Pages

Saturday, June 5, 2021

திருக்குறள் - அறன் வலியுறுத்தல் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - அறன் வலியுறுத்தல் - ஒரு முன்னோட்டம் 


திருக்குறளை ஏன் அறம், பொருள், இன்பம் என்று வகுக்க வேண்டும். 


முதலில் ஏன் இன்பத்தை வைக்கக் கூடாது?


இன்பம், பொருள், அறம் என்று வைத்தால் என்ன?  இன்பம் தானே வாழ்வின் குறிக்கோள்? இன்பம் இல்லாத எதையும் ஏன் செய்ய வேண்டும்? அப்படி இருக்க அதற்குத்தானே முதல் இடம் தந்து இருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு ஏன் அறத்தை முதலில் வைத்தார்?


சரி, ஏதோ வைத்து விட்டார். போகட்டும். இரண்டாவது இடத்தையாவது இன்பத்துக்கு தந்து இருக்கலாமே? ஏன் பொருளுக்கு இரண்டாவது இடம். இன்பத்தை ஏன் கடைசியில் தள்ளி விட்டார்? 


உண்பது, உறங்குவது, chat செய்வது, டிவி பார்ப்பது எல்லாம் இன்பம்தான். வேலை செய்வது, படிப்பது (நல்ல நூல்களை) என்பது எல்லாம் கடினம்தான். 

என்ன செய்யலாம்? இன்பம் தருபவற்றை மட்டும் செய்வோம். நேரம் இருந்தால் மற்றவற்றை செய்வோம் என்று இருப்போமா? அப்படி இருந்தால் வாழ்வு தடம் புரண்டு விடாதா?


இன்பம் என்பது இந்த பிறவிக்கு மட்டும் நன்மை பயப்பது. அதுவும் கூட சில நிமிடத் துளிகள்.


பொருள் என்பது இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை பயப்பது. பொருள் இருந்தால் மற்றவர்களுக்கு உதவி செய்யலாம், நாட்டுக்கு சில நன்மைகள் செய்யலாம். அவற்றால் புண்ணியம் வரும். அதனால் சுவர்க்கம் அல்லது நல்ல மறு பிறவி கிடைக்கும். 


அறம் என்பது இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை பயப்பதோடு அல்லாமால், வீடு பேறு அடையவும் உதவி செய்யும் என்பதால், மிகுந்த பயன் தரக் கூடிய ஒன்றை முதலிலும், அதை விட குறைந்த நன்மை தருவதை இரண்டாவதும், அதையும் விட குறைந்த நன்மை தருவதை மூன்றாவதும் வைத்தார். 


நான் சொல்லவில்லை...பரிமேலழகர் கூறுகிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_5.html


(Please click the above link to continue reading)


"அஃதாவது, அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்"


அறம் என்பது இம்மை, மறுமை, வீடு என்ற மூன்றையும் தருவதால், அந்த அறம் மற்ற இரண்டையும் விட உயர்ந்தது என்பதால் அதை முதலில் கூறினார் என்றார். 


நம் முன் பல காரியங்கள் இருந்தால், முதலில் எதைச் செய்வோம்? 


எளிதான காரியத்தை முதலில் செய்வோமா? அல்லது கடினமான வேலையை முதலில் செய்வோமா? 


பெரும்பாலானோர் முதலில் எளிய காரியத்தை செய்யத் தலைப்படுவார்கள்.


முதலில் whatsaap, அப்புறம் கொஞ்சம் மெயில், அப்புறம் facebook, அப்புறம் youtube, அப்புறம் sms, அப்புறம் netflix, என்று இதெல்லாம் முடித்த பின், நேரம் இருப்பின் நல்ல காரியங்கள் செய்ய நேரம் ஒதுக்குவார்கள். 


முதலில் நல்ல காரியங்களை, பெரிய காரியங்களை, பயன் தரும் காரியங்களை செய்ய வேண்டும். பின், மற்ற காரியங்கள். 


முதலில் அறம், அப்புறம் பொருள் பின்தான் இன்பம். முதலில் இன்பத்தின் பக்கம் போனால், அப்புறம் அறத்தின் பக்கம் வர நேரமே இருக்காது. 


சரி, அறம் என்றால் என்ன? எங்காவது எழுதி வைத்து இருக்கிறதா?  எப்படி கண்டு பிடிப்பது? எல்லா காலத்துக்கும் ஒரே அறம் இருக்குமா? 


அதற்கும் பரிமேலழகர் உரை கூறுகிறார் 


"அஃதாவது, அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள்"


அஃதாவது என்றால், அறமாவது 


அம்முனிவரான் - எம்முனிவரான்? முற்றும் துறந்த முனிவரான், முந்தைய அதிகாரத்தில் கூறிய நீத்தார். அவர்கள் கூறியது தான் அறம். அறம் பற்றிய சந்தேகம் இருந்தால், அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும். 


இன்றைய உலகின் சிக்கல் என்ன என்றால், முதலில் முற்றும் துறந்தவர் என்று யாரும் இல்லை. இரண்டாவது சிக்கல், நாம் நம்மை விட கீழே உள்ளவர்கள் சொல்வதை, செய்வதை அறம் என்று கொண்டு அவற்றை செய்யத் தலைப்படுகிறோம். 


நம்மை விட அறிவில், ஒழுக்கத்தில் குறைந்தவர்கள் செய்வது பலரை வசீகரம் செய்தால், அதுவே புது ஒழுக்கமாகி விடுகிறது.  அதுவே அறமாகி விடுகிறது. 


உயர்ந்தோர் சொல்வதே அறம்.  


அந்த அறத்தின் வலிமை பற்றிக் கூறுவது அடுத்த அதிகாரமான "அறன் வலியுறுத்தல்"


2 comments:

  1. அறம், பொருள், இன்பம் இவற்றின் தன்மை எண்ணிப் பார்க்கத் தக்கது. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. வடமொழியில், "தர்மம், அர்த்தம் (பொருள்), காமம், மோட்சம்" என்று நான்காகப் பிரித்து இருக்கிறார்கள். வள்ளுவரோ "அறம், பொருள், இன்பம்" என்று மூன்றாகப் பிரித்து, அறத்திலிருந்து மோட்சம் (வீடு) கிடைக்கிறது என்கிறார். ஏன் இந்த வித்தியாசமோ தெரியவில்லை.

    ReplyDelete