திருக்குறள் - விருந்து ஓம்புவான் பாழ் படுதல் இல்லை
நமக்கு வரும் வருமானம் நமக்கே போத மாட்டேன் என்கிறது. வீட்டுக் கடன், பிள்ளைகளின் படிப்புச் செலவு, அவர்களின் திருமணச் செலவு, எதிர்காலத்திற்கு என்று சேமிக்க வேண்டிய கட்டாயம் என்று பார்த்தால் நம் வருமானம் நமக்கு கட்டுபடி ஆவதில்லை. இதில் எங்கிருந்து விருந்தினரை உபசரிப்பது?
ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்தால் சரி. இதே வேலையாக ஓயாமல் வந்து கொண்டிருந்தால் நம்மால் தாங்க முடியுமா? வசதி வேண்டாமா?
வள்ளுவருக்கு என்ன சொல்லிவிட்டுப் போய் விடுவார். நடைமுறை சாத்தியம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா?
இப்படி எல்லோருக்கும் தோன்றுவது இயல்பு. வள்ளுவர் காலத்திலேயே இந்த கேள்வி எழுந்திருக்கிறது.
வள்ளுவர் சொல்கிறார்
"...என்ன சொல்கிறாய்? விருந்து உபசரித்தால் ரொம்ப செலவு ஆகி எழ்மையாகி விடுவேன். அதனால் பல துன்பங்கள் வரும் எனவே விருந்தோம்பல் என்பதற்கெல்லாம் ஒரு வரை முறை, ஒரு எல்லை, ஒரு வரம்பு வேண்டும் என்கிறாயா...நான் சொல்கிறேன் கேள் நீ எப்போதும் விருந்தை உபசரித்துக் கொண்டிருந்தால் உன் வாழ்வில் துன்பமே வராது "
என்று
பாடல்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_4.html
(click the above link to continue reading)
வருவிருந்து = வருகின்ற விருந்தை
வைகலும் = தினமும்
ஓம்புவான் = போற்றுவான்
வாழ்க்கை = அவனது வாழ்கை
பருவந்து = துன்பம் அடைந்து
பாழ்படுதல் இன்று = பாழ்படுதல் இல்லை
நீ விருந்தை உபசரித்தால் பெரிய பணக்காரன் ஆகி விடுவாய் என்று சொல்லவில்லை.
உனக்கு துன்பம் வராது. உன் வாழ்கை பாழாகாது என்கிறார்.
இதை எப்படி ஏற்றுக் கொள்வது? வள்ளுவர் சொல்கிறார் என்பதற்காக ஏற்றுக் கொள்ள முடியுமா?
இப்படி சிந்திப்போம்.
முதலாவது, விருந்தை உபசரிக்க வேண்டும் என்று நினைப்பவன், அதற்கான பொருளை கட்டாயம் தேடுவான். நமக்கு ஒரு பிள்ளை கூட இருந்தால் அதற்கும் சேர்த்து சம்பாதிப்போமா மாட்டோமா? எனவே, அவன் எப்போதும் முயற்சி உடையவனாக இருப்பான். எனவே அவனுக்கு பொருள் சேரும். துன்பம் வராது.
இரண்டாவது, அவனுடைய பரோபோகாரம் கண்டு மற்றவர்கள் அவனுக்கு முடிந்தவரை உதவி செய்வார்கள். இப்போது கூட நாம் காணலாம், "இந்த பொருளின் விற்பனையில் இத்தனை சதம் தர்ம காரியங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும்" என்று விளம்பரம் செய்கிறார்கள். அது நட்டம் தான். இருந்தும், பலர் அதன் காரணமாக அந்தப் பொருளை வாங்குவார்கள். அதனால் அந்த நிறுவனத்துக்கு நிகர இலாபம் கிடைக்கும்.
மூன்றாவது, எல்லோரையும் நன்றாக உபசரிப்பவனுக்கு ஒரு தீங்கு வந்தால் மற்றவர்கள் வந்து கை கொடுப்பார்கள். "அவனா, சரியான கஞ்சன். எச்சில் கையால் காக்காய் ஓட்ட மாட்டான்" என்று பெயர் எடுத்தவனுக்கு ஒரு துன்பம் என்று வந்தால் யார் முன் வந்து உதவி செய்வார்கள்? யாரும் செய்ய மாட்டார்கள். எனவே விருந்தை போற்றுபவனுக்கு துன்பம் வந்தாலும் மற்றவர்கள் உதவியால் விலகும் என்பதால் "பருவருதல் இல்லை" என்றார்.
நான்காவது, யாரையும் கிட்ட அண்ட விடாமல் எல்லாம் தனக்கு தனக்கு என்று சேர்த்து வைத்தால், நாளை அவன் பிள்ளைகளும் அவனை பார்த்துத் தான் படிக்கும். எதற்கு பெற்றோருக்கு செய்ய வேண்டும் ? நான் என் மனைவி மக்களை பார்த்துக் கொள்ளவே பணம் இல்லை. இதில் அப்பா அம்மாவை எப்படி வைத்து பார்ப்பது என்ற எண்ணம் அந்தப் பிள்ளையின் மனதில் ஆழத்தில் இருக்கும். பெற்றோரை பார்க்காமல் விடுவான். துன்பம் வந்து சேரும்.
ஐந்தாவது, விருந்தைப் போற்றியவனுக்கு, மறுமையிலும் நன்மை கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்று நம்புவது கடினமா? இல்லையே?
இப்படி பல காரணங்களை நாம் சிந்திக்க முடியும்.
எனவே, விருந்தைப் போற்றியதால் ஒருவன் துன்பப் பட்டு அவன் வாழ்க்கை பாழாகாது என்று கூறுகிறார்.
நாம் யதார்தமாக யோசித்துப் பார்ப்போம்.
விருந்தினர்களை போற்றி ஏழையாகி துன்பப் பட்டவர்கள் என்று யாரையாவது நமக்குத் தெரியுமா? கதையில், வாழ்வில் கேள்வி பட்டதுண்டா?
"உங்க அப்பா, தாத்தா எல்லாம் எங்க குடும்பத்துக்கு எவ்வளவோ செய்திருக்காங்க தம்பி ..." என்று விருந்தோம்பியவனின் பிள்ளையும், பேரப் பிள்ளையும் பயன் பெறுவார்கள்.
அதுதான் யதார்த்தம்.
சிந்திப்போம்.
அழகாக சொன்னீர்கள். அதற்காக விருந்தோம்பல் படாடோபமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தான் குடிக்கும் எளிய கூழே போதுமானது.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஇதெல்லாம் சும்மா சொல்கிற பேச்சு. அவ்வளவுதான்.
ReplyDelete