திருக்குறள் - பெய்யெனப் பெய்யும் மழை
தெய்வத்தை தொழ மாட்டாள். கொண்ட கணவனை தொழுது எழுவாள். அவள் "பெய்" என்றால் மழை பெய்யும் என்கிறது அடுத்த குறள்.
பாடல்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_14.html
(click the above link to continue reading)
தெய்வம் தொழாஅள் = தெய்வத்தை தொழ மாட்டாள்
கொழுநன் = கணவனை
தொழுதெழுவாள் = தொழுது எழுவாள்
பெய்யெனப் = அவள் பெய் என்று சொல்ல
பெய்யும் மழை. = மழை பெய்யும்
மிகவும் சிக்கலான குறள்.
கணவனை மனைவி தொழுதாள் என்பதற்கு அந்தக் காலத்திலும் சான்றுகள் இல்லை. பெண்கள் கோவிலுக்குப் போவதும், இறை வழிபாடு செய்வதும் அன்றும், இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தெய்வத்தை தொழாமல், கணவனை தொழும் பெண்கள் பற்றி சில கதைகள் இருக்கலாம். அதுவே எல்லோராலும் பின் பற்றப்பற்ற ஒன்று என்று சொல்ல முடியாது.
பின் ஏன் வள்ளுவர் அப்படி எழுதினார்?
வள்ளுவர் பெண்மையை சிறுமை படுத்துகிறவர் அல்ல.
பெண்களை இழிவு படுத்த வேண்டும், அவர்களை ஆண்களின் அடிமைகளாக வைக்க வேண்டும் என்று நினைப்பவர் அல்லர். அவர் நினைத்தாலும் அது நடக்காது என்பது வேறு விஷயம்.
பின் ஏன் இந்தக் குறள் இப்படி சொல்கிறது.
வள்ளுவரை போற்றும் பலரும் இந்த குறளுக்கு உரை சொல்லும் போது தடுமாறத்தான் செய்திருக்கிறார்கள்.
ஒரு வேளை இடைச் செருகலாக இருக்குமோ என்று நினைத்தால் அதற்கும் இடம் இல்லை. காரணம், வெவ்வேறு காலக் கட்டங்களில் எழுதப் பட்ட பல்வேறு நூல்களில் இந்தக் குறள்மேற்கோள் காட்டப் பட்டிருக்கிறது.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாம்
மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து
என்று சிலப்பதிகாரம் பேசுகிறது.
"பெய்யெனப் பெய்யும் மழை" அருமையான வரி.
அவள், பெய் என்றால் உடனே மழை பெய்தால் அது எந்த அளவு இன்பமாக இருக்குமோ, அப்படி இன்பமானவள் என்று கூட பொருள் சொல்லிப் பார்த்தார்கள்.
அதெல்லாம் சரி. முதல் வரிக்கு என்ன பதில் என்றால் சரியான பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுவரை, அந்த வரிக்கு ஒரு முழுமையான தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.
எழுந்து தொழுவாள் என்று கூட சொல்லவில்லை. தொழுது பின் எழுவாளாம். தூக்கத்தை விட்டு எழும்பும் முன்னே தொழுது விடுவாளாம்.
நம் இலக்கியம் அனைத்திலும் கற்புடைய பெண்களின் அபரிமிதமான ஆற்றல் பற்றிப் பேசப் பட்டு இருக்கிறது.
ஏதோ ஒரு புலவர் பாடினால் மிகைக் கற்பனை என்று விட்டு விடலாம்.
"எல்லை நீத்த இந்த உலகம் யாவையும் என் சொல்லினால் சுடுவேன்" என்கிறாள் சீதை.
சொன்னாளே, சுட்டாளா என்று கேட்டால்....
சுட்டுக் காட்டினால் ஒரு பெண்.
கண்ணகி.
மதுரையை எரிந்து போ என்றாள். எரிந்தது.
ஆண்கள் யாரும் அப்படி செய்தது மாதிரி தெரியவில்லை.
"தீயே (அனுமனை" சுடுதியேல்" என்றாள் சீதை. வாலில் இட்ட நெருப்பு அனுமனை சுடவில்லை.
இயற்கை கட்டுப்பட்டது.
"நான் கற்புள்ள பெண் என்பது உண்மையானால், சூரியனே நீ நாளை உதிக்காதே" என்றாள் ஒருத்தி, அது உதிக்கவில்லை.
கதையாக இருக்கலாம்.
கற்பு பலம் தந்திருக்கிறது.
இந்த அளவு என்பது கற்பனை என்றாலும், ஏதோ ஒரு அளவு தந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.
கற்பு என்பது கணவனை தொழுவதிலா இருக்கிறது?
விடை காண முடியாத கேள்வி இது.
இதற்கு ஆண்கள் என்ன பதில் சொன்னாலும், அது தவறாகவே பார்க்கப் படும்.
யாரவது ஒரு பெண் தான் விளக்கம் சொல்ல வேண்டும்.
"வள்ளுவர் சொன்னது பிழை" என்பதல்ல பதில். நமக்கு புரியாத, தெரியாத எல்லாவற்றையும் பிழை என்று ஒதுக்கி விட முடியாது.
இவ்வளவு ஆழமாக, நுணுக்கமாக எழுதிய வள்ளுவர் பிழை செய்வாரா?
பின் என்னதான் இதற்கு அர்த்தம்?
No comments:
Post a Comment