Pages

Thursday, August 12, 2021

திருக்குறள் - பெண்ணின் பெருந்தக்க யாவுள

 திருக்குறள் - பெண்ணின் பெருந்தக்க யாவுள


வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம். 


முதலில் குறளைப் பார்த்து விடுவோம். இது கொஞ்சம் சிக்கலான குறள். 


பாடல் 


பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_72.html


(please click the above link to continue reading)


பெண்ணின் = பெண்ணைப் போல 


பெருந்தக்க = பெருமையுள்ளது 


யாவுள = எது இருக்கிறது? (ஒன்றும் இல்லை) 


கற்பென்னும் = கற்பு என்கின்ற 


திண்மையுண் டாகப் பெறின் = கலங்கா அல்லது உறுதி உண்டாகப் பெற்றால் 


இதற்கு பலர் உரை எழுதி இருக்கிறார்கள்.  சில உரைகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாகவும் உள்ளன. 


சற்று ஆழ்ந்து யோசிக்க வேண்டிய குறள் இது. 


கற்பு என்ற உடனேயே கொடி பிடிப்பவர்கள் வந்து விடுவார்கள். ஏன், பெண்ணுக்கு மட்டும் தான் கற்பா ? ஆணுக்கு கற்பு வேண்டாமா? என்று ஆரம்பித்து விடுவார்கள். இது பெண்களை அடிமைப் படுத்தும் குறள் என்று சிலர் குரல் கொடுக்கலாம். 


இங்கே பெண் என்பது மனைவியைக் குறிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். காரணம், அதிகாரம் வாழ்கை துணை நலம். எனவே, இங்கே பெண் என்பதை மனைவி என்று சொல்வது சரியாக இருக்கும். 


கற்புள்ள மனைவியை விட ஒருவன் வேறு என்ன சிறப்புப் பொருளை பெற்று விட முடியும்?  என்று பொருள் விரியும். 


ஒருவனுக்கு ஆகச் சிறந்த உயர்ந்த, சிறந்த பொருள் என்பது கற்புள்ள மனைவிதான். அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்கிறார். இது முந்திய இரண்டு குறள்களோடு இயைந்து வருகிறது. 


இங்கே வள்ளுவர், 


பெண்ணின் பெருந்தக்க யாவுள  கற்பு உண்டாகப் பெறின் 


என்று சொல்லவில்லை. கற்பு எனும் திண்மை உண்டாகப் பெறின் என்கிறார்.


கற்பு என்ற கலங்கா நிலை, உறுதியான நிலை. 


துன்பம் வந்தாலும், சிக்கல்கள் வந்தாலும் கலங்காமல், உறுதியாக இருக்கும் தன்மை. 


மேலும்,


கணவனோ, பிள்ளைகளோ தவறு செய்வார்களேயானால், உறுதியாக அவர்களை திருத்தும் தன்மை.  கணவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்கிறான் என்றால், நல்லது தானே, கார், வீடு, நகை கிடைக்கிறது என்று மகிழாமல் இது தவறான வழியில் வரும் பணம், இது நமக்கு வேண்டாம் என்று கணவனை திருத்தி நல் வழி படுத்தும் தன்மையுள்ள  பெண் மனைவியாக வந்து விட்டால, அதை விட பெரிய சிறப்பு ஒருவனுக்கு என்ன இருக்க முடியும். 


பல ஆண்கள் தவறு செய்ய அடிப்படை காரணம் பெண்ணின் ஆசை. "உங்க அளவு தான படித்து இருக்கிறார் அவர், அவரைப் பாருங்கள் வீடு, காருன்னு எப்படி வசதியாக இருக்கிறார் ..." என்று மனைவி ஆரம்பித்து விட்டால், ஒரு நாள் அல்லது ஒரு நாள் கணவன் தவறு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. 


"வீடு வாங்கித் தா, நகை வாங்கித் தா, வெளிநாட்டுக்கு சுற்றுலா கூட்டிக் கொண்டு போ" என்று முடிவில்லா பட்டியலை நீட்டினால், கணவன் என்ன செய்வான் ?


இதுதான் வரவு, இதற்குள் மகிழ்ச்சியாக வாழ்வோம் என்று ஒரு பெண் முடிவு எடுத்து விட்டால், அதை விட சுவர்க்கம் என்ன இருக்கிறது. 


"பெறின்" என்றால் "அமைந்தால்", "கிடைத்தால்" என்று பொருள். 


பொதுவாக கிடைக்காது என்று அர்த்தம். 


எனக்கு லாட்டரியில் பத்து கோடி விழுந்தால்,  நான் படித்த பள்ளிக்கு ஒரு இலட்சம் நன்கொடை தரலாம் என்று இருக்கிறேன் என்று சொன்னால், ஒரு இலட்சம் தருவது நடக்காது என்று புரிகிறது அல்லவா? 


ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் படித்தால், நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையலாம். 


படிக்கணுமே.


பெறின் என்பதன் அர்த்தத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். 



No comments:

Post a Comment