Pages

Tuesday, August 31, 2021

திருக்குறள் - ஒரு சின்ன இடைச் செருகல்

 திருக்குறள் - ஒரு சின்ன இடைச் செருகல் 


இந்த ப்ளாகை படிக்கும் சிலர், சில கேள்விகளை முன் வைக்கிறார்கள். 


அந்தக் கேள்விகள் பெரும்பாலும் எப்படி திருக்குறள் வழி நடந்து நம்மை முன்னேற்றுவது என்பது பற்றி அல்ல. 


திருக்குறளில் குறை கண்டு பிடிப்பது, வள்ளுவருக்கு ஒன்றும் தெரியாது என்று நிரூபிக்க நினைப்பது, தங்கள் மேதாவிலாசத்தை காட்டுவது என்று போகிறது. 


விமர்சினங்கள், ஆராய்சிகள், கேள்விகள் எல்லாம் தேவை தான். அப்படித்தான் அறிவு வளரும். அது கூடவே கூடாது என்று சொல்ல முடியாது. 


ஆனால், அந்த கேள்விகள் அறிவை வளர்க்க பயன் பட வேண்டும். அறியாமையை வெளிச்சம் போட்டு காட்ட அல்ல. 


பெரும்பாலான கேள்விகள் வரக் காரணம் திருக்குறளை முழுமையாக ஒரு வரிசையாக படிகாதாதல் வரும் கேள்விகள். 


ஒரு ஐந்து வயது மாணவனை பன்னிரெண்டாம் வகுப்பில் கொண்டு போய் அமர்த்தினால் எப்படி இருக்கும்? அவனுக்கு எல்லாவற்றிலும் சந்தேகம் வரும், கேள்வி வரும், குழப்பம் வரும். 


ஒவ்வொரு வகுப்பாக படித்துக் கொண்டு வந்தால் தெளிவு பிறக்கும். 


அது போல குறளை வரிசையாக படிக்க வேண்டும். முதலில் படித்ததை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். 


முதல் வகுப்பில் படித்த அ ஆ மறந்து விட்டது என்று பத்தாம் வகுப்பில் வந்து உட்கார்ந்தால், எப்படி மேலே படிப்பது? 


திருக்குறளை ஒரு கோர்வையாக, ஆதி முதல் அந்தம் வரை படிக்க வேண்டும். அதுவும் வரிசையாக படிக்க வேண்டும். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_31.html


(Please click the above link to continue reading)


திருக்குறள் ஒரு நீதி நூல் அல்ல. அது வாழ்கை நெறிமுறை நூல். 


வாழ்க்கை என்பது ஒரு ஒழுங்கில் இருப்பது. 


பிறப்பு - பின் வளவர்து - பின் கல்வி கற்பது - பின் திருமணம் - பிள்ளைகள் - வயதாவது - மரணம் என்று போகிறது அல்லவா. 


இல்லை, நான் அப்படி வாழ மாட்டேன். முதலில் பிள்ளை பெற்றுக் கொள்வேன், அப்புறம் கல்வி கற்பேன், பின் திருமணம் செய்து கொள்வேன் என்று மனம் போனபடி வாழ முடியுமா? ஐந்து வயதில் திருமணம், எட்டு வயதில் பிள்ளை பெற்றுக் கொள்வேன் என்றெல்லாம் ஆரம்பிக்க முடியாது. 


அதே போல் ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும் என்று சொன்னால் அதை அப்படியே செய்ய வேண்டும், அல்லது அதை விட சிறப்பாக செய்ய வேண்டும் அல்லது அது சரி இல்லை என்றால் விட்டு விட்டு வேறு வேலை செய்யப் போய் விட வேண்டும். 


மாறாக, பிள்ளை வளர்ப்பது இப்படி என்று சொன்னால், அப்படி என்றால் வீட்டுக்கு வரும் விருந்தினரையும் அப்படித்ததான் நடத்த வேண்டுமா என்று கேட்கக் கூடாது. 


ஆணின் வேலை இது, பெண்ணின் வேலை இது என்று சொன்னால், அப்படி என்றால் ஆண்கள் அந்த வேலை செய்யக் கூடாதா, பெண்கள் இந்த வேலை செய்யக் கூடாதா என்று குதர்க்கம் பேசித் திரியக் கூடாது. 


பேசலாம். எப்போது என்றால், அப்படி மாறிச் செய்வது பற்றி முழுமையாக ஆராய்ந்து, ஒரு வாழ்கை முறையை கூறி, அந்த வாழ்க்கை முறை முன்னதை விட சிறப்பானது என்று நிறுவும் திறம் இருந்தால். 


திருக்குறள் எதையும் புதிதாக கண்டு சொல்லும் நூல் அல்ல. எங்கும், எப்போதும் நிறைந்து இருக்கும் அறத்தை தொகுத்துச் சொன்ன நூல். அவ்வளவுதான். 


நெருப்பில் கை வைக்காதே. சுடும் என்று அம்மா சொல்கிறாள். பிள்ளை "அது எப்படி சுடும் " என்று கை வைக்கிறான். சுடுகிறது. அம்மா சொன்னதால் சுடவில்லை. அம்மா சொல்லாவிட்டாலும் சுட்டிருக்கும். 


அது போல வள்ளுவர் செய்திருப்பது "சுடும்" என்ற செய்தியை சொல்வது. வாழ்க்கையை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, அதன் இரகசியங்களை அறிந்து தொகுத்துச் சொன்னது.   


பொருளை போட்டால் அது புவி ஈர்ப்பு காரணமாக கீழே விழும் என்று சொன்னது நியூட்டன். அவர் சொல்லாவிட்டாலும் புவி ஈர்ப்பு இழுக்கத்தான் செய்யும்.  அது ஒரு அறிவியல் உண்மை. நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது நடந்தே தீரும். 


எனக்கு நியூட்டனின் சித்தாந்தத்தில் நம்பிக்கை இல்லை. நான் பத்தாவது மாடியில் இருந்து குதிக்கப் போகிறேன் என்று சொல்பவர்களை நாம் என்ன செய்ய முடியும். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யலாம். அவ்வளவுதான். 


பெண் ஒழுங்காக இருந்தால் ஆணுக்குச் சிறப்பு என்றால், அப்படி என்றால் ஆண் ஒழுங்காக இருந்தால் பெண்ணுக்கு சிறப்பு இல்லையா என்று கேட்டால், சிறப்புத்தான். பின் ஏன் அதை வள்ளுவர் சொல்லவில்லை. பெண் மட்டும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று சொல்கிறாரே என்று கேட்டால், ஆணுக்கு பதினொரு கடமைகள் சொல்லி இருக்கிறார். அவற்றை ஊன்றிப் படித்தால், அவர் ஆண் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார் என்று புரியும். 


உடனே, அந்த வேலையெல்லாம் ஏன் பெண்கள் செய்யக் கூடாது என்று ஆரம்பிக்கக் கூடாது. 


சிரார்த்தம் ஆண்கள் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஏன் பெண்கள் செய்யக் கூடாது? 


துறவிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் உணவு, உடை, மருந்து இவற்றை தந்து உதவ வேண்டும் என்று ஆணுக்குச் சொல்லி இருக்கிறது. அதை ஏன் பெண்கள் செய்யக் கூடாது? செய்யலாம். ஒரு பெண் தினம் நாலு ஆண்களை வீட்டுக்கு அழைத்து வந்து விருந்து போட்டு அனுப்பலாம். அந்தப் பெண்ணை உலகம் என்ன சொல்லும்? 


சரி, ஒரு ஆண் மட்டும் நாலு பெண்களை அழைத்து வந்து விருந்து போடலாமா என்றால், வள்ளுவர் அதற்கும் சம்மதம் சொல்லவில்லை. அந்த உபசரிப்பை ஆண் தனித்து செய்ய முடியாது. பெண்ணின் துணை வேண்டும் என்று வைத்து இருக்கிறார். 


அதனால், வள்ளுவரின் ஒவ்வொரு குறளும், அந்த குறளின் அர்த்தம் மட்டும் அல்ல, அது வைத்திருக்கும் இடமும் மிக முக்கியமானது. 


ஏன் முதலில் இன்பத்துப் பாலை வைக்கக் கூடாது?  துறவு கடைசியில் வருவது தானே. அதை கடைசியில் வைத்து முதலில் இன்பத்துப் பாலை வைத்து இருக்க வேண்டியது தானே. 


சரி, அது கூட வேண்டாம், முதலில் பொருள் பாலையாவது வைத்து இருக்கலாமே? பொருள் சேர்த்து, இல்லறத்தில் இன்பம் அனுபவித்து பின் தானே துறவு, வீடு பேறு எல்லாம். 


பின் ஏன் நீத்தார் பெருமையை முன்னால் சொல்லி பின் இன்பத்துப் பாலை வைக்கிறார்? வள்ளுவருக்கோ தெரியாதோ? நமக்கு தெரிந்த இந்த சின்ன விஷயம் கூட அவருக்குத் தெரியவில்லை போலும் என்று நினைக்கக் கூடாது. 


திருக்குறள் வைப்பு முறையே மிக மிக நுட்பமான விஷயம்.


திருக்குறள் படித்து நம்மை மேலேற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே அல்லாது நம் நிலைக்கு அந்த நூலை கீழே இரக்கக் கூடாது. 


இனி அடுத்த குறளுக்குள் போவோம்.



3 comments:

  1. மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள் ...விதண்டா வாதம் செய்வோர் படிப்பது இல்லை ...அது பற்றி கவலை கூடாதெனவே தோன்றுகிறது அண்ணா

    ReplyDelete
  2. அற்புதமான பதிவு. நான் நீண்ட காலமாகச் சொல்லி வருவது. திருக்குறளின் வைப்பு முறை மிகச் சிறப்பான கற்கோட்டை. அதில் யாரும் இடைச்செருகல் செய்ய முடியாது. அந்தக் கோட்டையில் அமைக்கப்பட்ட வழியின் வழியாகச் செல்லுதலே கோட்டையை முழுதாகச் சுற்றிப்பார்க்க வழிசமைக்கும். நல்ல பதிவு. வாழ்த்து.

    ReplyDelete