Pages

Thursday, November 18, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனக்கவலை தீர்ப்பார் வரவு

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனக்கவலை தீர்ப்பார் வரவு 


உடம்புக்கு ஒரு வலி என்றால் மருத்துவரைப் போய் பார்க்கிறோம். மருந்து தருகிறார். குணமாகிறது. 


மனதில் வரும் வலியை, கவலையை எப்படி போக்குவது? மனோ தத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண்டு பிடிப்பதற்கே பல காலம் ஆகும். கண்டு பிடித்தாலும் எல்லா மனக் கவலைக்கும் மருந்து இருக்கிறதா? 


ஏதோ ஒரு பெரிய தோல்வி, நெருங்கியவர் இறந்து போனார், இப்படி பல கவலைகள் இருக்கின்றன. அவற்றுக்கு எல்லாம் எங்கே மருந்து இருக்கிறது. 


நம்மாழ்வார் சொல்கிறார்...இறைவன் ஒருவன் தான் எல்லா மன கவலைக்கும் மருந்து. 


இறைவன் திருவடியை சேராதவர்களுக்கு மனக் கவலையை மாற்ற முடியாது என்கிறார் வள்ளுவர். 


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.


சரி, இறைவனை எப்படி அடைவது? அவன் எப்படி இருப்பான், எங்கே இருப்பான், ஒன்றும் தெரியாது. விலாசம் இருந்தால் தேடிக் கண்டு பிடிக்கலாம். விலாசமே இல்லாவிட்டால் எப்படி கண்டு பிடிப்பது? 


சரி, விலாசம் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். வழி தெரியுமா? தெரியாது. 


சரி, விலாசமும் இருக்கிறது. வழியும் தெரியும். இறைவன் இருக்கும் இடத்துக்கு போயும் சேர்ந்தாகி விட்டது. இறைவனை நம் அறிவால் புரிந்து கொள்ள முடியுமா? அவன் அறிவுக்கு எட்டிய உயரம், நிறம், கனம், ஆண்/பெண் பாகுபாடு என்ற எல்லைக்குள் இருப்பானா? நம் சிற்றறிவுக்குள் அவனை எப்படி அடக்குவது? 


நம்மாழ்வார் சொல்கிறார், நம்மால் தேடி கண்டு பிடிக்க முடியாது. ஆனால், அவன் நினைத்தால் நம் உள்ளத்துக்குள் வர முடியும். 


தேடுபவர்களுக்கு கிடைக்க மாட்டான். தேடாதார் நெஞ்சில் தானே வந்து அமர்ந்து கொள்வான் என்கிறார். 


அப்படி அவன் வந்து விட்டால், மனதில் கவலையே இருக்காது என்கிறார். 


பாடல் 



மருங்கோத மோதும் மணிநா கணையார்,


மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே


எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,


மனக்கவலை தீர்ப்பார் வரவு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_62.html


(click the above link to continue reading)



மருங்கோத மோதும்  = மருங்கு + ஓதம் + மோதும் = கரையில் அலை வந்து மோதும். பாற்கடலில் அலை வந்து மோதும் 


மணிநா கணையார், = மாணிக்கத்தை உடைய படத்தைக் கொண்ட ஆதி சேஷன் மேல் பள்ளி கொள்ளும் 


மருங்கே வரவரிய ரேலும் = மருங்கே வர அரியர் எலும் = அருகில் யாராலும் வர முடியாத 


ஒருங் கே = சிறந்த தனித் தன்மையுடன் 


எமக்கவரைக் = எமக்கு அவரை 


காணலா மெப்போது = காணலாம் எப்போதும் 


முள்ளால், = உள்ளதால் 


மனக்கவலை தீர்ப்பார் வரவு. = மனக் கவலை தீர்ப்பார் வரவு 


வீடு கட்டும் போது, இரண்டு செங்கலை ஒட்ட வைக்க நடுவில் சிமென்ட் கலவையை வைப்போம் அல்லவா? 


அது போல செய்யுளை செய்யும் போது இரண்டு சீர்களை (சொற்களை) ஒட்டி வைக்க வேற்றுமை உருபுகள் என்று உண்டு. 


மூன்றாம் வேற்றுமை உருபு "ஆல்" என்ற சொல். 


இந்த வேற்றுமை உருபுகள் சில சமயம் வெளிப்பட்டு நிற்கும். சில சமயம் மறைந்து நிற்கும். அப்படி மறைந்து நிற்பதற்கு "தொக்கி நிற்றல்" என்று பெயர். 


இங்கே, 


"மனக்கவலை தீர்ப்பார் வரவு"


என்று இருக்கிறது. 


ஒருவாறு அர்த்தம் புரிந்தாலும், எங்கோ இடிக்கிறது அல்லவா?


இங்கே, "ஆல்" என்ற மூன்றாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது. 


எப்படி?


"வரவால் மனக் கவலை தீர்ப்பார்"


என்று இருக்க வேண்டும். 


வரவால் என்பதில் உள்ள "ஆல்" தொக்கி நிற்கிறது. 


அதை வெளிப்படுத்தினால் அர்த்தம் சரியாக விளங்கும். 


அவர் வந்தால் மனக் கவலை எல்லாம் தீர்ந்து விடும். 


இலக்கணம் தெரிந்து கொண்டால் இலக்கியம் இன்னும் சுவைக்கும். 


முழு இலக்கணத்தையும் படிப்பது என்பது வாழ் நாள் வேலை. வேண்டிய அளவு அங்கங்கே தெரிந்து கொண்டு போவோம். 






1 comment:

  1. படிக்க மிக ருசியாக உள்ளது. சில சமயம் எளிதாகவும் உள்ளது. கூடவே ஒரு ஏக்கமும் வருகிறது. வாழ்நாட்களை வீணாக்கி விட்டோமே. நமக்கு இப்போது உள்ள சிறிய பகவத் சிந்தனையில்
    அந்த பாக்கியம் கிடைக்குமா என்ற உறுத்தல்

    ReplyDelete