Pages

Tuesday, July 6, 2021

திருக்குறள் - இல்வாழ்க்கை - பாகம் 1


திருக்குறள் - இல்வாழ்க்கை - பாகம் 1 


இல்லறதுக்குள் அடி எடுத்து வைக்கிறோம். 


இல்லறம் என்றால் மனைவி, பிள்ளைகள் என்று இல்லற நெறியில் வாழ்வது. 


அதற்கு, முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். 


எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும்? 


இது என்ன கேள்வி? 


கல்யாணம் பண்ணிக் கொண்டால் மனைவியோடு (அல்லது கணவனோடு) உல்லாசமாக இருக்கலாம், பிள்ளைகளை பெற்றுக் கொள்ளலாம், அவர்களை வளர்ப்பது ஒரு சுகம், நமக்கென்று ஒரு வீடு, மனைவி, மக்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கலாம் ...இதற்குத்தானே கல்யாணம் பண்ணிக் கொள்கிறோம் என்பதே நம் விடையாக இருக்கும்.


இவை எல்லாம் சுய நலத்தின் பாற்பட்டது.


திருமணம், குடும்பம் என்பது அவ்வளவுதானா ? குடும்பத்திற்கு ஒரு சமுதாயப் பொறுப்பு என்று ஒன்றும் இல்லையா ?


இருக்கிறது.


ஒன்றல்ல இரண்டல்ல, பதினொரு பொறுப்புகளைச் சொல்கிறார் வள்ளுவர்.


திருமணம் என்பதே ஒரு மிகப் பெரிய பொறுப்பு என்கிறார்.


இந்தப் பொறுப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் திருமணம் செய்து கொள், இல்லையென்றால் திருமணம் உனக்கு ஏற்றது அல்ல என்கிறார்.


அது என்ன பதினொரு கடமைகள் ?


இருப்பது ஒண்ணே முக்கால் அடி, ஏழே ஏழு வார்த்தைகள் அதில் பதினொரு கடமையை எப்படிச் சொல்ல முடியும்?


மூன்று குறளாக பிரித்துக் கொண்டு, அந்த பதினொரு பொறுப்புகள் அல்லது கடமைகளைச் சொல்கிறார்.


முதல் குறள்


பாடல்


இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.


பொருள்



(please click the above link to continue reading)


இல்வாழ்வான் என்பான் = இல் வாழ்க்கையில் வாழ்பவன் என்பவன்


இயல்பு உடைய மூவர்க்கும் = இயல்பான மூன்று பேருக்கு


நல்லாற்றின் = அவர்கள் நல்ல வழியில் போக


நின்ற துணை = துணையாக


இந்தக் குறளின் விரிவு நம்மை வியக்க வைக்கும். 


ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் அவ்வளவு அர்த்தச் செறிவு 


அதிலும் பரிமேலழகர் செய்திருக்கும் உரை, நம்மால் நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று. 


"இல்வாழ்வான் என்பான் "


"இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது."

என்பது பரிமேலழகர் உரை. 

இல்வாழ்வான் என்றால் இல்லத்தில் வாழ்பவன் என்று அர்த்தம். இல்லத்தில் வாழாமல் வேறு எங்கு வாழ்வது?  இதை ஏன் சொல்கிறார் வள்ளுவர் என்று பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். 

இல் என்பது ஆகுபெயர். ஆகு பெயர் என்றால் ஒன்றின் பெயர் மற்றதிற்கு ஆகி வருவது. 

உலகம் பழிக்கும் அல்லது போற்றும் என்றால் உலகம் வந்து போற்றாது. உலகில் உள்ள மக்கள் போற்றுவார்கள் என்று அர்த்தம். இங்கே உலகம் என்பது உலகில் உள்ள மக்களுக்கு ஆகி வந்தது. 

அது போல,

இல்வாழ்வான் என்றால் இல்லற நெறியின் கண் நின்று வாழ்வான் என்று பொருள். 

இல்லம் என்பது இல்லற நெறிக்கு ஆகி வந்தது. 

சரி.

"இல்வாழ்வான் என்பான்" என்றால் அது யாரைக் குறிக்கிறது? இல்லற நெறியில் வாழ்பவனையா அல்லது அப்படி ஒருவன் வாழ்கிறான் என்று சொல்பவனையா?

உதாரணமாக, இராமன் இல்லற நெறியில் வாழ்கிறான். முருகன் எல்லோரிடமும் போய் இராமன் இல்லற நெறியில் வாழ்கிறான் என்று சொல்கிறான். 

இங்கு, "இல்வாழ்வான் - என்பான்" என்ற இரண்டு சொல் இருப்பது போலத் தெரிகிறது அல்லவா? வாழ்பவன், வாழ்வான் என்று சொல்லுபவன். இதில் யாரைச் சொல்கிறார் வள்ளுவர். 


பரிமேலழகர் விளக்கம் செய்கிறார் 

"என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது"

என்கிறார். "என்பான்" என்ற சொல் வாழ்வான் என்ற வினைக்கு முதல் போல சொல்லப்பட்டாலும், அது அல்ல. வாழ்பவனைத்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார் என்று விளக்கம் செய்கிறார். 


அடுத்தது 

"இயல்புடைய மூவர்க்கு"

என்கிறார்.

யார் அந்த மூவர்?

நாளை சிந்திப்போமா?


1 comment: