Pages

Thursday, July 22, 2021

திருக்குறள் - இல்வாழ்வின் பண்பும் பயனும்

திருக்குறள் - இல்வாழ்வின் பண்பும் பயனும் 


இல்லறத்தின் பதினொரு கடமைகள் சொன்னார். அந்தக் கடமைகளை செய்ய உண்டாக்கும் பொருளும் அற வழியில் ஈட்ட வேண்டும் என்றார். 


அடுத்ததாக, இதெல்லாம் சாத்தியமா? ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் செய்யலாம். வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருக்க முடியுமா? தளர்ந்து போக மாட்டோமா? இப்படி எல்லோருக்கும் செய்து கொண்டே இருந்தால் நாம் வாழ்வது எப்போது? என்றெல்லாம் பல கேள்விகள் வரும். 


எல்லாவற்றிற்கும் பதில் தருகிறார் வள்ளுவர். 


பாடல் 


 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_22.html


(click the above link to continue reading)



அன்பும் = அன்பும் 

அறனும் = அறமும் 

உடைத்தாயின் = உளவாக இருப்பின் 

இல்வாழ்க்கை = இல்வாழ்க்கை 

பண்பும் = பண்பும், இயல்பும் 

பயனும் = பயனும், விளைவும் 

அது = அது 


சரி. இதில் என்ன விடை இருக்கிறது? ஒன்றும் இல்லையே என்று தோன்றலாம். சிந்திப்போம். 


முதலாவதாக, இல்வாழ்கையில் அன்பு இருக்க வேண்டும். கணவன், மனைவி, பிள்ளைகள், சுற்றம்,நட்பு என்று அந்த வட்டத்துக்குள் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் இருக்க வேண்டும். அன்பு என்றால் ஏதோ நாள் கிழமைக்கு செய்வது அல்ல. திருமண நாள், விருந்தினர் வந்த நாள் என்று இருக்கக் கூடாது. அன்பு செலுத்துவது என்பது ஒரு பண்பாக இருக்க வேண்டும். இயல்பான ஒன்றாக இருக்க வேண்டும். அன்பு இல்லாவிட்டால், இல்வாழ்க்கையில் ஒரு அர்த்தமும் இல்லை. 


தொடர்புடையார் மாட்டுச் செய்வது அன்பு. தொடர்பிலாதர் மாட்டும் செய்வது அருள். இல்லறத்துக்கு அன்பு வேண்டும். துறவறத்துக்கு அருள் வேண்டும். 


இரண்டாவது, அன்பு என்பது பண்பாக இருந்தால், அறம் என்பது பயனாக விளையும். இல்வாழ்வில் அறம் செழிக்க வேண்டும் என்றால் அன்பு முதலில் வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு இருந்தால், விருந்தினரை எப்படி உபசரிப்பது? அன்பு அடிப்படை குணமாக இருந்தால்தான், இல்லறம் நடக்கும். இல்லை என்றால் கோர்ட் படியில் தான் நடக்க வேண்டி இருக்கும். 


மூன்றாவது, கடினமாக படித்தால், நல்ல மதிப்பெண் பெறலாம் என்பதில் கடின உழைப்பு பண்பு, (இயல்பு) மதிப்பெண் பெறுவது உழைப்புக்கு கிடைத்த பயன் அல்லது பலன்.  அது போல, இல்வாழ்வில் அன்பு இருந்தால், அறம் தானாகவே விளையும். அறம் செய்யப் போகிறேன் என்று மெனெக்கெட வேண்டாம். ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்தாலே போதும், அறம் தானே வரும். மதிப்பெண் வாங்கப் போகிறேன் என்று கிளம்ப முடியாது. நிறைய படிக்கப் போகிறேன் என்று கிளம்பலாம். மதிப்பெண் தானே வரும். அது போல. 


நான்காவது, அன்பு இல்லை என்றால், இல்லறம் இல்லை. மனைவி மேல் அன்பு இல்லாவிட்டால், வேறு ஒரு பெண்ணை பார்க்கத் தலைப்படுவான் கணவன். குடும்பம் சிதையும். பிள்ளைகள் மேல் அன்பு பிறக்காது. சுற்றமும் நட்பும் விலகிப் போய் விடும். அன்பு செய்யப் பழக வேண்டும்.  அன்பு இருக்கும், அதை வெளிப்படுத்தத் தெரியாது. அறம் தழைக்க வேண்டும் என்றால் அன்பு செழிக்க வேண்டும். 


இந்தக் குறளுக்கு பலர் பலவிதமாக உரை செய்து இருக்கிறர்கள். ஆர்வம் உள்ளவர்கள், தேடிக் கண்டடைக.


அன்பு அருளாக மாறும். அருள் துறவறம் தரும். துறவறம் வீடு பேற்றைத் தரும். 


பின்னால் அது பற்றி வரப் போகிறது. 


மேலும் சிந்திப்போமா?






No comments:

Post a Comment