திருக்குறள் - உள்ளக் கெடும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்று முந்தைய குறளில் கூறினார்.
சொல்லுவது எளிது. எப்படி முடியும். .
ஒருவர் நமக்கு எவ்வளவோ உதவி செய்து இருக்கலாம். ஆனால், அவர் ஒரு தீங்கு செய்தால் அது தானே நமது உள்ளதில் நிற்கிறது.
"என்னை அப்படிச் சொல்லி விட்டானே"
"நான்னு தெரிஞ்சும் அப்படிஅவன் செய்யலாமா "
ஒரு துரோகம். ஒரு தவறு. ஒரு சுடு சொல். ஒரு முறை தவறிய நடத்தை அது தானே மனத்தை போட்டு அரிக்கிறது.
ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு போல், அந்த ஒரு வார்த்தை, செயல் முழுவதுமே கெடுத்து விடுகிறது அல்லவா?
ரொம்ப ஒன்றும் போக வேண்டாம், கோபத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏதோ வார்த்தை வந்து விழுந்து விடுகிறது. எவ்வளவு பெரிய விரிசல் வந்து விடுகிறது. மறக்க முடிகிறதா?
ஆனால் வள்ளுவர் எளிமையாக சொல்லிவிட்டார், "நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்று.
எப்படி என்று சொல்ல வேண்டாமா?
அதையும் சொல்லித் தருகிறார் இந்தக் குறளில்.
பாடல்
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_20.html
(Pl click the above link to continue reading)
கொன்றன்ன = கொல்வதற்கு ஒப்பான
இன்னா செயினும் = தீமையைச் செய்யினும்
அவர்செய்த = அவர் (அந்த தீமையைச் செய்தவர்) செய்த
ஒன்று நன்று = நல்லது ஒன்றை
உள்ளக் கெடும் = நினைக்கக் கெடும்.
நமக்கு ஒருவர் மிகப் பெரிய தீமையை செய்தாலும், அவர் நமக்கு முன் செய்த ஒரு நன்மையை மனதில் நினைக்க இந்த தீமையால் வந்த துன்பம், கெட்ட நினைவுகள் அழிந்து போகும் என்கிறார்.
அது எப்படி முடியும்?
சிந்திப்போம்.
முதலாவது, உலகில் எல்லோருக்கும் மிகப் பிடித்தமான ஒன்று எது என்று கேட்டால் அவர்கள் உயிர் தான் உயர்ந்தது. "உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்" என்று சொல்லுவதில் என்ன தெரிகிறது. நான் என் உயிரை மிக ஆழமாக நேசிக்கிறேன். அதே போல் உன்னையும் நேசிக்கிறேன் என்பது தானே.
அந்த உயிருக்கு கேடு விளைவிக்க ஒருவன் நினைத்தால் அவன் மேல் எவ்வளவு கோபம் வரும்? நம்மை கொல்ல வந்தவன் மேல் நமக்கு எவ்வளவு கோபமும், ஆங்காரமும், வெறுப்பும் வரும்? அது தானே அதிக பட்ச கோபமும் வெறுப்பும்.
அப்படிப் பட்ட துன்பம் ஒருவர் செய்தால் கூட. அதாவது எவ்வளவு பெரிய தீமை செய்ய முடியுமோ அதை செய்தால் கூட
இரண்டாவது, "அவர் செய்த ஒன்று நன்று உள்ளக் கெடும்" என்கிறார். அவர் நமக்கு எவ்வளவோ நன்மை செய்து இருக்கலாம். அதில் ஒன்றை நினைத்தால் போதும், எல்லாவற்றையும் நினைக்க வேண்டும் என்று இல்லை, ஒன்று போதும். அதை நினைத்தால் போதும், இந்த உயிரை எடுக்கும் அளவுக்கு செய்த தீமை மறந்து போகும், அல்லது பெரிதாகத் தெரியாது.
இப்பவும் நமக்கு குழப்பமாக இருக்கும்.
எப்படி முடியும் என்று.
பரிமேலழகர் இல்லை என்றால் இதெல்லாம் புரியவே புரியாது. நாம் எவ்வளவு சிந்தித்தாலும் அவர் சொன்ன உரை நம் புத்திக்கு எட்டவே எட்டாது.
அவர் சொல்கிறார், "முன்னால் என்ன சொன்னார் வள்ளுவர்? திணை துணையாகச் செய்தாலும் பனைத் துணையாக கொள்ள வேண்டும் " என்று சொன்னார் அல்லவா? அதன் படி, உனக்கு தீமை செய்த ஒருவர் உனக்கு முன் செய்த ஒரு உதவியை நினை. அதை பனையளவு நினை. எவ்வளவு பெரிய உதவி என்று நினை. அந்த உதவியின் பலனை நினை. அதனால் நீயும் உன் சந்ததியும் பெற்ற, பெறும், பெற இருக்கும் நன்மைகளை நினை. அப்படி நினைத்தால், இந்தத் தீமையின் அளவு சிறிதாகப் போய் விடும். நீ அந்தத் தீமையை எளிதில் மறக்க முடியும் என்கிறார்.
"தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். "
பரிமேலழகர் உரை.
பொதுவாக மக்கள் என்ன செய்கிறார்கள்?
நன்மையின் அளவை குறைத்து மதிப்பிடுகிறார்கள். தீமையின் அளவை பெரிதாக நினைக்கிறார்கள். அதனால் என்ன ஆகும், எந்நேரமும் மனதில் ஒரு வெறுப்பும், பகைமையுமே நிலவும்.
அன்பு மலராது. உறவு சிறக்காது. மனதில் அமைதி இருக்காது.
இல்லறம் பாழ் படும்.
அந்த ஒருவர் என்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்...பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம், அண்டை அயல், ஆசிரியர் என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
நல்லதை பெரிதாக நினைக்க, தீமைகள் மறைந்து போகும்.
"இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது" என்கிறார் பரிமேலழகர்.
அதாவது, அன்றே எப்படி மறப்பது என்பதற்கு ஒரு உபாயம், technique கூறப்பட்டது என்கிறார்.
எப்படி என்பதும் சொல்லியாகி விட்டது.
அதை கடைப் பிடிப்பதும், படிக்காமல் இருப்பதும் நம் பாடு.
No comments:
Post a Comment