Pages

Wednesday, March 16, 2022

சிவ ஞான போதம் - நூல் அறிமுகம்

 சிவ ஞான போதம் - நூல் அறிமுகம் 


சைவ சமயத்தில் சாத்திரம் தந்த நால்வர், தோத்திரம் தந்த நால்வர் என்று நான்கு நான்கும் எட்டு பெரியவர்களை குறிப்பிடுவார்கள். 


தோத்திரம் தந்த நால்வர்கள் - அப்பர் என்ற திருநாவுக்கரசர், சுந்தரர், திரு ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர். 


சாத்திரம் தந்த நால்வர்கள் - மெய்கண்டத் தேவர், அருள் நந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார்.


இவர்களுள் மெய்கண்ட தேவர் அருளிய நூல் சிவ ஞான போதம். 


சிவஞான போதம் என்ற இந்த நூல் இரண்டு அதிகாரங்கள், நான்கு இயல்கள், பன்னிரண்டு சூத்திரங்களை உடையது.


இருப்பது    என்னவோ பன்னிரெண்டே சூத்திரங்கள். அதற்கு இரண்டு அதிகாரங்கள், நான்கு இயல்கள், இயலுக்கு மூன்று சூத்திரம் என்று பன்னிரண்டு சூத்திரங்கள். 


பொது அதிகாரம்

உண்மை அதிகாரம் 


என்று அதிகாரங்கள் உண்டு. 


பொது அதிகாரத்தில், பிரமாண இயல், இலக்கண இயல் என்று இரண்டு இயல்கள். 


உண்மை அதிகாரத்தில், சாதனை இயல், பயன் இயல் என்று இரண்டு இயல்கள் உண்டு. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_16.html


(click the above link to continue reading)


எதை  சொன்னாலும் அதற்கு ஒரு சான்று வேண்டும் அல்லவா? அது சரியா, தவறா என்று நிரூபணம் செய்ய வேண்டும் அல்லவா? சும்மா வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டுப் போக முடியுமா? நிரூபணம் இல்லை என்றால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம். 


இப்போதெல்லாம் அப்படி ஆகி விட்டது. கேட்டால், "அதெல்லாம் நம்பிக்கை பாற்பட்டது. கேள்வி கேட்கக் கூடாது. நம்ப வேண்டும்" என்கிறார்கள். எதை வேண்டுமானாலும் சொல்லி விட்டு, "எல்லாம் ஒரு நம்பிக்கைதான்" என்று சொல்லி விட்டு நழுவி விட முடியாது. 


பிரமாணம் என்றால் நிறுவுதல். ஒரு எடுகோளை (hypothesis ) எடுத்துக் கொண்டு அதை நிறுவுவது. பொதுவாக பத்து பிரமாணங்கள் உண்டு என்று சொல்கிறார்கள். அந்தப் பத்தையும் சுருக்கி மூன்று பிரமாணத்துக்குள் அடக்கி விடுகிறார்கள் நம் தர்க்க இயலார். 


காட்சிப் பிரமாணம்,


அனுமானப் பிரமாணம் 


ஆகமப் பிரமாணம் 


என்று மூன்று பிரமாணங்கள் உண்டு. 


ஒன்றை உண்மை என்று சொல்லுவதற்கு இவை பயன் படுகின்றன.


"அவன் அடித்ததை நான் கண்ணால் பார்த்தேன்" என்றால் அது காட்சிப் பிரமாணம். 


காட்சி என்றால் பார்ப்பது மட்டும் அல்ல. புலன்களால் அறியும் எல்லாமே காட்சிப் பிரமாணம் தான்.


பக்கத்து வீட்டில் நெய் விட்டு பொங்கல் செய்கிறார்கள். வாசம் இங்கே மூக்கை துளைக்கிறது. ம்ம்...நல்ல பொங்கல் வாசம் வருது" என்கிறோம். நேரில் பார்க்கவில்லை. வாசத்தை வைத்து "கண்டு" பிடிக்கிறோம். 


வெளியே ஒரு வண்டிச் சத்தம் கேட்கிறது. "...அப்பா வந்தாச்சு" என்று பிள்ளை ஓடுகிறது. அப்பா வந்ததை பார்க்கவில்லை. ஸ்கூட்டர் சப்தத்தை கொண்டு "கண்டு" பிடிக்கிறது. 


பிள்ளை அப்பாவின் முதுகில் ஏறிக் கொண்டு, கண்ணை மறைத்துக் கொண்டு, "யார் சொல்லு பார்ப்போம்" என்கிறது. தொடு உணர்ச்சியில் கண்டு கொள்ள முடிகிறது. 


எல்லாவற்றையும் புலன்களால் அரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. 


புகை இருந்தால் தீ இருக்கும் என்று அனுமானித்து அறியலாம். 


காலையில் எழுந்து பார்க்கிறோம். சாலை எல்லாம் ஈரமாக இருக்கிறது. "இராத்திரி மழை பொழிந்திருக்கிறது" என்று அனுமானிக்கிறோம். மழை பெய்ததை பார்க்கவில்லை. இருந்தும் மழை பெய்த உண்மையை அறிந்து கொள்கிறோம். எப்படி? அனுமானம். 


இதற்கு அனுமான பிரமாணம் என்று பெயர். 


சிவ ஞான போதம் என்ற இந்த நூல், பொது அதிகாரத்தில் வரும் முதல் இயலான அனுமான இயலில், உண்மையை அனுமான பிரமாணம் கொண்டு நிறுவுகிறது. 


அப்படி என்ன உண்மைகளை அது நிறுவுகிறது என்பதை வரும் நாட்களில் சிந்திக்க இருக்கிறோம். 


(புரிந்து கொள்ள எளிமையாக இருக்கிறதா? புரிவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? மாற்றம் ஏதேனும் செய்ய வேண்டுமா?)



1 comment:

  1. நூலாக்கத்தைக் குறித்த அறிமுகப் பகுதி எளிமையாகப் புரியும் வகையில் அமைந்துள்ளது. "ஆகமப் பரிமாணத்தை" குறித்த குறிப்புகளும் இடம் பெற்றிருந்தால் "பிரமாண இயல்" குறித்த அறிமுகம் முழுமையாக இருக்கும்.

    ReplyDelete