நாலடியார் - தவமும் பாவமும்
இருள் இருந்தால் அதை எப்படி போக்குவது?
அதை அடித்து விரட்ட முடியுமா? ஒரு பெட்டியில் போட்டு அடைத்து தூக்கி எறிந்து விட முடியுமா? இருளை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நம்மால் ஒளியை கொண்டு வர முடியும். இருள் அது பாட்டுக்கு ஒரு புறம் இருக்கட்டும். நாம் ஒரு விளக்கை கொண்டுவந்து ஏற்றினால், இருள் தானே ஓடி விடும். இருளை பிடித்து தள்ள முடியாது. ஒளியைக் கொண்டு வந்தால் அது தானே ஓடிவிடும்.
அது போல,
நாம் முன் செய்த பாவத்தை ஒன்றும் செய்ய முடியாது. செய்த நல்வினையும், தீ வினையும் பாவ புண்ணியமாக மாறி இந்தப் பிறவியில் இன்ப துன்பங்களைத் தரும்.
முன் செய்த நல் வினை, தீவினை
பாவ புண்ணியம்
இப்பிறவியில் இன்பம் துன்பம்
வந்து நிற்கும் பாவத்தை என்ன செய்வது? பிடித்துத் தள்ள முடியுமா? வேண்டாம் என்று பயந்து ஓட முடியுமா? முடியாது.
நாலடியார் சொல்கிறது
"எப்படி விளக்கின் முன்னால் இருள் நிற்காதோ அது போல தவத்தின் முன்னால் பாவம் நிற்காது"
என்று.
நம்மால் பாவத்தை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், தவம் செய்ய முடியும். தவம் செய்தால், பாவம் ஓடி விடும்.
சரி, இருள் விலகி விட்டதே என்று விளக்கை அணைத்தால் என்ன ஆகும்? ஓடிய இருள் உடனே வந்து விடும். அது போல, தவம் செய்வதை நிறுத்தினால் பாவம் மீண்டும் வந்துவிடும்.
விளக்கில் ஒளி குறைந்தால் இருள் வருவது போல, தவம் குறைந்தால் பாவம் வரும்.
பாடல்
விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post.html
(pl click the above link to continue reading)
விளக்குப் = ஒளி பொருந்திய விளக்கு
புக = வந்தவுடன்
இருள் மாய்ந்தாங் = இருள் மாய்ந்து ஆங்கு
கொருவன் = ஒருவன்
தவத்தின்முன் = தவத்தின் முன்
நில்லாதாம் பாவம் = பாவம் நிற்காது
விளக்குநெய் = விளக்கின் நெய்
தேய்விடத்துச் = குறைந்த போது
சென்றிருள் = சென்ற இருள்
பாய்ந்தாங்கு = பாய்ந்து அங்கு
நல்வினை = நல்லவினை
தீர்விடத்து = தீரும் இடத்தில்
நிற்குமாம் தீது. = நிற்குமாம் தீது
அதாவது, தவம் என்ற நல்வினை தீரும் இடத்தில், மீண்டும் பாவம் என்ற தீவினை வந்து நிற்கும்.
தவம் செய்வதை ஒருகாலும் நிறுத்தக் கூடாது என்பது கருத்து.
நல்ல காரியங்களை எப்போதோ ஒரு தரம், நம் வசதிக்கு செய்வதும், நிறுத்துவதும் கூடாது.
தமிழில் "கடைபிடிக்க வேண்டும்" என்று ஒரு சொல் வழக்கம் உண்டு.
கடைபிடித்தல் என்றால் கடைசிவரை பிடிக்க வேண்டும். விட்டுவிடக் கூடாது.
முன் பிறவி இருக்கிறதோ இல்லையோ, இந்தப் பாடலில் உள்ள உவமை நன்றாக இருக்கிறது.
ReplyDelete