திருவாசகம் - யாத்திரைப் பத்து
எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?
ஏதாவது இலக்கு இருக்கிறதா? இந்த நேரத்தில், இந்த இடத்துக்குப் போக வேண்டும் என்று ஏதேனும் குறிக்கோள் இருக்கிறதா?
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் பயணிக்கிறோம்.
எங்கு போவது என்றும் தெரியாது. எப்படி போவது என்றும் தெரியாது.
சரி, போகலாம், போகிற வழியில் யாரையாவது விசாரித்துக் கொள்ளலாம் என்றால் கிளம்ப வேண்டுமே.
எல்லாம் போட்டது போட்டபடி இருக்கிறது. எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கு பண்ணி வைத்துவிட்டு தானே கிளம்ப முடியும்.
இருக்கிற வீட்டை விட்டு கிளம்புவது என்றாலே gas ஐ மூடினோமா, மின்சாரத்தை ஆப் செய்தோமா, குழாய் எல்லாம் சரியாக அடைத்தோமா, ஜன்னல் எல்லாம் சரியாக சாத்தினோமா என்று ஆயிரம் யோசனை இருக்கிறது.
இந்த உலகை விட்டு இறைவனை நோக்கிய பயணம் என்றால் எவ்வளவு செய்ய வேண்டும்.
மனைவி/கணவன், பெற்றோர், பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், மகன்/மகள், மருமகன், மருமகள், இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள், அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் என்று எவ்வளவு இருக்கிறது.
இதை எல்லாம் முடித்துவிட்டு கிளம்புவது என்றால், எப்போது கிளம்புவது?
அலை எப்ப ஓய , தலை எப்ப முழுக?
மணிவாசகர் சொல்கிறார், "இப்ப...இப்பவே கிளம்புங்கள்" என்று.
ஆன்ம தேடல் வந்து விட்டால், சித்தார்த்தன் மாதிரி, பட்டினத்தார் மாதிரி துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு கிளம்பி விடவேண்டும்.
எல்லாம் முடித்துவிட்டு கிளம்புகிறேன் என்றால் அது ஒரு காலத்திலும் நடக்காது.
பாடல்
பூ ஆர் சென்னி மன்னன், எம் புயங்கப் பெருமான், சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்து, உணர்வு ஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால்,
`ஆ! ஆ!' என்னப் பட்டு, அன்பு ஆய் ஆட்பட்டீர், வந்து ஒருப்படுமின்;
போவோம்; காலம் வந்தது காண்; பொய் விட்டு, உடையான் கழல் புகவே.
பூ ஆர் சென்னி = பூக்கள் நிறைந்த தலை
மன்னன் =எங்கள் மன்னன்
எம் புயங்கப் பெருமான் = பாம்பை அணிந்த எங்கள் பெருமான்
சிறியோமை = சிறியவர்களான எங்களை
ஓவாது உள்ளம் கலந்து = ஓவுதல் என்றால் நீக்குதல். ஓவாது என்றால் நீங்காமல் எம் உள்ளத்தில் கலந்து
உணர்வு ஆய் = உணர்வாகி
உருக்கும் வெள்ளக் கருணையினால், = வெள்ளம் போல் வரும் கருணையினால் நம்மை உருக்கி
`ஆ! ஆ!' என்னப் பட்டு = அடா என்று ஆச்சரியப் பட்டு
அன்பு ஆய் ஆட்பட்டீர் = அன்பு உருவமாய் ஆட் கொள்ளப் பட்டீர்
வந்து ஒருப்படுமின்; = வந்து ஒன்றாகக் கூடுங்கள்
போவோம் = போகலாம்
காலம் வந்தது காண் = போக இதுதான் சரியான காலம்
பொய் விட்டு = பொய்யான இந்த உலகை விட்டு
உடையான் கழல் புகவே. = அனைத்தும் உடையவன் திருவடிகளை அடைய
Travel Agent மாதிரி மணிவாசகர் எல்லோரையும் அழைக்கிறார்.
வண்டி எடுக்கப் போறோம். சீக்கிரம் வாங்க என்று அறை கூவி அழைக்கிறார்.
"போவோம், காலம் வந்தது காண்" என்கிறார்.
இதுதான் காலம்.
இந்த உலகில் எதையும் நாம் சரி செய்து வைத்துவிட்டுப் போக முடியாது.
நமக்கு முன் இந்த உலகம் இருந்தது.
நமக்கு பின்னும் இருக்கும்.
நாம் ஒழுங்கு படுத்தாவிட்டால் ஒன்றும் கெட்டுப் போய் விடாது.
யாத்திரைக்கு அழைக்கிறார் மணிவாசகர்.
No comments:
Post a Comment