திருக்குறள் - இன்புற்றார் எய்தும் சிறப்பு
குடும்ப வாழக்கை வாழும் போதே எல்லாவற்றையும் விட்டு விட்டு, சுவர்க்கம் போகணும், வைகுண்டம் போகணும், கைலாசம் போகணும் என்று நினைக்கிறோம்.
ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். நம்மை போல் எத்தனை பேர் எத்தனை யுகமாக இப்படி வேண்டி அங்கு போய் இருப்பார்கள். எவ்வளவு பெரிய கூட்டமாக இருக்கும்? அதில் போய் என்ன செய்வது?
சுவர்க்கம் என்றால் ஒரே ஒரு ஊர்வசி, ஒரே ஒரு இரம்பை...முப்பது முக்கோடி தேவர்கள். அவர்கள் ஆட்டத்தை எத்தனை நாள் தான் இரசிப்பது?
சலிப்பு வராதா? அலுத்துப் போகாதா? அப்புறம் என்ன செய்வது? அதற்கு மேல் எங்கே போவது? பெரிய பிரச்னை அல்லவா அது.
வள்ளுவர் சொல்கிறார், அதையெல்லாம் விடுங்கள்.
இந்த உலகில் அன்பு செய்யுங்கள். அதை விட பெரிய சுவர்க்கம் இல்லை.
கட்டிய கணவன், மனைவி மேல் அன்பு செய்யத் தெரியாதவர்கள் எப்படி காணாத கடவுள் மேல் அன்பு செய்யப் போகிறார்கள்.
அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, நட்பு, உறவு, சுற்றம், பேரன், பேத்தி, அத்தை, மாமா என்று ஆயிரம் பேர் இருக்கிறார்கள் அன்பை அள்ளிக் கொட்ட, திகட்ட திகட்ட முகர்ந்து கொள்ள.
அதை விடவா சுவர்க்கம் சுகமாக இருக்கப் போகிறது.
உடன் பிறப்பிடமும், நட்பிலும் அன்பு பரிமாறத் தெரியாதவன் முன்ன பின்ன தெரியாத தேவர்கள் மத்தியில் போய் என்ன செய்வான்?
அன்பு பரிமாறும் வித்தை தெரிந்து விட்டால் இந்த வாழ்க்கை தான் சுவர்க்கம்.
பாடல்
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_6.html
(Please click the above link to continue reading)
அன்புற்று = அன்பு கொண்டு
அமர்ந்த = இல்லறத்தோடு
வழக்கு = கூடிய வாழ்வின் நெறி என்று
கென்ப = என்ப, என்று சொல்லுவார்கள்
வையகத்து = உலகில்
இன்புற்றார் = இன்பம் அடைந்தவர்கள்
எய்தும் சிறப்பு = அடையும் சிறப்பு.
இந்தப் குறளின் அர்த்தத்தை பரிமேலழகர் கண்டு சொல்கிறார். நாம் தலையால் தண்ணி குடித்தாலும் அந்த உரையின் பக்கம் கூட போக முடியாது. அவ்வளவு ஆழமான சிந்தனை.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
என்ற குறளில், "அன்புற்று அமர்ந்த" என்பதில் அன்புற்று என்றால் என்ன என்று புரிகிறது. அது என்ன "அமர்ந்த" ?
இந்தக் குறள் இல்லறவியலில் இருக்கிறது. எனவே, அமர்ந்த என்றால் "இல்லறத்தில் ஈடுபட்டு" என்று பொருள் கொள்கிறார்.
சரி. "வழக்கு" என்றால் என்ன?
வழக்கு என்றால் "இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன்" என்று பொருள் சொல்கிறார்.
அன்புற்று அமர்ந்த வழக்கு என்றால் அன்பு கொண்டு இல்லறத்தோடு கூடிய நெறியின் பயன் என்று வந்து விட்டது.
அடுத்து வருவதுதான் பரிமேலழகர் உச்சம் தொடும் இடம்.
"இன்புற்றார் எய்தும் சிறப்பு". இன்புற்றவர்கள் யார் என்ற கேள்விக்கு, துன்பமே இல்லாமல், எப்போதும் இன்பத்தில் இருப்பவர்கள், அதாவது தேவர்கள். அவர்கள் நம்மை விட இன்பமாக இருப்பவர்கள் அல்லவா?
அது எப்படி இன்புற்றார் என்றால் தேவர்கள் என்று கொள்ள முடியும்? என் பக்கத்து வீட்டுக்காரன் கூட எப்போதும் இன்பமாகத்தான் இருக்கிறான். ஏன் அவனைச் சொல்லக் கூடாது என்று கேள்வி எழும் அல்லவா?
"சிறப்பு" என்றால் என்ன? சிறந்தது, சிறப்பு எனப்படும் அல்லவா. ஐந்து உருபாயையை விட பத்து உருபாய் சிறந்தது. மிதி வண்டியை விட ஆகாய விமானம் சிறந்தது. இப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று சிறந்தது என்று சொல்லிக் கொண்டே போனால், எல்லாவற்றையும் விட சிறந்தது எது?
அதைத்தான் பேரின்பம் என்கிறோம். நீண்ட இன்பம், முடிவில்லா இன்பம். துன்பம் கலக்காத இன்பம்.
அந்த பேரின்பத்தை அடைந்தவர் யார்?
தேவர்கள்.
எனவே "இன்புற்றார் அடையும் சிறப்பு" என்றால் தேவர்கள் அடையும் சிறப்பு என்று பொருள் கொள்கிறார்.
எனவே அன்போடு இல்லற நெறியின் கண் வாழ்வதின் பயன் தேவர்கள் அடையும் பேரின்பம் என்று பொருள்.
அப்படின்னு யார் சொல்கிறார்கள்? அப்படி யாரும் சொன்ன மாதிரி தெரியவில்லையே?
என்னைக் கேட்டால் மூன்று வேளையும் நல்லா சுவையான உணவை சாப்பிடுவதுதான் சிறப்பு என்பேன்.
பரிமேலழகர் சொல்கிறார் "என்ப" என்றால் அறிவுடையோர் சொல்லுவர் என்று அர்த்தம் என்று.
இப்படி வாழ்ந்தால் அப்படிபட்ட இன்பம் அடையலாம் என்று அறிவுடையோர் கூறுவார்.
அப்படி கூறாதவர்கள் யார் என்று நாம் முடிவு செய்து கொள்ளலாம்.
அன்பு செய்யுங்கள். மேலும் மேலும் அன்பு செய்து கொண்டே போங்கள். இல்லறம் என்பது அன்பு செய்ய கிடைத்த பெரிய வாய்ப்பு.
நேற்றை விட இன்று கொஞ்சம் அதிகம் அன்பு செய்ய வேண்டும். இன்றை விட நாளை.
மிக நல்ல குறள். இங்கே படிப்பதற்கு முன் நான் கேட்டிராத ஒன்று. நன்றி.
ReplyDelete