Pages

Thursday, February 17, 2022

திருவாசகம் - குயிற் பத்து - மணிவாசகர் பாடிய மண்டோதரி

 திருவாசகம் - குயிற் பத்து - மணிவாசகர் பாடிய மண்டோதரி 


இது என்ன புதுக் கதை. 


மணிவாசகர் எதற்காக மண்டோதரியைப் பற்றி பாட வேண்டும்? 


ஒரு முறை மண்டோதரி சிவ பெருமானை நோக்கி தவம் இருந்தாள். சிவனும் அவளுக்கு காட்சி தந்தார். "என்ன வரம் வேண்டும்" என்று கேட்ட போது, "பெருமானே நீ குழந்தையாக வேண்டும். நான் உன்னை எடுத்து பிள்ளை போல் கொஞ்ச வேண்டும்" என்று வரம் கேட்டாள்.  அவளின் தாய்மை அப்படி. இறைவனையே குழந்தையாக பார்த்தது.


சிவனும், அவளுக்கு அந்த வரத்தைத் தந்தார். அவள் குழந்தை வடிவான சிவ பெருமானை எடுத்து கொஞ்சி மகிழ்ந்தாள் என்பது ஒரு கதை. 


அதை மணிவாசகர் குறிப்பிடுகிறார். 


"இந்த அழகிய உலகம் போற்றும் படி, நினைத்த உருவத்தை எடுக்கும் கடல் சூழ்ந்த இலங்கை வேந்தன் மனைவி மண்டோதரிக்கு பேரருள் இன்பம் அளித்த திருபெருந்துறை என்ற தலத்தில் எழுந்து அருளி இருக்கும் சிவனை, குயிலே நீ அவன் பெயரைச் சொல்லிக் கூவுவாய்" என்கிறார். 



பாடல் 


ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாம்

ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப்

பேரரு ளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்

சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். 



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_17.html


(please click the above link to continue reading)


ஏர்தரும் = அழகிய 


ஏழுல கேத்த = ஏழு உலகும் போற்ற 


எவ்வுரு வுந்தன் னுருவாம் = எந்த உருவும் தன் உருவமாய் ஆக்கிக் கொள்ளும் 


ஆர்கலி  = கடல் 


சூழ் = சூழ்ந்த 


தென் னிலங்கை  = தென் புறம் உள்ள இலங்கை 


அழகமர் வண்டோ தரிக்குப் = அழகு குடி கொண்டிருக்கும் மண்டோதரிக்கு 


பேரரு ளின்ப மளித்த = பேரருள் இன்பம் அளித்த 


பெருந்துறை மேய = திருப்பெருந்துறையில் உள்ள சிவனை 


பிரானைச் = என்னைப் பிரியாதவனை 


சீரிய வாயாற் = உன் சிறந்த வாயால் 


குயிலே = குயிலே 


தென்பாண்டி நாடனைக் கூவாய்.  = தென் பாண்டி நாட்டானை (வரக்) கூவுவாய் 


நாமெல்லாம் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்போம். 


மண்டோதரி, இறைவனை பிள்ளை போல் கொஞ்ச வேண்டும் என்று ஆசைப் பட்டாள். இறைவனை அப்படியே கொஞ்ச முடியுமா? எனவே அவனை பிள்ளையாக்கி கொஞ்சி மகிழ்ந்தாள். 


காரைக்கால் அம்மையாரை சிவ பெருமான் "அம்மை" என்று அழைத்தார். 


இங்கே, மண்டோதரி தாயாகி சிவனை கொஞ்சினாள்.


தாய்மைக்கு இணை ஏது? 


1 comment:

  1. "எவ்வுரு வுந்தன் னுருவாம்" என்பது யாரைக் குறிக்கிறது?

    ReplyDelete