சிவ ஞான போதம் - தொடங்கிய விதம்
உலகில் தோன்றியது எல்லாம் மறையும். தோற்றம் உண்டு என்றால் முடிவு உண்டு என்பது உறுதி. தோன்றி மறையும் எதுவும் நிரந்தரமானவை அல்ல. நேற்று இல்லாமல் இருந்தது, ,இன்று இருக்கிறது,நாளை மறுபடியும் இல்லாமல் போகும். இப்படி நிரந்தரம் இல்லாதவற்றைப் பற்றி அறிந்து என்ன பலன் என்று அதை விட்டுவிட்டு அழிவு இல்லாத, நிரந்தரமானவற்றை தேடத் தொடங்கினார்கள்.
அழிவு இல்லாத பொருள் எது?
https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_9.html
(click the above link to continue reading)
தோற்றம் உண்டு என்றால் அழிவு உண்டு. எனவே, தோன்றாத ஒன்று அழிவு அடையாது. எனவே, தோற்றம் என்று ஒன்று இல்லாமல், எப்போதும் இருப்பவை எவை என்று ஆராய முற்பட்டபோது, மூன்று விடயங்கள் தோற்றம் என்று ஒன்று இல்லாமல் எப்போதும் இருப்பவை என்று கண்டு கொண்டார்கள்.
அவைதான்
பதி, பசு, பாசம்.
இந்த மூன்றும் எப்போதும் இருப்பவை. தோன்றியவை அல்ல. எனவே அழியப் போவதும் இல்லை.
இதில் பதி என்பது இறைவன்.
பசு என்பது உயிர்களைக் குறிக்கும்.
பாசம் என்றால் என்ன? பாசம் என்றால் கயிறு. பிணைப்பது. இது சற்று விரிவாக பார்க்க வேண்டிய ஒன்று.
மூன்றும் நிரந்தரமானவை, தோற்றுவிக்கப்பட்டவை அல்ல என்று பார்த்தோம்.
உயிர்களை இறைவன் தோற்றுவிக்கவில்லை. என்று இறைவன் உண்டோ, அன்றே உயிர்களும் உண்டு.
"என்று நீ, அன்று நான்" என்பார் தாயுமானவர்.
இந்த உயிர்கள் ஆணவம் என்ற மலத்தில், இருளில், அழுக்கில் அழுந்திக் கிடக்கும். என்ன செய்வது என்று அறியாமல், அசைவு இல்லாமல் கிடக்கும். தாயின் வயிற்றில் உள்ள குழந்தை போல என்பார்கள். குழந்தைக்கு உயிர் இருக்கிறது. உண்கிறது. சீரணிக்கிறது. வளர்கிறது. அசைகிறது. ஆனால், என்ன செய்கிறோம் என்று அறியாமல் இருளில் கிடக்கிறது அல்லவா, அது போல உயிர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஆணவ மலத்தில் சிக்கிக் கிடக்கும்.
இதை ஆன்மாவின் கேவல நிலை என்பார்கள்.
எப்படி தாய் தன் கருவில் உள்ள குழந்தை மேல் கருணை கொண்டு அதற்கு வேண்டியதைச் செய்வாளோ, அது போல ஆணவ மலத்தில் சிக்கிக் கிடக்கும் உயிர்களுக்கு உதவும் பொருட்டு இறைவன் சிலவற்றைப் படைத்து அந்த உயிர்களுக்கு தருகிறான்.
அவற்றை தனு, கரண, புவன, போகம் என்று சொல்லுவார்கள்.
தனு என்றால் உடம்பு.
கரணம் என்றால் ஐந்து புலன்கள், மனம், சித்தம், அகங்காரம் என்ற கருவிகள்.
புவனம் என்றால் பூமி, இடம். உடம்பும், கருவிகளும் இருந்தால் போதுமா? அவை செயல் பட ஒரு இடம் வேண்டும் அல்லவா? எங்கிருந்து செயல்படுவது? அப்படி அவை செயல் படும் இடத்துக்கு புவனம் என்று பெயர்.
நீங்கள் இங்கு பிறக்க வேண்டும், இங்கு வாழ வேண்டும் என்று நிர்ணயம் செய்பவன் இறைவன்.
