Pages

Monday, April 18, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - அம்மா என்று அழுது

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - அம்மா என்று அழுது 


இருக்கின்ற நேரத்தை எல்லாம் ஏதேதோ செய்து கழித்து விட்டு, கடைசிக் காலத்தில், ஐயோ, அம்மா காலம் எல்லாம் போய் விட்டதே ...ஏதேதோ வெட்டிக் காரியங்கள் செய்து பொழுதைப் போக்கி விட்டேனே...இப்ப என்ன செய்வது" என்று கண் கலங்கி இருந்தால் என்ன செய்ய முடியும்?  


இறுதிக் காலம் என்று ஒன்று எல்லோருக்கும் வரும்தானே?  அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அது வருவதற்கு முன் செய்ய வேண்டிய நல்ல காரியங்களை செய்து விட வேண்டாமா? 


நல்ல காரியங்களை எப்போது செய்வது? நம் இறுதிக் காலம் நாளை வரலாம், அடுத்த வாரம், அடுத்த மாதம், வருடம், பத்து இருபது வருடம் கழித்து...எப்போது வேண்டுமானாலும் வரலாம். இன்னும் நாள் நிறைய இருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது. எனவே, இன்றே ஆரம்பித்து விட வேண்டும். 


நாளை ஆரம்பிப்பதை விட இன்று ஆரம்பித்தால் ஒரு நாள் கூடக் கிடைக்கும்தானே? 


ஒரு நல்ல காரியத்தை செய்து முடிக்க எவ்வளவு நாள் ஆகும்?


பரீட்சை யில் தேற வேண்டுமா ஒரு ஐந்து அல்லது ஆறு வருடம் ஆகலாம், நல்ல வீடு வாங்கு வாங்க வேண்டுமா ஒரு பத்து வருடம் ஆகலாம். காரியம் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்ந்ததோ, அந்த அளவுக்கு அது கடினமானதும் கூட. 


நூறு ம் மீட்டர் ஓடப் பழக வேண்டுமானால் ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் பழகி விடலாம். மாரத்தான் ஓடப் பழக வேண்டும் என்றால் எவ்வளவு நாள் ஆகும்? நூறு கிலோ மீட்டர் ஓடுவது என்றால், ஆயிரம் கிலோமீட்டர் ஓடுவது என்றால்? 


சொர்கத்துக்குப் போக வேண்டும் என்றால்? இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்றால்? எளிதான காரியமா? எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியை தள்ளிப் போடலாமா? இன்றே தொடங்க வேண்டாமா? அப்புறம் அழுது ஒரு புண்ணியமும் இல்லை. 


அடுத்தப் பிறவியில் என்னவாகப் பிறப்போமோ? மீண்டும் திருவாசகம் படிக்கும் வாய்ப்பு இருக்குமோ இல்லையோ. யாருக்குத் தெரியும். 


இதெல்லாம் நான் சொல்லவில்லை. மணிவாசகர் சொல்கிறார். 


பாடல் 




பெருமான் பேர் ஆனந்தத்துப் பிரியாது இருக்கப் பெற்றீர்காள்,

அரு மால் உற்றுப் பின்னை நீர், அம்மா! அழுங்கி அரற்றாதே,

திரு மா மணி சேர் திருக் கதவம் திறந்தபோதே, சிவபுரத்து,

திருமால் அறியாத் திருப் புயங்கன் திருத் தாள் சென்று சேர்வோமே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_18.html



(please click the above link to continue reading)



பெருமான் = பெருமான், சிவன் 


பேர் ஆனந்தத்துப் = பெரிய ஆனந்ததில் 


பிரியாது இருக்கப் பெற்றீர்காள் = எப்போதும் பிரியாமல் இருக்கப் பெற்றீர்கள் 


அரு மால் உற்றுப்  = அதன் அருமையை உணர்ந்து 


 பின்னை நீர் = பின்நாளில் நீங்கள் 


அம்மா! அழுங்கி அரற்றாதே, = அம்மா ! என்று அழுது அரற்றாமல் 


திரு மா மணி சேர்  = பெரிய மணிகள் கொண்ட 


 திருக் கதவம்  = கோவிலின் கதவுகள் 


திறந்தபோதே, = திறந்த போது 


சிவபுரத்து = சிவபுரத்தின் கோவில் கதவு திறந்த போது 


திருமால் அறியாத் = திருமால் அறியாத 


திருப் புயங்கன் = பாம்பை அணிந்த 


திருத் தாள் = திருவடிகளை 


சென்று சேர்வோமே. = சென்று சேர்வோமே 


இந்தப் பாடலின் நேரான அர்த்தத்தை மேலே பார்த்து விட்டோம். 


சில மறைமுகமான அர்த்தங்களை தெளிந்து கொள்வது நல்லது. 


இந்த சைவ வைணவ பகை என்பது மிக ஆழமானது. எல்லோர்க்கும் அவர்கள் கடவுள் பெரியவர் என்று சொல்லிக் கொள்ளவே ஆசையாக இருக்கும். அது தவறு இல்லை. அதற்காக மற்ற கடவுள்களை மட்டம் தட்ட வேண்டியது இல்லை. 


என் அம்மா எனக்கு அழகு என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. அதற்காக அடுத்தவனின் அம்மா அவலட்சணம் என்று ஏன் சொல்ல வேண்டும். 


ஏதோ அடிமட்ட பக்தர்கள் அறியாமையில், அதீத பக்தியில் சொல்லி விட்டார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஒருவருக்கு ஒருவர் மற்ற தெய்வத்தை குறை சொல்லி பாடியது மாதிரியே இருக்கும். 


இங்கும் கூட, "திருமால் அறியா" என்று ஒரு இடம் வருகிறது. 


பழைய கதை. திருமாலும், பிரமனும் சிவனின் அடி முடி தேடிச் சென்றார்கள், காண முடியவில்லை. எனவே, சிவன் எவ்வளவு பெரியவர் என்று சைவர்கள் கூறிக் கொள்வார்கள். 


மணிவாசகர் சொல்வாரா? ஞானத்தின் உச்சம் தொட்டவர். 


என்ன அர்த்தம்?


திருமால், திருமகளை மணந்தவர். 


பிரம்மா, கலைமகளை மணந்தவர். 


செல்வத்தாலும், கல்வி அறிவாலும் இறைவனைக் காண முடியாது.  பக்தி ஒன்றினாலேயே அவனை அடைய முடியும் என்று சொல்லுவதற்காக வந்த கதை அது. 


என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. தான தர்மம் செய்கிறேன், கோவில்களுக்கு நன்கொடை தருகிறேன். எனவே எனக்கு முக்தி கிடைக்கும் என்று நினைக்கக் கூடாது. 


எவ்வளவு படித்து இருக்கிறேன். தேவாரம், திருவாசகம், பிரபந்தம், வேதம், உபநிடதம் எல்லாம் கரைத்துக் குடித்து இருக்கிறேன். எனக்கு வீடு பேறு கட்டாயம் என்று நினைக்கக் கூடாது. 


அது ஒரு செய்தி. 


"திருக் கதவம் திறந்த போதே" என்றால் கோவில் கதவு திறந்தவுடன் முதல் ஆளாக உள்ளே போக வேண்டும் என்று அர்த்தம் அல்ல. 


அந்தக் கதவு எப்போதும் திறந்து தான் இருக்கும். 


நமக்கு போக நேரம் இருக்காது. நேரம் இருக்கும் போது உடல் ஒத்துழைக்காது. 


எப்படியும் போக முடியாமல் போகும். 


எனவே, இப்பவே அந்த வேலையை தொடங்கி விடுங்கள். இறைவனை நாடும் அந்த வேலையை இன்றே தொடங்கி விடுங்கள். 


ICU வில் படுத்துக் கொண்டு, drips ஏறும் போது, கண் கலங்கி, விட்டதைப் பார்த்து அழுது ஆகப் போவது என்ன?


பருவத்தே பயிர் செய்ய வேண்டும். 




No comments:

Post a Comment