வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ? - பாகம் 2
தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக
அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்
எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற
ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/10/2.html
(Pl click the above link to continue reading)
தப்போதாமற்றம்பியர்க்குந் = தப்பு ஓதாமல் தம்பியற்கும் = தவறாகச் சொல்லி யார் மனதையும் நோகச் செய்யாத தர்மன், தன் தம்பிகளுக்கும்
தருமக்கொடிக்கும் = தர்மத்தின் கொடி போன்றவளான பாஞ்சாலிக்கும்
இதமாக = மனதிற்கு இதமாக, நன்மை உண்டாகும் படி
அப்போதுணரும்படி = அப்போது உணரும் படி
யுணர்ந்தான = உணர்ந்தான்
சோதைமகனை = யசோதையின் மகனான கண்ணனை
யறத்தின்மகன் = தர்ம தேவதையின் மகனான தர்மன்
எப்போதியாவரெவ்விடத்தி லெம்மை = எப்போது, யார், எவ்விடத்தில் எம்மை
நினைப்பாரெனநின்ற = நினைப்பார்கள் என்று நின்ற
ஒப்போதரியான் = ஒப்பு + ஓது + அறியான் = தனக்கு ஒப்பு உவமை சொல்லுதற்கு அரியவனான கிருஷ்ணன்
உதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே. = உதிட்டிரன் உள்ளத்தில் வந்து அப்போது உதித்தான்
இறைவன் காத்துக் கொண்டு இருக்கிறான். எப்போது, யார், எந்த இடத்தில் தன்னை அழைப்பார்கள் , போய் உதவி செய்யலாம் என்று.
கேட்டுத் தான் கொடுக்கணுமா ? அவனுக்கே தெரியாதா? கேட்காமலேயே கொடுத்தால் என்ன?
கொடுக்கலாம் தான். எவ்வளவோ கேட்காமலேயே கொடுத்தும் இருக்கிறான். இந்த அறிவு, இந்த உடல், இந்த மனம், இந்த நாடு, இந்த மொழி என்று எவ்வளவோ நல்ல விடயங்கள் நமக்கு கேட்காமலேயே கொடுத்து இருக்கிறான். இந்த ஊரில், இந்த பெற்றோருக்கு, இந்த காலத்தில், இந்த வடிவில், இப்படி இருக்க வேண்டும் என்று நாம் கேட்டோமா?
இந்த காற்று, மழை, மரம், நிழல், உணவு, ஆரோக்கியம், கணவன்/மனைவி, பிள்ளைகள், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம் என்று ஆயிரம் ஆயிரம் நல்ல விடயங்கள் நமக்கு கேட்காமலேயே கொடுத்து இருக்கிறான்.
சில சமயம் கேட்டு கொடுப்பதில் சுகம் இருக்கிறது.
பிள்ளை ஐஸ் கிரீம் வேண்டும் என்று ஆசையாக கேட்கிறான்/ள். ஓடிப் போய் வாங்கி தருகிறோம். அந்தக் குழந்தை சுவைத்து மகிழ்வதை பார்த்து பெற்றோர் மகிழ்வார்கள் அல்லவா? கேட்காமலேயே தினம் ஒரு ஐஸ் கிரீம் வாங்கித் தந்தால், "வேண்டாம் போ " என்று தூக்கி எறிந்து விடும்.
மனைவிக்கு ஆயிரம் பரிசுகள் வாங்கித் தரலாம். ஆனால், அவள் ஆசைப்பட்டு கேட்ட ஒன்றை வாங்கித் தருவதில் உள்ள சுகமே தனி.
இராமனுக்குத் தெரியாதா பொன் மான் என்று ஒன்று இல்லை என்று. வசிட்டரிடமும், விஸ்வாமித்திரரிடமும் பயின்றவனுக்கு இது கூடத் தெரியாதா.
மனைவி கேட்டு விட்டாள். தன் பொருட்டு எவ்வளவோ துன்பம் அனுபவிக்கிறாள். அவள் ஆசைப் பட்டு கேட்டு விட்டாள். அவளிடம் போய் தர்க்கம் பண்ணிக் கொண்டு இருப்பதில் என்ன சுகம். அவள் கேட்டதை பிடித்துத் தர வேண்டும் என்று கிளம்பி விட்டான்.
அது போல, இறைவனும் காத்துக் கொண்டே இருக்கிறானாம். நினைத்தவுடன் தர்மன் மனதில் வந்து விட்டான்.
கூப்பிடவுடன் யானைக்காக வந்தான், பாஞ்சாலிக்காக வந்தான்.
நமக்கும் வருவான் என்ற நம்பிக்கையை இந்த இலக்கியங்கள் விதைக்கின்றன.
நான் நினைத்தால் வருவானா? எத்தனையோ தரம் நினைத்து இருக்கிறேன். வரவே இல்லை என்றால்.
தர்மன் பிறர் மனம் நோகும்படி தவறாகவே பேச மாட்டானாம்.
இறைவன் மனதில் வர வேண்டும் என்றால் அது தூய்மையாக இருக்க வேண்டாமா.
நான் மனதை குப்பையாக வைத்து இருப்பேன், இறைவன் வர வேண்டும் என்றால் நடக்குமா?
வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ? - பாகம் 1
பாண்டவர்கள் காட்டில் இருக்கிறார்கள். துரியோதனன் சூதில் வென்று பாண்டவர்களை கானகம் அனுப்பி விட்டான்.
நிம்மதியாக இருக்க வேண்டியது தானே? இல்லை. அவனால் முடியாது. எப்போது பொறாமை மனதில் புகுந்து விட்டதோ, நிம்மதி போய் விடும்.
பாண்டவர்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று நினைக்கிறான்.
அப்போது அங்கு துர்வாச முனிவர் வருகிறார். அவரை நன்கு உபசரிக்கிறான். அவரும் அதில் மகிழ்ந்து, "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்...தருகிறேன்" என்றார்.
என்ன கேட்டு இருக்க வேண்டும்?
ஞானம் கேட்டிருக்கலாம். செல்வம் கேட்டு இருக்கலாம். புகழ் கேட்டு இருக்கலாம். வீடு பேறு கேட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டான். பாண்டவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்று நினைத்து "முனிவரே என் மாளிகை வந்து என்னை சிறப்பித்தது போல, பாண்டவர்களிடமும் சென்று நீங்கள் அவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.
அவன் எண்ணம் என்ன என்றால், துர்வாச முனிவர் சீடர்களுடன் அங்கு போவார். பாண்டவர்களால் முனிவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவு வழங்க முடியாது. துர்வாச முனிவருக்கு கோபம் வரும். அவர் பாண்டவர்களை சபிப்பார். பாண்டவர்கள் நாசமாகப் போவார்கள். அது தான் அவன் எண்ணம்.
துர்வாச முனிவரும் அவ்வாறே சென்றார்.
அவரை வரவேற்று உபசரித்து, குளித்து விட்டு வாருங்கள் உணவு அருந்தலாம் என்று தர்மன் அவரை அனுப்பி விட்டான்.
அவர்களிடம் அட்சய பாத்திரம் இருந்தது. ஆனால், அதில் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு வரும். கழுவி கவிழ்த்து வைத்து விட்டால் பின் மறு நாள் தான் அதில் உணவு வரும்.
துர்வாசர் வந்த அன்று, பாண்டவர்கள் உணவு உண்டு, பாத்திரத்தை கழுவி வைத்து விட்டார்கள்.
இப்போது என்ன செய்வது?
https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_71.html
(Pl click the above link to continue reading)
முனிவர் வருவார். பசிக்கு உணவு இல்லை என்றால் அவருக்கு கோபம் வரும். சாபம் தருவார். என்ன செய்வது என்று தவித்துக் கொண்டு இருந்தார்கள்.
இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான்.
தர்மன் கண்ணனை நினைக்கிறான். கண்ணன் வருகிறான்.
இங்கே வில்லிப் புத்தூர் ஆழ்வார் ஒரு அருமையான கவிதை வைக்கிறார்.
பாடல்
தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக
அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்
எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற
ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.
ப்ளாக் சற்றே நீண்டு விட்டதால், பொருள் விளக்கத்தை அடுத்த பாகத்தில் பார்ப்போமா?
No comments:
Post a Comment