Pages

Friday, October 15, 2021

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி - ஆறாக் காமக் கொடியகனல்

 திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி - ஆறாக் காமக் கொடியகனல்


எந்தத் தீயும் சிறிது நாளில் ஆறிவிடும். பெரிய பெரிய எரிமலை கூட வெடித்துச் சிதறி, நெருப்பைக் கக்கினாலும், சில பல மாதங்களில் குளிர்ந்து விடும். 


என்றும் ஆறாத கனல் என்பது காமக் கனல்தான். உடல் உள்ள அளவும், உயிர் உள்ள அளவும் எரிந்து கொண்டே இருக்கும் கனல் அது.


ஏன் அப்படி எரிகிறது? தொடர்ந்து எரிய வேண்டும் என்றால், யாரவது அதில் மேலும் மேலும் எரியும் பொருட்களைப் போட வேண்டும், ஊதி விட வேண்டும் அல்லவா?


ஐந்து புலன்களும் அந்தக் காமக் கனலை அணையவிடாமல் பார்த்துக் கொள்கின்றன. 


பார்வையில் காமம், தொட்டால் சுகம், கேட்டால் இனிமை, அருகில் சென்றால் மணம் காமத்தைத் தூண்டும்...ஐந்து புலன்களும் காமம் என்ற தீ அணைந்து விடாமல் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. 


இப்படி ஒரு தீ எரிந்து கொண்டே இருந்தால், அந்த உடம்புதான் என்ன ஆகும். எரிந்து சாம்பலாகிப் போய் விடும் அல்லவா? அப்படி வெந்து நீராகாமல், காம உணர்வுகளை அகற்றி, உன்னை நினைக்கும் அருள் தந்து, என்னைக் காத்தாய் என்று திருக்கருவை என்ற ஊரில் உறையும் சிவ பெருமானே என்று அதி வீர ராம பாண்டியர் பாடுகிறார். 



பாடல் 


ஆறாக் காமக் கொடியகனல்

        ஐவர் மூட்ட அவலமனம்

    நீறாய் வெந்து கிடப்மேனை,

        நின்தாள் வழுத்த நினைவுதந்து

    மாறா நேயத் திரவுபகல்

        மறவா திருக்க வரமளித்தாய் ;

    சீறா டரவம் முடித்தசடைக்

        கருவை வாழும் செழுஞ்சுடரே !


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_15.html


(Pl click the above link to continue reading)


ஆறாக் = தீராத, அணையாத 


காமக்  = காமம் என்ற 


கொடியகனல் = கொடிய தீயை 


ஐவர் = ஐந்து புலன்களும் 


மூட்ட = பற்ற வைக்க 


அவலமனம் = கீழான மனம் 


நீறாய் = சாம்பலாய் 


வெந்து கிடப்மேனை, = வெந்து கிடக்கும் என்னை 


நின்தாள்  = உன் திருவடிகளை 


வழுத்த = போற்றும் படி, வணங்கும் படி 


 நினைவுதந்து = நினைவு தந்து 


மாறா நேயத் = மாறாத அன்பினால் 


திரவுபகல் = இரவும் பகலும் 


மறவா திருக்க வரமளித்தாய் ; = மறவாமல் இருக்க வரம் அளித்தாய் 


சீறா டரவம் = சீரும் அரவத்தை (பாம்பை) 


 முடித்தசடைக் = முடித்த சடையில் கொண்ட 


கருவை = திருக்கருவை என்ற தலத்தில் 


வாழும் செழுஞ்சுடரே ! = எழுந்து அருளி இருக்கும் உயர்ந்த சுடரே, ஒளியே 


காமத்தில் இருந்து நாமே எங்கு வெளி வருவது.


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் அருளியது போல, காமத்தை மாற்றி அவனை நினைக்க அவன் தான் அருள் புரிய வேண்டும். 


மேலும், அதிவீரராம பாண்டியர் கூறுகிறார்,  ஒரு தீய எண்ணம் போக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அதை மாற்ற முடியாது. அதோடு போராட முடியாது. தீய எண்ணங்களை மாற்ற எளிய வழி நல்லதை நினைப்பதே. 


whatsapp பார்க்கக் கூடாது என்று நினைத்தால் முடியாது. மனம் அங்கு தான் போகும். அதற்குப் பதில் நல்லதை எதையாவது படிக்க வேண்டும். மனம் நல்லதில் போகும். 


தவறான இடத்துக்குப் போகக் கூடாது என்று சொன்னால் மனம் கேட்காது. அந்த நேரத்தில் கோவிலுக்குப் போய் விட வேண்டும். 


காம எண்ணம் வருகிறதா, அது தவறு என்று தெரிந்தால், அதை மாற்ற மனதை வேறொன்றின் மேல் செலுத்த வேண்டும். 


இதை யோக சாத்திரத்தில் ப்ரத்யாகாரம் என்று சொல்லுவார்கள். 


மனதை மடை மாற்றும் வேலை.


மிக எளிய பாடல்கள் . 


நூறு பாடல்கள் பாடி அருளி இருக்கிறார். 


மூல நூலை படித்துப் பாருங்கள். 


No comments:

Post a Comment