திருக்குறள் - என்ன இருந்தும் ஒன்றும் இல்லை
வீடு என்று வந்து விட்டால், அது மனைவியின் கையில் தான் இருக்கிறது என்கிறது குறள்.
கணவன் என்னதான் படித்து, பட்டம் பெற்று, பெரிய பதவி, ஆள், அம்பு, சேனை, செல்வாக்கு, புகழ், பணம், சொத்து என்று இருந்தாலும், அவனுக்கு மனைவி சரி இல்லை என்றால், அவனுக்கு ஒன்றுமே இல்லை என்று அர்த்தம் என்கிறார்.
பாடல்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினு மில்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_8.html
(please click the above link to continue reading)
மனைமாட்சி = மனையறத்துக்கு தக்க நற்குண நற்செய்கைகள்
இல்லாள்கண் = ஒரு மனைவியிடம்
இல்லாயின் = இல்லாமல் போனால்
வாழ்க்கை = வாழ்க்கையில்
எனை = எந்த
மாட்சித் = மாட்சிமை, பெருமை, புகழ், செல்வம்
தாயினு மில் = ஆயினும், இல். இருந்தாலும், இல்லை.
கோடி உரூபாய் சொத்து இருக்கிறது. அவரைத் தேடி நண்பர் வருகிறார். கணவன் மனவியை அழைக்கிறான், நண்பரிடம் அறிமுகப் படுத்த. அவள் வருவதாய் இல்லை. ஒரு முறை, இரண்டு முறை கூப்பிட்டுப் பார்கிறான். அவள் வர மறுக்கிறாள். அந்தக் கணவனுக்கு எப்படி இருக்கும்.
அல்லது வருகிறாள், வந்து தண்ணீர் குவளியை நங் என்று வைக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகும்?
அவர் வெளியில் போகிறார், ஊரில் உள்ளவர்கள் "இதோ போறாரே அவர் மனைவி ஒரு மாதிரி" என்று சொன்னால் அவரால் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா?
மனைவி சரி இல்லை என்றால், என்ன இருந்தாலும், இல்லை என்று அர்த்தம் என்கிறார்.
அது எப்படி, இருந்தாலும் இல்லை என்று சொல்ல முடியும். என் பெயரில் இத்தனை கோடிக்கு வங்கியில் பணம் இருக்கிறது. என் மனைவி எப்படி இருந்தால் என்ன, அந்தப் பணம் என் பணம் தானே. அதை எப்படி வள்ளுவர் இல்லை என்று சொல்ல முடியும் என்று கேட்டால், அதற்கு பரிமேலழகர் பதில் சொல்கிறார்.
"பயன் படாமையின் இல் என்றார்" என்று.
பணம் இருக்கும், அதை வைத்து என்ன செய்வது?
ஒரு நல்ல உடை வாங்கி உடுத்திக் கொண்டு வந்தால், மனைவி "ஆமா..இது ஒண்ணு தான் குறைச்சல்" என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டால், அந்த உடையை உடுக்க முடியுமா?
நல்ல உணவு மேஜை மேல் இருக்கிறது, எடுத்து ஒரு வாய் வைக்கப் போகிறான், "இதுக்குத்தான் இலாயக்கு" என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டால், அந்த உணவை வாயில் வைக்க முடியுமா?
உணவு இருக்கிறது, அதனால் பயன் இல்லை என்பதால் அது இருந்தும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்று தான் என்ற அர்த்தத்தில் "எனை மாட்சித்தாயினும் இல்" என்றார்.
கணவனின் அத்தனை புகழுக்கும் அல்லது இகழுக்கும் மனைவிதான் பொறுப்பு என்று அவ்வளவு பெரிய பொறுப்பை மனைவியிடம் தருகிறது குறள்.
இதில் ஆணாதிக்கம், பெண்ணடிமை என்பதெல்லாம் எங்கிருந்து வருகிறது? பார்ப்பவர் கண்ணின் குறை நூலில் உள்ளது போலத் தெரியும்.
எங்காவது ஒரு அடிமையின் கையில் இருக்கிறது எஜமானனின் பெருமை என்று சொல்லி இருக்கிறதா?
பெண் அடிமை இல்லை. ஒருஆணின் அத்தனை புகழுக்கும் அவளே காரணம் என்று அவளை உயர்த்திப் பிடிக்கிறது குறள்.
அதே சமயம், பெண் மேல் ஒரு பெரும் பொறுப்பை ஏற்றுகிறது. "நீ தான் ஒரு குடும்பத்தின் பெருமைக்கு காரணம். அதைத் தெரிந்து, புரிந்து நடந்து கொள்" என்று சொல்கிறது.
எங்களுக்கு அந்தப் பொறுப்பு வேண்டாம். அது ஒரு பெரிய சுமை. நாங்க எங்க இஷ்டத்துக்கு இருப்போம். பெண் சுதந்திரம் என்று பேசுபவர்கள், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பொறுப்பு என்றால் அதற்கு தக்க அதிகாரம் இருக்கும், மரியாதை இருக்கும்.
பொறுப்பு வேண்டாம் என்றால்....
சிந்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment