Pages

Sunday, June 6, 2021

திருக்குறள் - சிறப்பும் செல்வமும் ஈனும்

 திருக்குறள் - சிறப்பும் செல்வமும் ஈனும் 


அறம் அறம் என்று சொல்கிறார்களே, அதை ஏன் கடை பிடிக்க வேண்டும்? கடை பிடித்தால் என்ன நன்மை? கடை பிடிக்காவிட்டால் என்ன நட்டம் வந்து விடும்? 


இந்த கேள்விகளுக்கு விடை தருவது இந்த அதிகாரம். 


பாடல் 


சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_51.html


(please click the above link to continue reading)



சிறப்புஈனும் = சிறப்பு தரும் 

செல்வமும் ஈனும் = செல்வமும் தரும் 

அறத்தினூஉங்கு = அறத்தை விட 

ஆக்கம் = ஆக்கம் 

எவனோ உயிர்க்கு = எது உயிர்களுக்கு ?


சிறப்பையும், செல்வதையும் தரும் அறத்தை விட பெரிய உறுதி உயிர்களுக்கு இல்லை. 


இப்படித்தான் உரை எழுதிக் கொண்டு சென்று இருப்போம். பரிமேலழகர் இல்லை என்றால் இவற்றின் அர்த்தம் ஒன்றும் புரிந்து இருக்காது. 


சிறப்பு என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு பதில் சொல்கிறார். 


சிறப்பு என்றால் படித்து வாங்கும் பட்டம், இரசிகர்கள் தரும் அடை மொழிகள், அரசாங்கம் தரும் விருதுகள் இவையா? 


இதெல்லாம் ஒரு சிறப்பு இல்லை. 


அனைத்திலும் பெரிய சிறப்பு, வீடு பேறு அடைவதுதான்.  அதைவிட பெரிய சிறப்பு என்ன இருக்க முடியும்.  எனவே, அறம் என்பது வீடு பேற்றினைத் தரும். 


சரி, செல்வமும் ஈனும் என்றால், என்ன செல்வம்? காசு, பணம், வீடு வாசல் போன்ற செல்வங்களா? 


இல்லை. செல்வம் என்றால் துறக்கம் முதலியன என்கிறார். துறக்கம் என்றால் ஸ்வர்கம். 


சொர்கத்தைத் தரும். அதற்கும் மேலே வீடு பேற்றையும் தரும். 


அது சரி பரிமேலழகர் தன் இஷ்டத்துக்கு உரை சொல்லலாமா? சிறப்பு என்றால் வீடு பேறு, செல்வம் என்றால் ஸ்வர்கம் என்று குறளில் எங்கே இருக்கிறது என்று கேள்வி கேட்கலாம்.  இப்படி ஆளாளுக்கு ஒரு உரை சொன்னால், வள்ளுவர் என்ன நினைத்து சொன்னார் என்று எப்படித் தெரியும்?


அதற்கும் பரிமேலழகர் விடை சொல்கிறார். 


"ஆக்கம் எவனோ உயிர்க்கு"


ஆக்கம் என்றால் மேலும் மேலும் பெருகுவது. மேலும் மேலும் உயர்ந்த நிலை அடைவது. 


அப்படி என்றால் ஒரு ரூபாய் சம்பாதித்தால், அதை விட மேலாக பத்து ரூபாய் சம்பாதிக்கலாம். அப்புறம் நூறு, ஆயிரம், கோடி என்று போய் கொண்டே இருக்கும். அதற்கு மேல்? 


எனவே, இப்படியே போனால், எதற்கு மேலாக ஒன்று இல்லையோ அது வரை போகலாம் இல்லையா? அது தான் வீடு பேறு. அதற்கு மேல் ஒன்றும் இல்லை. எனவே "ஆக்கம்" என்ற குறளின் சொல்லில் இருந்து சிறப்பு என்பதற்கு வீடு பேறு என்று பொருள் கொண்டார்.  அதைவிட ஒரு படி கீழே, சுவர்க்கம் முதலியன. 


செல்வமும் என்று ஒரு 'ம்' சேர்கிறார். அப்படி என்றால், சுவர்க்கம் மட்டும் அல்ல, மற்ற செல்வங்களையும் தரும் என்பதாம். 


எனவே, அற வழியில் நடந்தால்,  இவை அனைத்தும் கிடைக்கும் என்றார். 


எனவே என்ன செய்ய வேண்டும்?




2 comments:

  1. எனவே அறத்தைப் பேண வேண்டும் ....ஆம் தானே அண்ணா

    ReplyDelete
  2. சிறப்பு, செல்வம் என்பவற்றின் பொருள் பரிமேல் அழகர் உரையை இந்த blog மூலம் படித்ததால்தான் தெரிகிறது. நன்றி.

    ReplyDelete