்மிடம் தருகிறார். அடடா, இப்படி போகனுமா? தெரியாம இந்த வழியில் வந்து விட்டேனே என்று நாம் நம் பாதையை திருத்திக் கொள்வோம் அல்லவா. அது போல, வழிகாட்டி இந்த நூல் என்கிறார்.
அது உண்மையும் கூட. எப்படி என்றால், செல்லும் ஊருக்கு ஒரு வழி அல்ல 64 வழிகளை காட்டுகிறார்.
நடந்து போனால் இப்படி, இரண்டு சக்கர வாகனம் என்றால் இப்படி, நாலு சக்கர வாகனம் என்றால் இப்படி, பறந்து போவது என்றால் இப்படி என்று 64 வழிகளை காட்டுகிறார்.
நீங்கள் உங்களுக்கு வேண்டிய வழியை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
அது மட்டும் அல்ல,
வழி தவறி பல பேர் பல இடங்களில் அலைந்து கொண்டு இருப்பார்கள்.
செல்ல வேண்டிய இடம் ஊருக்கு நடுவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அந்த இடத்துக்கு வடக்கில் இருகிறீர்கள் என்றால், உங்களுக்கு வழி சொல்லும் போது தெற்கே போக வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
அது போல, தெற்கில் ஒருவர் இருந்தால் அவரை வடக்கு நோக்கி போகச் சொல்ல வேண்டும். மேற்கில் இருந்தால் கிழக்கு நோக்கியும், கிழக்கில் இருந்தால் மேற்கு நோக்கியும் போகச் சொல்ல வேண்டும்.
எல்லோருக்கும் ஒரு வழி காட்ட முடியுமா? எல்லோரும் தெற்கே போங்கள் என்றால் சரியாக இருக்குமா. இருக்கும் இடத்ததை வைத்துக் கொண்டு , போகும் இடத்துக்கு வழி சொல்ல வேண்டும்.
எனவே, பல வழிகள் தேவைப் படுகிறது.
எனவே தான் இது பெரிய புராணம். அத்தனை வழிகள்.
மேலும் சிந்திப்போம்.
பாடலும் தங்கள் விளக்கமும், மிக இனிமை! 64 வழிகளா? அனைத்தும் பக்தி மார்க்கத்தின் வழிகளா? அறிந்து கொள்ள ஆவலாக, சித்தமாக இருக்கிறோம்!
ReplyDeleteThanks to you, your daily posts enable me to have a mental shower to clear the long accumulated muck in my mind. Pray, continue this job to remove the darkness.
ReplyDeleteநல்ல விளக்கம்
ReplyDelete