Pages

Tuesday, February 22, 2022

நளவெண்பா - திருமாலை எங்கு காணலாம்?

 நளவெண்பா - திருமாலை எங்கு காணலாம்? 


வைகுந்தத்தில் காணலாம். சரி, வைகுந்ததுக்கு எப்படி போவது? யாருக்குத் தெரியும் அந்த வழி? 


அதைவிட எளிய வழி சொல்கிறார் புகழேந்தி, நளவெண்பாவில். 


"வேதங்களின் முகப்பில், முன்னால் காணலாம். அல்லது, ஆநிரைகளின் (பசுக் கூட்டத்தின்) பின்னால் காணலாம்" என்கிறார். யாரைக் காணலாம் என்றால் "ஆதி மூலமே என்று அழைத்த யானைக்கு முந்தி வந்து அருள் புரிந்த அந்த செந்தாமரை போன்ற திருவடி உடையவனை" என்கிறார். 


அற்புதமான பாடல் 


பாடல் 


மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்

காலிக்குப் பின்னேயும் காணலாம் - மால்யானை

முந்தருளும் வேத முதலே எனஅழைப்ப

வந்தருளும் செந்தா மரை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_22.html


(please click the above link to continue reading)



மூலப் = அனைத்துக்கும் மூலமான 


பழ = பழமையான 


மறைக்கு = வேதங்களுக்கு 


முன்னேயும் காணலாம் = முன்பும் காணலாம் 


காலிக்குப் = கால்நடைகளான பசுக் கூட்டத்தின் 


 பின்னேயும் காணலாம் = பின்னாலும் காணலாம் 


மால்யானை = அன்பு கொண்ட யானை (கசேந்திரன்) 


முந்தருளும் = முந்தி வந்து அருள் புரியும் 


வேத முதலே எனஅழைப்ப = வேதத்தின் முதலே (ஆதி மூலமே) என்று அழைக்க 


வந்தருளும்  = வந்து அருள் செய்யும் 


செந்தா மரை. = சிவந்த தாமரை போன்ற திருவடிகளை 


யானைக்கு இறைவன் பெயர் தெரியாது. யாருக்குத் தான் தெரியும்? இறைவனுக்கு யார் பெயர் சூட்டுவது?  அந்த யானை "ஆதி மூலமே" என்று அழைத்தது. 


கூப்பிட வேண்டும் என்று நினைத்தாலே போதுமாம், கூப்பிடுவதற்குள் ஓடி வந்து உதவி செய்வானாம். "முந்தருள்" முந்திக் கொண்டு வந்து அருள் செய்வாராம். 


பால் நினைந்து ஊட்டும் தாய் போல. குழந்தை பசித்து அழ வேண்டாம். அதுக்கு பசிக்குமே, பசி வேளை வந்து விட்டதே என்று நினைத்து பால் தரும் தாயைப் போன்றவன் இறைவன். 


"ஐயோ, அந்த உயிருக்கு ஒரு துன்பம் வந்து விட்டதே...அது என்னை அழைக்கப் போகிறதே...என்று அது அழைக்கும் முன்  ஓடிச் சென்று உதவுவானாம் "


அறிவு கொண்டு காண வேண்டுமா ? வேதத்தைப் படித்து, அது என்ன சொல்ல வருகிறது என்று அறிந்து கொள்ளலாம். ஞான யோகம் 


முடியவில்லையா? 


ஆடு மாடு மேய்பது போன்ற காரியங்களின் பின்னாலும் அவன் இருக்கிறான்.  கர்ம யோகம். 


அதுவும் முடியவில்லையா?  படிக்கவும் முடியாது, வேலை செய்யவும் தெம்பு இல்லையா? 


உயிர்களின் மேல் அன்பு கொண்டு, அவற்றிற்கு உதவும் அந்த கருணை புரியுமா? பக்தி யோகம். 


தேடல் தான் முக்கியம். தாகம்தான் முக்கியம். 


எங்கும் இருக்கும் அந்த அன்பின் வெளிப்பாடு...எப்படியும் கண்டு கொள்ளலாம். 




1 comment:

  1. ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என்ற மூன்றும் கலந்திருப்பது இனிமை. நன்றி.

    ReplyDelete