Pages

Sunday, December 19, 2021

திருக்குறள் - சுவர்க்கம் செல்ல எளிய வழி

திருக்குறள் - சுவர்க்கம் செல்ல எளிய வழி 


சொர்கத்திற்கு போக வேண்டும் என்று விரும்பாதார் யார்? அல்லது நரகத்துக்கு போக வேண்டும் என்று விரும்புவர் யார்? 


இதை எல்லாம் நம்பாதவர்களை விட்டு விடுவோம். நம்புபவர்களைப் பற்றி பேசுவோம். 


எப்படி சொர்க்கம் போவது?


நிறைய சாமி கும்பிடணுமா? கோயில், குளம் னு திரியனுமா? பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்யனுமா? இருக்கிற ஆன்மீக புத்தகம் எல்லாம் படிக்கணுமா?  எல்லாவற்றிலும் ஏதோ கொஞ்சம் செய்கிறோம். நம் சக்திக்கு ஏற்றவாறு. அது போதுமா? 


"நீ செஞ்ச புண்ணியத்துக்கு ஒரு அஞ்சு ஆறு வருஷம் சொர்கக்த்தில இருந்திட்டு போ" ன்னு சொல்லிட்டா என்ன பண்றது? திருப்பியும் வந்து பிறக்கனுமா? 


சரி, எப்படியோ தத்தி முத்தி போய் விட்டோம் என்றே வைத்துக் கொள்வோம். நம்மை அங்கே ஏற்றுக் கொள்வார்களா? நம்மை விட பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் அங்கே இருப்பார்கள். நம்மை யார் மதிக்கப் போகிறார்கள். 


பெரிய ஞானிகள், சமூக சேவகர்கள், நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள், பிறர் துன்பம் தீர்த்தவர்கள் என்று எவ்வளவோ பெரிய ஆட்கள் எல்லாம் இருப்பார்கள். நாம் ஒரு மூலையில் போய் இருந்து கொள்ள வேண்டியது தான். 


அது தேவையா நமக்கு? 


வள்ளுவர் சொல்கிறார், சொர்கத்திற்கு போகும் வழி மட்டும் அல்ல. அங்கே போகும் போது தேவர்கள் எல்லாம் சொர்கத்தின் வாசலில் நின்று நம்மை வரவேற்கவும் செய்வார்கள். அதுக்கு ஒரு வழி இருக்கிறது என்கிறார். 


மிக மிக எளிமையான வழி. 


"வீட்டுக்கு வந்து பின் செல்கின்ற விருந்தினர்களை போற்றி வழி அனுப்பிவிட்டு, அடுத்த விருந்தினர் எப்போது வருவார் என்று எதிர் பார்த்து காத்திருப்பவன் சொர்க்கம் கட்டாயம் போவது மட்டும் அல்ல, அவன் போகும் போது அவனை அங்குள்ள தேவர்கள் ஒரு விருந்தினனை போல வரவேற்பார்கள்" என்கிறார். 


பாடல் 


செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_19.html


(Please click the above link to continue reading)



செல்விருந்து ஓம்பி = செல்கின்ற விருந்தை போற்றி வழி அனுப்பிவிட்டு 


வருவிருந்து = இனி அடுத்து எப்போது விருந்து வரும் என்று 


பார்த்திருப்பான் = காத்து இருப்பவன் 


நல்விருந்து = நல்ல விருந்தினன் ஆவான் 


வானத் தவர்க்கு = தேவர்களுக்கு 


"நல் விருந்து" என்றால் மிக முக்கியமான விருந்தினர் என்று பொருள். நம் வீட்டுக்கு இந்த நாட்டின் பிரதமர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம், அது "நல் விருந்து".  அது போல சென்ற விருந்தை போற்றி, வரும் விருந்துக்காக காத்திருப்பவன், வானில் உள்ள தேவர்களுக்கு "நல் விருந்து". 


காத்து கிடப்பார்களாம். ஒரு பிரதம மந்திரி வருகிறார் என்றால் வீட்டை எப்படி அலங்கரிப்போம். எப்படி பரபரப்பாக இருக்கும்.  அது போல நாம் வருவதை எதிர் பார்த்து அவர்கள் இருப்பார்களாம்.


எவ்வளவு எளிமையான வழி. 


இது விருந்தின் மறுமைப் பயன் பற்றி கூறியது. 


வள்ளுவர் எதைக் கூறினாலும் இம்மை, மறுமை பயன்கள் பற்றி கூறுவார். 


முந்தைய குறள்களில் இம்மைப் பயன் பற்றி கூறினார்.


இந்தக் குறளில் மறுமை பயன் பற்றிக் கூறுகிறார். 


விருந்து அவ்வளவு உயர்ந்தது.




No comments:

Post a Comment