உடம்பு இருக்கிறது. கருவிகள் இருக்கின்றன. அவை செயல் படும் இடமும் ஆயிற்று. அவை எதோடு செயல்படும்? எதை பெறும் , எதை அனுபவிக்கும்?
அனுபவிக்கப் படும் பொருள்களுக்கு, அந்த அனுபவத்துக்கு போக்கியம் என்று பெயர்.
தனு - கரண - புவன - போக்கியம்.
இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த தனு, கரண, புவன போக்கியயங்களை இறைவன் மாயையில் இருந்து உருவாக்குகிறான் என்று சொல்கிறார்கள்.
உயிர்கள் வந்து விட்டன. உடம்பு, கருவி, இடம், அனுபவிக்கும் பொருள் எல்லாம் வந்தாகி விட்டது.
இதை உயிர்களின் சகல நிலை என்று சொல்லுவார்கள்.
இப்போது உயிர்கள் செயல்படத் தொடங்குகிறன.
அனுபவம் வரத் தொடங்குகிறது. இன்பம், துன்பம் தெரிகிறது. நல்லது, கெட்டது தெரிகிறது.
இந்த செயல்பாட்டை கர்மம் அல்லது கன்மம் என்று சொல்லுவார்கள்.
உயிர்கள் - ஆணவம் - மாயையில் இருந்து தோன்றிய கன்மம்.
இதுவரை பார்த்து விட்டோம்.
அனுபவங்கள் காரணமாக உயிர்கள் நல்லன, தீயனவற்றை செய்யத் தொடங்குகின்றன. அவற்றின் வினைகளுக்கு ஏற்ப இறைவன் அவைகளுக்கு அடுத்தடுத்து பிறவிகளைத் தருகிறான்.
ஆணவம் - மூல மலம்.
கன்மம் - உயிர்கள் செய்வது.
மாயை - தனு கரண புவன போகங்கள் உண்டாகி உயிர்களை செயல் பட வைப்பது.
இந்த ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் சேர்த்து பாசம் என்று சொல்லுவார்கள்.
இந்த மூன்றும் உயிர்களைப் பிணிக்கும் கயிறு போன்றவை.
பதி - இறைவன்
பசு - உயிர்கள்
பாசம் - ஆணவம்,கன்மம், மாயை என்ற மூன்றும்.
உயிர்கள் அனுபவத்தால் நல்லது கெட்டதை அறிந்து, இறைவனை நோக்கிப் பயணப்படும்.
கன்மம், மாயை என்ற மலங்களினால் உயிர்கள் ஆணவம் என்ற மலத்தை தாண்டி இறைவனை அடையும்.
விரலில் மோதிரம் மாட்டிக் கொண்டு கழட்ட முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? அந்த மோதிரம் இருக்கும் இடத்துக்கு சற்று முன்னால் ஒரு நூலை இறுக்கிச் சுற்ற வேண்டும். விரலின் பருமன் சற்று சுருங்கும். மோதிரத்தை மெல்ல மெல்ல நகர்த்தி கழட்டி விடலாம். அப்புறம் அந்த நூலையும் தளர்த்தி, தூக்கிக் போட்டு விடலாம்.
கன்மம், மாயை என்ற நூலைச் சுற்றி, ஆணவம் என்ற மோதிரத்தை கழட்டிய பின் நூலை தூக்கி எறிவது போல கன்மத்தையும், மாயையையும் தூர எறிந்து விடலாம்.
இதைதான் மல பரிபாகம் என்பார்கள். அதை பின்னால் பார்ப்போம்.
பதி - இறைவன் என்றும் உள்ளவன்.
பசு - உயிர்கள் என்றும் உள்ளவை.
பாசம் - ஆணவம், கன்மம், மாயை - என்றும் உள்ளவை.
இதுதான் அடிப்படை சிந்தாந்தம்.
இந்த உலகம் எப்படி வந்தது? நாம் எப்படி வந்தோம்? என்ன செய்கிறோம்? எப்படிச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? வாழ்வின் நோக்கம் என்ன என்று ஆழமாக விளக்கும் சித்தாந்தம்.
இது அடிப்படை சிந்தாந்தம். இதுவே இப்படி இருக்கிறது என்றால் மேலே போகப் போக எவ்வளவு இருக்கும்.
நூலோடு சேர்த்து அவற்றையும் அறிந்து கொள்வோம்.
அதை விட என்ன வேலை?
No comments:
Post a Comment