திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 2
(இதன் முதல் பாகத்தை இந்த ப்ளாகின் கடைசியில் உள்ள இணைய தளத்தில் காணலாம்.
பாடல்
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற
பொருள்
(Please click the above link to continue reading)
பெறுமவற்றுள் = ஒருவன் பெறக் கூடியவற்றில்
யாமறிவது = யாம் அறிவது
இல்லை = இல்லை
அறிவறிந்த = அறிவு அறிந்த
மக்கட்பேறு = மக்கட் பேறு
அல்ல பிற = மற்றவை அல்ல
மிக ஆழ்ந்த குறள்.
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை "அறிவார்ந்த"
மக்கட்பேறு அல்ல பிற
என்று சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.
"அறிவறிந்த மக்கட்பேறு" என்று கூறுகிறார்.
அது என்ன அறிவறிந்த?
பிறக்கும் போதே எல்லாவற்றையும் யாரும் அறிந்து கொண்டு பிறப்பதில்லை. அறிவான பிள்ளைகளை பெறுவது என்றால் என்ன அர்த்தம்? அது சரி வராது அல்லவா? பிறந்த உடனேயே தெரியுமா ஒரு பிள்ளை அறிவுள்ளதா அல்லது அறிவு இல்லாதாத என்று. பின் ஏன் வள்ளுவர் அப்படிச் சொன்னார்?
பரிமேலழகர் இல்லை என்றால் இது எல்லாம் புரியாது.
"அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை"
அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய மக்கள் என்கிறார்.
பெரும்பாலும் என்ன நடக்கிறது? எது எல்லாம் அறியத் தேவை இல்லையோ, அவற்றை அறிந்து கொண்டு இருக்கிறோம்.
யோசித்துப் பாருங்கள், கடந்த ஒரு ஆண்டில் நீங்கள் புதிதாக அறிந்தவற்றில் எத்தனை அறிய வேண்டியவை, எத்தனை வெறும் குப்பைகள் என்று?
எது எதையோ படித்துக் கொண்டு இருக்கிறோம்.
அவை எல்லாம் அறிவு என்று மண்டைக்குள் திணித்துக் கொண்டு இருக்கிறோம்.
வள்ளுவர் சொல்கிறார் - இரண்டு விடயங்கள்.
ஒன்று எதை அறிய வேண்டும் என்ற அறிவு.
இரண்டாவது, எதை அறிய வேண்டுமோ அதை அறிந்து கொள்ளும் அறிவு.
இந்த இரண்டும் வேண்டும். அப்படிப்பட்ட பிள்ளைகளை பெறுவதை விட பெரிய சிறப்பான ஒன்று இல்லை என்று கூறுகிறார்.
பரிமேலழகர் ஒரு படி மேலே [போகிறார்.
" 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது"
அறிவறிந்த என்று கூறியதால் அது ஆண்களையே குறிக்கிறது. பெண்களை அல்ல என்றும் எனவே மக்கட்பேறு என்பது புதல்வர்களைப் பெறுவது என்றும் கூறுகிறார்.
பெண் பிள்ளைகள் தேவை இல்லையா? வள்ளுவரும், பரிமேலழகரும் இப்படி ஆணாதிக்க சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறார்களே என்று கொடி பிடிக்கலாம்.
சிந்திப்போம்.
மனிதர்களுக்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை.
ஒன்று அறிவு, இன்னொன்று உணர்ச்சி.
இன்றைய அறிவியல் Intelligent quotient (IQ) and Emotional Quotient (EQ) என்று குறிப்பிடுகிறது. மேலும், வாழ்வில் வெற்றி பெற EQ தான் மிக முக்கியம் என்கிறது.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். (அது பற்றி மேலும் அளவலாவ ஆர்வம் இருந்தால், பின் தனியே சிந்திப்போம்).
பொதுவாக, ஆண்கள் எதையும் தர்க்க ரீதியாக சிந்திக்கும் இயல்பு உடையவர்கள். பெண்கள் எதையும் உணர்வு பூர்வமாக அணுகுவார்கள். இதில் சில விதி விலக்குகள் இருக்கலாம்.
அப்படி அறிவும், உணர்வும் தனித்து இருப்பதால்தான் இல்லறம் இனிமையாக இருக்கிறது.
இருவரும் தர்க்க ரீதியாக பேசுவோம் என்றாலோ, அல்லது இருவரும் உணர்ச்சி வசப் பட்டு பேசுவோம் என்றாலோ சிக்கல்தான்.
அப்படி என்றால் ஆண்களுக்கு உணர்சிகள் கிடையாதா, பெண்களுக்கு அறிவு கிடையாதா என்று கேட்க்கக் கூடாது.
பெண்களுக்கு உணர்சிகள் அதிகமாக இருக்கும். சட்டென்று அழ முடியும், உடனுக்குடன் மன நிலை மாறும், உள்ளுணர்வு அதிகமாக இருக்கும், காரணம் சொல்லத் தெரியாது, ஆனால் முடிவு மட்டும் வரும். ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்றால், விளக்கத் தெரியாது.
ஆண்கள் அப்படி அல்ல. அறிவின் தாக்கம் அதிகம் இருக்கும். உணர்சிகளை தள்ளி வைத்து விட்டு, நீண்ட தொலை நோக்கோடு சிந்திக்க முடியும் அவர்களால்.
இரண்டும் வேண்டும் வாழ்வில். ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று இல்லை.
"அறிவறிந்த" என்றதனால், அது ஆண் பிள்ளைகளையே குறிக்கும் என்கிறார் பரிமேலழகர். பெண் பிள்ளைகளை அல்ல என்பது அவர் முடிவு.
ஏற்றுக் கொல்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.
சரி இல்லை என்று தோன்றினால், பரிமேலழகர் உரையை தள்ளி விட்டு, புது உரை எழுதலாம். எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டால், பின் அதுவே நிலைக்கும். முயற்சி செய்வதில் தவறில்லை.
இதன் முதல் பாகத்தை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம்.
மற்றவர் உரை எழுதுகிறாரோ இல்லையோ, பரிமேல் அழகர் எழுதிய உரை தவறான கருத்துடையதே, வெட்கத் தகுந்ததே என்று சொல்லலாம். அந்தக் காலத்தில் எழுதி விட்டார்கள் என்பதால், எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளாத தேவையில்லை.
ReplyDelete