Pages

Saturday, October 16, 2021

நாலடியார் - பாற்கூழை மூழை சுவையுணராது

நாலடியார் -  பாற்கூழை மூழை சுவையுணராது 


சிலருக்கு எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்மறையான ஒன்றைச் சொன்னால்தான் ஒரு திருப்தி. சொல்பவர் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய கருத்தாக இருந்தாலும், தங்கள் மேதா விலாசத்தை காட்டாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது.


"வள்ளுவர் தவறாக சொல்லி விட்டார்" 


"கம்பர் பாட்டில் பிழை"


என்று ஏதாவது இடக்கு மடக்காக சொன்னால்தான் தாங்கள் அறிவாளிகள் என்று மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது அவர்கள் எண்ணம். 


பெரியவர்கள், தங்களுக்குத் தெரிந்த உண்மைகளை தாங்களே வைத்துக் கொண்டிருக்கலாம். வருங்கால சந்ததிக்கு பயன் படட்டுமே என்று நம் மேல் உள்ள அன்பினால், அருளினால் அவர்கள் கண்ட அறங்களை நமக்குச் சொல்லி விட்டுப் போனார்கள். 


அதை நன்றி உணர்வோடு ஏற்றுக் கொள்வதுதான் அவர்களுக்கு செய்யும் கைம்மாறு. 


சிலருக்கு அது புரிவதே இல்லை. 


அண்டா நிறைய பால் பாயசம் இருக்கும். பாலும், முந்திரி பருப்பும், நெய்யும்,  சர்க்கரையும் இட்டு சுவையாக செய்த பால் பாயசம். அதை முகந்து பரிமாற அந்த அண்டாவில் ஒரு கரண்டி போட்டு இருப்பார்கள். அந்தக் கரண்டி முழுக்க முழுக்க பால் பாயசதுக்குள்தான் மூழ்கிக் கிடக்கும். 


என்ன பயன். கரண்டிக்கு பாயசத்தின் சுவை தெரியுமா?


அது போல, சிலர் எவ்வளவு படித்தாலும், படித்தவை உணர்வில் ஒட்டாது. அது மட்டும் அல்ல, படித்ததை புரியாமல் இகழவும் செய்வார்கள். தங்கள் நிலைக்கு உயர்ந்த புத்தகங்களை கீழ் இறக்கி விடுவார்கள். 


பாடல் 



அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்

பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருளல்லா

ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை

மூழை சுவையுணரா தாங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_29.html


(Pl click the above link to continue reading)


அருளின் = அருளினால் 


அறமுரைக்கும் = அறத்தினை எடுத்து உரைக்கும் 


 அன்புடையார் = அன்புடைய சான்றோர்களின் 


 வாய்ச்சொல் = வாயில் பிறந்த சொல்லை 


பொருளாகக் கொள்வர் புலவர்; = பெரிய மதிப்பு மிக்க பொருளாகக் கொள்வர் அறிவுடையோர் 


பொருளல்லா = பொருள் புரியாத


ஏழை = பேதை 


அதனை இகழ்ந்துரைக்கும் = அந்த அறங்களை பழித்துக் கூறும் 


பாற்கூழை = பால் பாயசத்தை 


மூழை = கரண்டி 


சுவையுணரா தாங்கு. = சுவை உணராதது போல 


பிறன் மனை நோக்கா பேராண்மை என்கிறார் வள்ளுவர். 


ஏன், மற்றவன் மனைவியைப் பார்த்தால் என்ன? அவளுக்கும் பிடித்து இருந்தால், பார்ப்பதில் என்ன தப்பு? ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் முட்டாள்தனம் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். 


அப்படி இல்லை என்றால், "வள்ளுவருக்கு என்ன சொல்லுவாரு...அதெல்லாம் நடை முறையில் சாத்தியம் இல்லை. அவருக்கு அதெல்லாம் எங்க தெரியப் போகுது" என்று வள்ளுவரின் அறிவை இவர்கள் எடை போடுவார்கள். 


பாற்கூழை சுவை உணரா மூழைகள். 


பாரதியார் சொல்வார், தேன் குடத்தில் இட்ட அகப்பைகள் என்று. 




1 comment:

  1. யார் என்ன சொல்லாலும், அதைத் தவறு என்று சொல்வதில் குற்றம் இல்லை. இந்தப் பாடலே தவறு!

    ReplyDelete