Pages

Sunday, October 10, 2021

கந்தர் அநுபூதி - பாடும் பணியே

கந்தர் அநுபூதி - பாடும் பணியே 


ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். நீண்ட நாளாக அந்த ஊரில் பிச்சை எடுத்து வந்தான். அவன் மேல் பரிதாபப்பட்ட அந்த ஊர் பணக்காரர் ஒருவர், "சரி, இனி மீதி இருக்கும் நாட்களிலாவது அவன் சந்தோஷமாக இருக்கட்டும்" என்று எண்ணி, அவனுக்கு நிறைய பணம் கொடுத்தார்.  நிறைய என்றால் நிறைய. வாழ் நாள் முழுவதும் இருந்து சாப்பிடும் அளவுக்கு. 



சில நாள் கழித்து அவன் எப்படி இருக்கிறான் என்று வந்து பார்த்தார். 


அவர் கொடுத்த பணத்தில் ஒரு நல்ல நாற்காலி, ஒரு குடை, ஒரு செருப்பு, நல்ல பிச்சை பாத்திரம் எல்லாம் வாங்கி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். 


 அப்படி சிலர் இருக்கிறார்கள். 


என்ன உயர்ந்த நூல்களைப் படித்தாலும், என்ன சொற்பொழிவு கேட்டாலும், மீண்டும் மனம் பழைய வேலைக்குத்தான் போகும். 


கோடி கொடுத்தாலும், பிச்சைக்காரன் புத்தி பிச்சையில்தான் இருக்கும். 


அது கூடப் பரவாயில்லை. இன்னும் சிலர் இருக்கிறார்கள். வேலை மெனக்கெட்டு, நேரம் செலவழித்துப் படிப்பார்கள். தங்களை முன்னேற்றிக் கொள்ள அல்ல, அந்த நூலில் என்ன தவறு கண்டு பிடிக்கலாம்? அதில் என்ன பிழை இருக்கிறது என்று கண்டு சொல்ல. 


அதைக் கண்டு பிடித்து சொல்வதால் அவனுக்கு என்ன பயன்? ஒரு பயனும் இல்லை. அதில் ஒரு சந்தோஷம். 



சில அரக்கர்கள் இருந்திருக்கார்கள். நல்லவர்களை, முனிவர்களை, யோகிகளை தேடி கண்டு பிடிப்பார்ர்கள். எதற்கு? அவர்களிடம் இருந்து அறிவைப் பெற அல்ல. அவர்களை கொன்று தின்ன. எங்கே வேள்வி நடக்கிறது, எங்கே நல்ல காரியம் நடக்கிறது என்று தேடிப் போய், அதில் குழப்பம் விழைவிப்பது. 



வேள்வியில் மாமிசம், இரத்தம் இவற்றை கொட்டுவதுதான் வேள்வியை தடை செய்வது என்று நினைக்காதீர்கள். ஒரு நல்ல புத்தகத்தை படித்துவிட்டு அதை பற்றி தவறாக புரிந்து கொள்வதோ, தவறாக பேசுவதோ அதற்கு சமமானதுதான். 



அருணகிரிநாதர் சொல்கிறார் 


" தேடும் கயமா முகனைச் செருவிற் சாடும்"


கயமுகன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் முனிவர்களை தேடி கண்டு பிடித்து அவர்களை கொன்று தின்று விடுவான். அந்த அரக்கனை விநாயகப் பெருமான் கொன்றார். 


பாடல் 


ஆடும் பரிவே லணிசே வலெனப்

 பாடும் பணியே பணியா வருள்வாய்

 தேடும் கயமா முகனைச் செருவிற்

 சாடுந் தனியானை சகோதரனே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_62.html


(please click the above link to continue reading)



ஆடும் பரி = ஆடி ஆடி நடக்கும் குதிரை 


வேல் = வேல் 


அணி சே வலெனப் = சேவல் என்று அணி வகுத்து நிற்கும் உன்னை 


 பாடும் பணியே = பாடி துதிக்கும் வேலையையே 


 பணியா வருள்வாய் = நான் எப்போதும் செய்யும் பணியாக அருள்வாய் 


 தேடும்= கொன்று தின்பதற்காக முனிவர்களை தேடும் 


கயமா முகனைச் = கயமாமுகன் என்ற அரக்கனை 


செருவிற் =போரில் 


 சாடுந் = சண்டையிட்டு வென்ற 


தனியானை சகோதரனே! = தனித்துவம் மிக்க யானை முகம் கொண்ட விநாயகனின் சகோதரனே, முருகனே 


முருகனுக்கு மயில் தானே வாகனம். குதிரை எங்கிருந்து வந்தது?


குதிரை போல நடக்கும் மயில் என்று பொருள்.


ஆடும் என்ற வார்த்தைக்கு கி.வா.ஜா அற்புதமான விளக்கம் எழுதி இருக்கிறார். 


ஓம் என்பது பிரணவ மந்திரம்.


அது அகர, உகர, மகர சம்மேளனம் என்று சொல்லுவார்கள். 


அதாவது அ + உ + ம் சேர்ந்தால் ஓம் என்ற சப்தம் வரும். 


அ உ ம் என்று திருப்பி திருப்பி வேகமாக சொல்லிக் கொண்டிருந்தால் அது ஓம் என்ற ஒலியைத் தரும்.


ஒலி பிறக்கும் இடம் அ 


பிறந்த ஒலியை நிலை நிறுத்த வேண்டும் என்றால் உ என்று கூற வேண்டும். 


அ என்றால் அதோடு நின்று விடும். 


உ என்றால் நீட்டிக் கொண்டே போகலாம். 


ம் என்றால் முடிந்து விடும்.


அதாவது பிறப்பு, நிலைத்தல், மறைதல் என்ற முத்தொழிலையும் உள்ளடக்கியது பிரணவ மந்திரம் என்று கூறுவார்கள். 


ஆடும் என்ற சொல்லைப் பிரித்துப்  பார்ப்போம். 


அ (ஆ என நீண்டது) + 

ட் + உ = டு  +

ம் 


அகர உகர மகர சம்மேளனம் வந்து விட்டது அல்லவா? 


அதை மறை பொருளாகக் கூறினார் என்கிறார் கி. வா. ஜா 


எழுத்து எண்ணிப் படித்தவர்கள். 







1 comment:

  1. "அ என்றால் அதோடு நின்று விடும். உ என்றால் நீட்டிக் கொண்டே போகலாம்" என்பது அபத்தமாக இருக்கிறதே. என்னால் "அ" என்ற சொல்லை நீட்டிக்கொண்டு முடிகிறதே!

    அது இருக்கட்டும். ஒரு மனிதரோ, ஒரு புத்தகமோ ஒரு பொருள் சொன்னால், அதைத் தட்டிக்கேட்பதில் தவறு இல்லை. யாராவது அந்தப் பொருள் தவறு என்று சொன்னால், "நீ சும்மா குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்" என்று சொல்வது சரியல்ல. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்பது போல, எதையும் கேள்வி கேட்கலாம்.

    ReplyDelete