யாப்பிலக்கணம் - ஒரு அறிமுகம்
கடந்த ஐந்து வருடங்களாக இந்த பதிவை எழுதி வருகிறேன். தமிழ் இலக்கியத்தில் இருந்து எனக்குப் பிடித்த பாடல்களை பகிர்ந்து வருகிறேன்.
பாடல்கள் என்று சொல்லும் போது, அந்தப் பாடல்களுக்கு பின்னால் ஒரு இலக்கணம் இருக்கிறது.
ஐயோ, இலக்கணமா என்று பயப்படத் தேவையில்லை. தமிழ் இலக்கணம் என்பது மிக மிக சுகமானது, சுவையானது, சுவாரசியமானது.
அட,இது இப்படியா என்று உங்கள் முகத்தில் ஒரு புன்னகை வரவழைக்கும்.
நாம் இலக்கணத்தை சூத்திரம், நூற்பா என்று அணுகாமல், வேறு விதமாக அணுகுவோம்.
தமிழ் பாடல்களை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது? பாடல்கள் படிக்க சுகமாக இருக்கின்றன. ஆனால், மனதில் நிற்க மாட்டேன் என்கிறது. எப்படி அதை மனதில் நிறுத்துவது?
https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_23.html
(pl click the above link to continue reading)
உதாரணமாக
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
என்ற தேவார பாடலை எப்படி மனதில் இருத்திக் கொள்வது?
எப்படி என்று பார்ப்போம்.
நான்கு வரிகளிலும் உள்ள முதல் வார்த்தையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
சொற்றுணை
பொற்றுணைத்
கற்றுணைப்
நற்றுணை
இரண்டாவது எழுத்து 'ற்' என்று எல்லா வரியிலும் வரும். முதல் வரியில் முதல் சொல் தெரிந்தால் போதும், மற்ற வரிகளில் உள்ள முதல் சொல் எப்படி இருக்கும் என்று தெரியும்.
அது மட்டும் அல்ல, எந்த வரியில் முதல் சொல் தெரிந்தாலும் போதும், மற்ற வரிகளின் முதல் சொல் எப்படி இருக்கும் என்று நம்மால் உணர முடியும்.
அது மட்டும் போதுமா? அதை வைத்துக் கொண்டு எப்படி ஞாபகம் வைக்க முடியும்?
ஒவ்வொரு வரியிலும் முதல் சொல்லின் முதல் எழுத்தையும், மூன்றாம் எழுத்தின் முதல் எழுத்தையும் பாருங்கள்
சொற்றுணை - சோதி
பொற்றுணைத் - பொருந்தக்
கற்றுணைப் - கடலிற்
நற்றுணை - நமச்சி
சொ - சோ
பொ - பொ
க - க
ந - ந
ஒத்து வருகிறதா?
சரி, இது மட்டும் போதுமா?
ஒவ்வொரு வரியையும் பாருங்கள். சரியாக நாலு வார்த்தைதான் இருக்கும். அதை சீர் என்று சொல்லுவார்கள்.
வரியை, அடி என்று சொல்லுவார்கள்.
நான்கு அடி, அடிக்கு நாலு சீர்.
இது ஒரு கட்டமைப்பு.
இதில் மட்டும் தான் அப்படியா? எல்லா பாடல்களும் அப்படித்தான் இருக்குமா?
ஒரு பிரபந்த பாடலைப் பார்ப்போம்.
ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.
ஒவ்வொரு அடியிலும், முதல் சீரின் இரண்டாவது எழுத்தைப் பாருங்கள்
ஊர்
பார்
கார்
ஆர்
என்று வரும்.
முதல் சீரையும், மூன்றாவது சீரையும் பாருங்கள். அவற்றின் முதல் எழுத்துகள் என்ன?
ஊரில்லேன் - உறவு (ஊ, உ)
பாரில் - பற்றினேன் (பா, ப)
காரொளி - கண்ணனே (கா, க)
ஆரிடர் - அரங்கமா (ஆ, அ)
இங்கே ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர்கள். ஒரு சின்ன மாற்றம்.
ஆனால், ஒரு அடியில் ஐந்து சீர் என்றால் எல்லா அடியிலும் ஐந்து சீர் இருக்க வேண்டும். ஒன்றில் ஐந்து, இன்னொன்றில் எட்டு, மூன்றாவது அடியில் மூணு சீர் என்றெல்லாம் இருக்காது.
இப்படி ஒரு ஒழுங்கு முறை இருக்கிறது.
இதற்கு யாப்பிலக்கணம் என்று பெயர்.
யாக்குதல் என்றால் கட்டுதல். ஒரு பாடலை எப்படி கட்ட வேண்டும் என்று சொல்லும் இலக்கணம்.
இந்த உடம்புக்கு யாக்கை என்று பெயர்? கை, கால், மூக்கு என்று வைத்து கட்டப்பட்டதால் இது யாக்கை. அப்படி கட்டப்பட்ட இந்த உடல் ஒரு நாள் சரிந்து விழும் என்பதால் சரீரம்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
ஒரு செய்யுளை எப்படி கட்டுவது? எதை எல்லாம் வைத்து கட்டுவது?
இதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
யாப்பிலக்கணம் தெரிந்து கொண்டால், கவிதையின் சுவை பன்மடங்கு கூடும்.
இசை ஞானம் எதுவும் இல்லாமலும் இசையை இரசிக்க முடியும். .
ஆனால், இராகம், தாளம், சுருதி, பாவம், சங்கதி, இலயம் என்று எல்லாம் தெரிந்தால் அதே இசையை நாம் இன்னும் பலமடங்கு இரசிக்க முடியும் அல்லவா?
கஷ்டம் இல்லமால் சுகமாக யாப்பிலக்கணம் படிப்போமா?
அடடே, யாப்பிலக்கணமே கற்றுத்தரப் போகிறீர்களா? கடினமான காரியம் அல்லவா? செய்யுங்கள். எல்லாருமே பயன்பெறலாம்.
ReplyDeleteஐயையோ..அப்படி ஒரு எண்ணமே இல்லை. யாப்பிலக்கணம் கற்றுத் தரும் அளவுக்கு எனக்கு தமிழ் அறிவு கிடையாது. நான் இரசித்ததை, எனக்குத் தெரிந்ததை எளிய முறையில் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. அவ்வளவுதான். என் தமிழ் என்பது ஒரு மழலைத் தமிழ் போன்றது. தெரிந்து கொள்ளும் ஆர்வம் நிறைய உண்டு. வாசிப்பு கொஞ்சம் உண்டு. அவ்வளவுதான்.
Deleteமிக்க நன்றி. யாப்பிலக்கணம் அறிய ஆவலாக உள்ளோம். எளிய முறையில் விளக்கவும்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி.தொடர கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDelete